Published : 19 Jan 2018 10:55 AM
Last Updated : 19 Jan 2018 10:55 AM
போ
ரில் வென்ற அரசனின் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் வாசிக்கப்பட்ட இசைக் கருவிகளில் முதன்மையானது கொம்பு. தூம்பு வகை இசைக் கருவியான கொம்பு, பண்டைத் தமிழர் களின் காற்றுக் கருவிகளில் ஒன்று.
அந்தக் காலத்தில் மன்னன் அரண்மனையைவிட்டு வெளியே வந்தாலும் போரில் வெற்றிகொண்டாலும் கொம்பு ஊதப்பட்டுள்ளது. அதேபோல் அக்காலக் கோயில் விழாக்கள், திருமணங்கள் ஆகிய முக்கிய நிகழ்ச்சிகளிலும் கொம்பு முதலில் வாசிக்கப்பட்டது. இந்தக் காரணத்துக்காகவே விழாக்களில் முதல் வரிசையில் கொம்பு இடம்பெற்று வந்தது.
கொம்பு இசைக் கருவி சுமார் நான்கு முதல் ஆறு அடிவரையிலானது. இந்த இசைக் கருவியை வாசிக்கும் கலைஞர்கள் தங்களுடைய முழுப் பலத்தைப் பயன்படுத்தி அடிவயிற்றிலிருந்து ஊதுவதன் மூலம் யானை பிளிறுவது போன்ற ஓசை கொம்பு இசைக் கருவியிலிருந்து உண்டாகிறது. இந்த ஓசை காற்றில் அதிர்வலைகளை உண்டாக்குகிறது. தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவியான கொம்பு இன்றைக்குச் சில கோயில் விழாக்களில் மட்டும்தான் வாசிக்கப்படுகிறது. இந்த இசைக் கருவியை வாசிக்கும் கலைஞர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.
கொம்பு உட்பட மறைந்துவரும் தமிழகத்தின் பாரம்பரிய இசைக் கருவிகளை மீட்டெடுத்துப் பலருக்கும் கற்றுத் தந்து வருகிறார் கோசை நகரான் நாட்டுப்புறக் குழுவின் ஆசிரியர் சிவகுமார். “இறந்த விலங்குகளின் கொம்புகளில்தான் முதலில் கொம்பு இசைக் கருவி செய்யப்பட்டது. அதனால்தான் இதற்குக் கொம்பு என்று பெயர் வந்தது. மூன்றாயிரம் ஆண்டுகளாகக் கொம்பு வாசிக்கப்பட்டு வந்துள்ளது.
பொதுவாக அறிவிப்பு இசைக் கருவியாகத்தான் கொம்பு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இரைச்சல் அதிகமில்லாத இடங்களில் கொம்பின் இசை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுவரை கேட்கக்கூடிய ஆற்றல் கொண்டது. விலங்குகளின் கொம்புக்கு அடுத்தபடியாக மூங்கில் மரத்தில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது வெண்கலம், பித்தளை போன்ற உலோகங்களில் கொம்பு உருவாக்கப்படுகிறது. வெண்கல வார்ப்பில் உருவாக்கப்பட்ட கொம்பு இசைக் கருவியிலிருந்து வரும் ஒலி பித்தளை உலோகம் ஏற்படுத்தும் ஒலி அதிர்வுகளைவிட அதிக அளவில் இருக்கும்” என்கிறார் சிவகுமார்.
இரண்டு பாகங்களைப் பொருத்தி வாசிக்கப்படும் கொம்பு ஆங்கில எழுத்தான ‘s’ வடிவத்தில் வைத்து வாசிக்க முடியும். அதேபோல் அந்த ‘s’ வடிவத்தையே மேல் நோக்கித் திருப்பி அரைவட்ட வடிவிலும் வாசிக்க முடியும். இசைக் கலைஞர்கள் வசதிக்கேற்ற வடிவில் கொம்பு இசைக் கருவியை வாசிக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT