Last Updated : 26 Jan, 2018 10:48 AM

 

Published : 26 Jan 2018 10:48 AM
Last Updated : 26 Jan 2018 10:48 AM

சைபர் கிரைமிலிருந்து ஓர் உபயம்!

ணையம் மூலம் பலவிதமான மோசடி நடப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய மோசடி வலையில் சிக்கி ஏமாந்தவர்களின் கதைகளையும் கேட்டிருக்கலாம். இணைய மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்காகச் சொல்லப்படும் எச்சரிக்கை வழிமுறைகளும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இத்தகைய விழிப்புணர்வு அவசியமான ஒன்றுதான். இணைய மோசடிகளைக் கண்டறிவதில் போதுமான ஆற்றல் இருக்கிறது என நீங்கள் உறுதியாகச் சொல்ல முடியுமா? இதற்கு உங்கள் பதில் எதுவாக இருந்தாலும் கவலை வேண்டாம். மோசடிகளைக் கண்டறிய ஆற்றல் இருக்கிறதா என நீங்கள் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம். இந்தச் சோதனையை ‘டேக் பை’ எனும் விழிப்புணர்வு இணையதளம் வழங்குகிறது.

இணைய மோசடிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பிரிட்டன் அமைப்பு ஒன்றால் இந்தத் தளம் நடத்தப்படுகிறது. இணைய மோசடியைக் கண்டறியக்கூடிய புத்திசாலி என நினைக்கிறீர்களா என்ற கேள்வியோடு இணையவாசிகளை மோசடிகள் தொடர்பான சோதனையை எதிர்கொள்ள அழைக்கிறது இந்தத் தளம். இந்தச் சோதனையில் வரிசையாக ஐந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. அந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.

பொதுவாக மோசடி நபர்கள், இமெயில் அல்லது குறுஞ்செய்தி மூலம்தான் வலை விரிக்கின்றனர். இவர்கள் பின்பற்றும் உத்திகளும் பொதுவானவைதாம். வங்கி அல்லது நிதி அமைப்புகளிடமிருந்து வந்திருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் மெயில்களை அனுப்பி, பாஸ்வேர்டு அல்லது வங்கிக் கணக்கு உள்ளிட்ட ரகசிய விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு கோருகின்றனர். பல நேரங்களில் இந்த விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கெனத் தனியே ஒரு இணைப்பை கிளிக் செய்யவும் தூண்டுகின்றனர். வங்கி அல்லது நிதி அமைப்பின் அதிகாரபூர்வ இணையதளம்போலவே தோற்றம் தரக்கூடிய அந்தத் தளம், ரகசியத் தகவல்களைத் திருடுவதற்கென அமைக்கப்பட்ட போலி தளம் என்பதை அறியாமல் அதில் விவரங்களை உள்ளீடு செய்தால், விஷமிகள் அதைக் கொண்டு பணத்தைச் சுருட்டி விடுவார்கள்.

இது மட்டுமல்ல; உங்களுக்குப் பணம் வந்து சேர்ந்திருக்கிறது அல்லது உங்கள் கணக்கிலிருந்து பணம் களவாடப்பட்டு விட்டது என்று வங்கியிலிருந்து செய்தி வந்திருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியும் தகவல்களைச் சேகரிக்க முயல்கின்றனர். பல நேரங்களில் அப்படியே கணக்கிலிருந்து பணத்தை மாற்றியும் ஏமாற்றுகின்றனர்.

இத்தகைய மோசடி சூழல் தொடர்பான கேள்விகள்தாம் வரிசையாக கேட்கப்படுகின்றன. உதாரணத்துக்கு முதல் கேள்வி:

“உங்கள் கணக்கில் மோசடி நடந்திருப்பதாக அறிகிறோம். இது பற்றி நாங்கள் விசாரிக்கிறோம். எஞ்சிய தொகையைக் கீழே உள்ள பாதுகாப்பான கணக்குக்கு மாற்றவும். உங்கள் கணக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகு முழுத் தொகையையும் உங்கள் கணக்குக்கு மாற்றிவிடுவோம்”.

இப்படி ஒரு செய்தி உங்கள் வங்கியிடமிருந்து வந்திருப்பதுபோல தோன்றச் செய்தால், என்ன செய்வீர்கள்? பணத்தை மாற்றுவீர்களா என்பதுதான் கேள்வி. இல்லை, மாற்ற மாட்டேன் அல்லது ஆம், மாற்றுவேன் என்றே இரண்டு விதமான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து தேர்வுசெய்த பிறகு, உங்கள் பதிலுக்கு ஏற்ப விளக்கம் அளிக்கப்படுகிறது. உங்கள் பதில் சரி அல்லது தவறு எனக் குறிப்பிடப்பட்டு, வங்கிகள் ஒரு போதும் இதுபோல பணத்தை மாற்றுமாறு கேட்பதில்லை. எனவே இது மோசடி மெயில் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

உங்கள் இமெயில் கணக்கில் சந்தேகப்படும்படியான செயல்கள் இருக்கின்றன, எனவே, கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்கள் கணக்கைப் பாதுகாக்கவும் எனும் மெயில் வந்தால் என்ன செய்வீர்கள் என்பது இரண்டாவது கேள்வி. எதிர்பாராத விதமாக வரும் எந்த மெயில் இணைப்பையும் ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். ஏனெனில், இதுவும் மோசடி உத்தி என்று பதில் அளிக்கப்படுகிறது.

இப்படி வரிசையாக கேள்விகளுக்குப் பதில் அளிப்பதன் மூலம் மோசடி நோக்கத்தோடு விரிக்கப்படும் இணைய வலையை நம்மால் அடையாளம் காண முடிகிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அது மட்டுமல்ல; இதற்கான விளக்கத்தைப் படிக்கும்போது, இணைய மோசடி தொடர்பாக ஏமாற்றுக்காரர்கள் பின்பற்றும் வழக்கமான உத்திகளையும் தெரிந்துகொள்ளலாம்.

Take_Five_logo_Endorsement_RGB

பிரிட்டனில் உள்ளவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இணையதளம் என்றாலும், இணைய மோசடிக்கான உத்திகள் உலகம் முழுவதும் ஒரேவிதம்தான். எனவே, எந்த நாட்டு இணையவாசிகளும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளித்து விழிப்புணர்வு நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்தச் சோதனை தவிர, இணைய மோசடிகள் தொடர்பான விரிவான ஆலோசனைகளும் இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன. போன் மூலம் மோசடி, இமெயில் மூலம் மோசடி, குறுஞ்செய்தி மோசடி என இணைய மோசடிகளைப் பட்டியலிட்டு, அவை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. முக்கியமாக இவற்றில் எல்லாம் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரகசிய பின் எண்களை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது, பாஸ்வேர்டு விவரங்களைத் தேவையில்லாத இடங்களில் சமர்ப்பிக்கக் கூடாது போன்ற பொதுவான ஆலோசனைகளைப் பெரும்பாலானோர் அறிந்திருந்தாலும், மோசடி நபர்கள் இணையவாசிகள் கண்ணில் மண்ணைத் தூவும் வகையில் வலை விரித்துக் காத்திருக்கின்றனர். பல நேரங்களில் யோசிக்க வாய்ப்புக் கொடுக்காமல் உடனடியாகச் செயல்படும் நிர்பந்தத்தை உண்டாக்கி ஏமாற்றுகின்றனர்.

இத்தகைய வலையில் சிக்காமல் இருப்பதற்குத் தேவையான விழிப்புணர்வுத் தகவல்களை இந்தத் தளம் வழங்குகிறது. இணையம் மூலமான நிதி மோசடிகள் அதிகரித்துவரும் நிலையில், இணையப் பாதுகாப்புக்காக அனைவரும் அறிய வேண்டிய அடிப்படைத் தகவல்களை எளிய முறையில் இந்தத் தளம் வழங்குகிறது. இணையதள முகவரி:

https://takefive-stopfraud.org.uk/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x