Last Updated : 22 Dec, 2017 11:38 AM

 

Published : 22 Dec 2017 11:38 AM
Last Updated : 22 Dec 2017 11:38 AM

பிரேக்- அப் பாடம்: ஃபேஸ்புக்கில் காதல் டமாரம் நல்லதா?

இந்தச் சமூக ஊடக யுகத்தில், ஒருவருடன் காதல் ஏற்பட்டாலே, ‘ரிலேஷன்ஷிப் வித் ... ’ என்று அறிவித்துவிடுகிறார்கள். அந்தக் காதல் இடையிலேயே முறிந்தால், அதற்கான காரணத்தையும் அவர்கள் சமூக ஊடக உலகில் அறிவிக்கிறார்கள். காதல் என்பது இரண்டு தனிப்பட்ட நபர்களின் விஷயம் என்பது இன்றைய சமூக வலைத்தள காலத்தில் மாறிவிட்டது.

மாறும் ஸ்டேட்டஸ்

ஃபேஸ்புக்கில் ‘ரிலெஷன்ஷிப் ஸ்டேட்டஸ்’ மாறுவதில் தொடங்கி படங்கள் பகிர்வது, அதற்கு நட்புவட்டம் லைக்ஸ், கமெண்ட்ஸ் மூலம் ஏகபோக வரவேற்பு அளிப்பது எனச் சமூக வலைத்தளங்களில் காதலுக்கும் காதலர்களுக்கும் மதிப்பு எப்போதும் அதிகம். ஆனால், இந்த வரவேற்பே காதலர்கள் பிரிவதற்கும் அவர்களுக்குள் பிரச்சினையாக உருவாவதற்கும் நூறு சதவீதம் வாய்ப்பிருக்கிறது. முன்பெல்லாம் காதலர்கள் பிரிந்தால், அதுபற்றிய தகவல்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை. ஆனால், இன்று காதல் பிரேக்-அப் ஆனால், அதை அறிவிக்க வேண்டியிருக்கிறது.

காதலர்கள் பிரிந்த பிறகு ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை மறுபடியும் மாற்றுவதுடன் மட்டும் அனைத்தும் முடிந்துவிடுவதில்லை. அவர்கள் காதலித்த காலத்தில் போட்ட இருவர் சம்பந்தப்பட்ட பதிவுகள், படங்கள், நண்பர்களின் கமெண்ட்ஸ் என அனைத்தும் அவர்களை ஒரு கட்டம்வரை துரத்தவே செய்யும். இந்த ‘பிரேக்-அப்’புக்குப் பிறகான காலத்தை சமூக வலைதளங்களில் சமாளிப்பதற்கும் நல்ல மனநிலை தேவை.

உஷார்

காதல் போன்ற உறவுகளைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்கு முன்பு, ஒருமுறைக்கு பலமுறை யோசியுங்கள். அதற்காக, காதலை சமூக வலைதள நட்புகளிடம் பகிரக் கூடாது என்று அர்த்தம்கொள்ள வேண்டாம். ஃபேஸ்புக்கின் ‘டைம்லைன்’ வருங்காலங்களிலும் நாம் மறக்க நினைக்கும் விஷயங்களைக் நமக்கு நினைவுப்படுத்தும். எனவே அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். பொதுவாக பிரேக்-அப்புக்கு பிறகான காலத்தில் காதலர்கள் ‘எமோஷனலாக’ பலவீனமாக இருப்பார்கள். ஒரு வேளை, காதலை வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டிருந்தால் பிரேக் அப்புக்கு பிறகு, சில ஆண்டுகள் கழித்துக்கூட ஃபேஸ்புக் நட்புவட்டத்தில் இருக்கும் நண்பர்கள் அதுபற்றி உங்களிடம் கேள்வி எழுப்பலாம். பழைய காதல் உறவை எப்போது, யார் கேட்டாலும் அது நிச்சயம் பாதிக்கவே செய்யும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டுமல்லவா?

நீக்குவது நல்லதா?

சில காதலர்கள் பரஸ்பர புரிதலுடனும் பக்குவத்துடனும் பிரிவதும் உண்டு. அப்படிப்பட்ட பிரேக் அப்பில் எந்தச் சிக்கலும் வராது. மாறாக, நிர்பந்த அடிப்படையிலோ, அதிருப்தியாலோ ஒருவர் பிரியும்போது, இன்னொரு தரப்பின் ஏமாற்றம், கோபம், இயலாமை அனைத்தும் சமூகவலைத்தளங்களில்தான் முதலில் வெளிப்படும். இந்தச் சூழ்நிலை சில சமயம் சிக்கலில் மாட்டவும் வைத்துவிடும். எனவே ஒருவரை விட்டு பிரிந்த பிறகு அந்த நினைவுகள் எந்தவிதத்திலும் நம்மைப் பாதிக்காமல் இருக்க முன்னாள் காதலரை ஃபேஸ்புக்கில் ‘அன்ஃப்ரெண்டு’ செய்வது பற்றியும் யோசிக்கலாம். இல்லாவிட்டால், ஏதோவொரு விதத்தில் அவருடைய செயல்பாடுகள் பற்றிய செய்திகள் உங்களைப் பாதிக்கலாம்.

படங்களை நீக்கலாம்

‘பிரேக்-அப்’புக்குப் பிறகு காதலர்கள் சேர்ந்து எடுத்த படங்களை மொத்தமாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்குவது நல்லது. இல்லாவிட்டால் ஏதோவொரு கட்டத்தில் அந்தப் படங்கள் உங்கள் நிகழ்காலத்துக்கு குந்தகம் ஏற்படுத்தலாம். மேலும் பிரேக்-அப் பற்றிய நினைவுகள் துரத்துவதிலிருந்தும் விடுபடலாம்.

காதல் மட்டுல்ல, எந்த உறவாக இருந்தாலும் பிரிவு துயரமானதுதான். அந்தப் பிரிவு நிரந்தரமானதாகவும் இருக்கலாம். தற்காலிகமானதாகவும் இருக்கலாம். அந்தப் பிரிவுக்கு பிறகான நேரத்தை எப்படி கடக்கிறோம் என்பதில்தான் உறவுகளைப் பற்றிய புரிதலும் அடங்கியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x