Last Updated : 22 Dec, 2017 11:32 AM

 

Published : 22 Dec 2017 11:32 AM
Last Updated : 22 Dec 2017 11:32 AM

துப்பறியும் ராம் சேகர் 14: ரங்கராஜ் எங்கேதான் போனார்?

இன்னும் அந்தப் பகுதிக்கு மாநகராட்சி ஊழியர்கள் வந்து சேரவில்லை. தெருவெல்லாம் ஆங்காங்கே சிதறிய தாள்கள். தீபாவளி வெடிகளின் மீதம். தீபாவளி நேற்றே முடிந்துவிட்டது என்றாலும் அன்றும்கூட சில வீடுகளில் வெடி வைத்துக்கொண்டிருந்தார்கள்.

கலக்கத்துடன் 60 வயது மதிக்கத்தக்கப் பெண்மணி கூறினார். “என் கணவரின் பெயர் ரங்கராஜ். அவரை நேற்று மதியத்திலிருந்து காணோம். நீங்கதான் அவரைக் கண்டுபிடிச்சுக் கொடுக்கணும்” என்று கூறியபோது அந்த அம்மாவின் குரலில் நடுக்கம்.

“கவலைப்படாதீங்க. யாராவது சொந்தக்காரங்க வீட்டுக்கோ நண்பர்கள் வீட்டுக்கோ போயிருப்பார்” என்றார் இன்ஸ்பெக்டர் விக்ரம்.

“எங்களுக்கு ஒரே மகன்தான். அவன் அமெரிக்காவில் இருக்கிறான். அவனுக்கோ எனக்கோ இங்கே யாரும் நண்பர்கள் இல்லை. ஊரில்தான் இருக்கிறார்கள். அங்கே ஃபோன் பண்ணிக் கேட்டேன். வரவில்லையாம்”.

“அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க” என்று ராம்சேகர் கேட்க, அந்த அம்மா, தன் வீட்டின் உள்ளே இருந்து ஒரு ஒளிப்படத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். “இவர்தான் என் கணவர். ரொம்ப நல்லவர். ஆனால், பிறர் தப்பு செய்தால் பொறுத்துக்க மாட்டார், கோபப்படுவார்”.

“சமீபத்தில் யாரிடமாவது கோபப்பட்டாரா?” என்று கேட்டார் ராம்சேகர்.

கொஞ்ச நேரம் மவுனமாக இருந்தார் அவர். பிறகு அந்த வீட்டுக்கு வலது பக்கத்திலிருந்த அண்டை வீட்டைக் காட்டினார். “அந்த வீட்டுக்காரங்களுக்கும் என் கணவருக்கும் ஆகாது. அவங்க வீட்டிலே எல்லா ஆண்களும் பீடி பிடிப்பாங்க. அந்தப் புகை எங்க வீட்டுக்கு வரும். அவங்க வீட்டிலே ரொம்ப சத்தமா டி.வி. பார்ப்பாங்க. நடுராத்திரியைத் தாண்டிக்கூடச் சத்தம் கேட்கும். இதையெல்லாம் தட்டிக் கேட்கப் போய், நாலு நாளைக்கு முன்னே பெரிய சண்டையாகிடுச்சு”.

அந்தப் பக்கமாக வந்த இருவரை விசாரித்தார் ராம்சேகர்.

முதலில் அந்தத் தெருவில் வீடுகளுக்கு நாளிதழ்களைப் போடும் இளைஞனிடம் விசாரணை நடைபெற்றது.

“ரங்கராஜ் சார் ரொம்ப நல்லவங்க. நேத்து காலையிலேகூட எனக்கு இனிப்பு கொடுத்தார். தீபாவளி வாழ்த்து சொன்னார். எதையும் சரியா திட்டமிடுவார். அவர் எங்கோ வெளியே செல்ல முதலிலேயே திட்டமிட்டார்னுதான் தோணுது. ஏன்னா நேத்தி எங்கிட்டே தெளிவா சொன்னார். “நாளைக்கு நீ பேப்பர் போட வேண்டாம்”னு. நானும் ஒத்துக்கிட்டேன். ஆனா, ‘அவர் மட்டும்தான் ஊருக்குப் போனார், அவர் சம்சாரம் இங்கேயேதான் இருக்கார்’ என்பதெல்லாம் எனக்கு இப்போதான் தெரியும். அவங்க பக்கத்து வீட்டுக்காரங்க எனக்கு ஒரு விதத்தில் உறவு முறை. அவங்க தங்கமான மனுஷங்க”.

அடுத்ததாக அந்தத் ​தெருவில் காய்கறி விற்கும் பெண்மணியிடம் சில கேள்விகள் கேட்டார் ராம்சேகர்.

“அவர் ரொம்ப நல்ல ஆளு சார். பேரம் பேசவே மாட்டார். ஆனா, எடை சரியா போடணும்னு குறியா இருப்பாரு. என் மகள் கல்யாணத்துக்குக்கூட எனக்கு ஆயிரம் ​ரூபாய் கொடுத்தாரு. நேற்றுகூட அடுத்த இரண்டு நாட்களுக்கான காய்கறிகளை வாங்கினாரு சார். அந்தப் பக்கத்து வீட்டுக்காரங்களை அவருக்குப் பிடிக்காது. எனக்கும் பிடிக்காது. அவங்க ஒரேடியா நியாயமில்லாம பேரம் பேசுவாங்க”.

“அந்தப் பக்கத்து வீட்டுக்காரங்களை விசாரிக்கப் போகலாமா?” என்றபடி கிளம்பினார் இன்ஸ்பெக்டர் விக்ரம்.

“ஒரு நிமிஷம். நாம விசாரணை நடத்தின ரெண்டு பேர்லே ஒருத்தரை மறுபடியும் கொஞ்சம் குடையணும். ஒரு பெரிய பொய்யை நாம் அப்படியே விட்டுடக் கூடாது” என்றார் ராம்சேகர்.

அது என்ன பொய், யார் கூறியது? ராம்சேகரின் நெருடல் எது? யோசியுங்கள்.

(துப்பறியலாம்)

சென்ற வார விடை

‘முகத்தில் தழும்பு மனதில் காயம்’ என இன்ஸ்பெக்டர் விக்ரம் கூறியதை வைத்து, ராம்சேகர் என்ன புரிந்துகொண்டார்?

முகத்தில் வடுக்கள் கொண்ட ஒரு (பெண்) நர்ஸ் தன் உடலைத் தொட்டுத் திருப்பி விடுவதைப் பொதுவாக எந்தப் பெண் நோயாளியும் வெறுக்க மாட்டார். அதுவும் இதை ஒரு புகாராக எழுதிக் கொடுக்கும் அளவுக்குச் செல்ல மாட்டார். ஆனால், ஒருவேளை ஆண் ஒருவர் - அவர் நர்ஸாகவே இருந்தாலும் - தன்னைத் தொடுவதை சுந்தரி விரும்பாமல் இருந்திருக்கலாம். ராதா ஒரு பெண் அல்ல. ஆண் செவிலியர். ராம்சேகரும் இன்ஸ்பெக்டரும் பேசிக்கொண்டபோது “அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என ஆங்கிலத்தில் வார்த்தைகள் பரிமாறப்பட்டன. அதாவது ‘May his soul rest in peace’ என்று வெளிப்பட்டது. His என்ற வார்த்தை ஆணைக் குறிக்கும் என்பதால் ராம்சேகர் அதைப் புரிந்துகொண்டார் என்பது விக்ரமுக்கும் தெரிந்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x