Published : 26 Jan 2018 10:41 AM
Last Updated : 26 Jan 2018 10:41 AM
த
மிழர்களின் மிகப் பழமையான தோல் இசைக் கருவிகளில் ஒன்று பறை. இது தமிழர்களின் தொல்குடி அடையாளங்களில் ஒன்றாகவும் தோலிசைக் கருவிகளின் தாய் என்றும் பாவிக்கப்படுகிறது. தொல்காப்பியர், திணைக்குரிய முக்கியமான பொருட்களில் பறையையும் குறிப்பிடுகிறார் என்பதிலிருந்தே இதன் தொன்மையைப் புரிந்துகொள்ளலாம். ஐந்திணைகளிலும் பறையிசைத்த வரலாறு பதிவாகியுள்ளது. சங்க இலக்கியங்களிலும் பறை பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்ட வடிவமான சட்டகத்தில் புளியங்கொட்டை பசையைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்து ஒட்டி பறை உருவாக்கப்படுகிறது. இந்தக் கருவியை இசைக்க இருவிதமான குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. மூங்கிலால் செய்யப்பட்ட 'சிம்புக்குச்சி' அல்லது சுண்டுக்குச்சியை இடது கையில் வைத்திருக்க வேண்டும். பூவரசங்கம்பால் செய்யப்பட்ட அடிக்குச்சி அல்லது உருட்டுக்குச்சியை வலது கையில் வைத்துக்கொண்டு இசைக்க வேண்டும்.
இசைக் கருவியாக மட்டுமல்லாமல் செய்தி அறிவிப்பு சாதனமாகவும் பயன்படுத்தப்பட்டது பறை. பறையடித்துச் செய்தி சொல்லல் என்பது பண்டைய தமிழர்களின் முக்கியத் தகவல் பரப்பு முறையாக இருந்தது.
அறை என்றால் பேசு என்றொரு பொருள் உண்டு. அதிலிருந்துதான் பறை என்கிற வார்த்தை பிறந்தது என்கிறது நன்னூல். தமிழிலிருந்து உருவான மலையாள மொழியில் சொல் அல்லது பேசு என்பதைக் குறிக்க ‘பறை’ என்ற சொல்தான் இன்றைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
உழைக்கும் மக்களின் இசைக் கருவி என்று பெயர்பெற்றது பறை. ஆதி காலம்தொட்டுப் பாட்டாளிகளால் இசைக்கப்படுகிறது. பறை இசைத்துக்கொண்டே ஆடுவது தமிழர் மரபு. பறையாட்டம் என்பதும் தமிழரின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். உழவர்களும் உடலுழைப்பைச் செலுத்துபவர்களும் தங்கள் கவலையை மறந்து ஆடிப் பாட உதவிய பறையிசை, தமிழர்களிடையே சாதீயம் புகுந்ததிலிருந்து கீழானதாகப் பார்க்கப்பட்டது. பறை இசைப்பது ஒரு குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தொழிலாகவும் ஒதுக்கப்பட்டது. மரணத்தின்போது பறை இசைப்பது கட்டாயமாக்கப்பட்டது.
பறையின் மீது சுமத்தப்பட்ட சாதீய இழிவு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக விலகிவருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்கான அடையாளமாகப் பறை இன்று முன்னிறுத்தப்படுகிறது. தமிழகத்தில் பறையிசையையும் ஆட்டத்தையும் பயிற்றுவிக்கும் அமைப்புகள் பரவலாகக் கவனம்பெற்று வருகின்றன. பறையிசைக்கவும் ஆடவும் விரும்பிக் கற்றுக்கொள்வோர் அதிகரித்துவருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT