Published : 05 Jul 2014 09:00 AM
Last Updated : 05 Jul 2014 09:00 AM
அது ஓர் எளிய கிராமம். அங்கு இரண்டு புகழ்பெற்ற கோவில்கள் இருந்தன. ஒரு ஜென் கோவிலில்அழகான தோட்டம் ஒன்று இருந்தது. இந்தத் தோட்டத்தைக் குரு ஒருவர் பராமரித்துக்கொண்டிருந்தார். அவருக்கு செடி,கொடிகள் மீதும் பூக்கள் மீதும் அளவற்ற பிரியம் உண்டு. அதனால் தான் அந்தத் தோட்டத்தைப் பராமரிக்கும் பணியே அவருக்குக் கிடைத்தது. தோட்டத்தையும் அங்கிருந்த செடி கொடிகளையும் குழந்தைகளைப் பராமரிப்பது போல அன்புடன் அந்தக் குரு கவனித்துக்கொள்வார்.
அந்த ஜென் கோவிலுக்கு அருகிலேயே மற்றொரு சிறிய கோவிலும் இருந்தது. அங்கு வயதானதொரு ஜென் துறவி வசித்து வந்தார். இரண்டு கோவில்களையும் பெரிய சுவர் ஒன்று பிரித்துவைத்திருந்தது. ஆனால் பெரிய கோவிலில் குரு செய்யும் அனைத்து வேலைகளையும் ஜென் துறவியால் அவரது கோவிலிலிருந்தே பார்க்கக்கூடிய வகையிலேயே அந்தச் சுவர் அமைந்திருந்தது.
ஒரு நாளின் அதிகாலையிலேயே கோயிலைப் பராமரித்து வந்த குரு பரபரப்பாகக் காணப்பட்டார். அன்று அந்தக் கோவிலுக்கு யாரோ முக்கியமான விருந்தினர் வருகையை எதிர்பார்த்துத் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளை வெட்டி விட்டபடி அழகுபடுத்திக்கொண்டிருந்தார். ஒரு குழந்தையைப் போல் குரு அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தார். செடி கொடிகள் வாடியிருக்கின்றனவா என்று நிமிடத்திற்கு ஒரு தரம் பார்த்து தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்.இதைக் கண்ட ஜென் துறவிக்கு வியப்பாக இருந்தது.
தனது வேலைகளை எல்லாம் திருப்தியாக முடித்த பின்னர் அவற்றை எல்லாம் பெருமையாகப் பார்வையிட்டார் குரு. அப்போது தான் அருகிலுள்ள கோவிலிருந்து ஜென் துறவி தன்னையே கவனித்துக்கொண்டிருப்பதைக் குரு பார்த்தார். உடனே ஜென் துறவியை நோக்கிக் குரு, “எனது தோட்டம் எப்படி இருக்கிறது, பார்க்க அழகாக இருக்கிறதா?” என்று கேட்டார். “ஆமாம்” என்று சொன்ன ஜென் துறவி, “ஆனால் ஒரு சிறிய குறை இருக்கிறது என்னைத் தோட்டத்திற்கு உள்ளே வர தூக்கி விடு அதை நான் சரிசெய்கிறேன்” என்று சொன்னார்.
எல்லாவற்றையும் திருப்தியாகச் செய்ததும் என்ன குறை வந்துவிட்டது எனப் பதறிவிட்டார் குரு. ஆனாலும் துறவி வந்து சரிசெய்யட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்றெண்ணி அவரைத் தோட்டத்துக்குள் வருவதற்காகத் தூக்கிவிட்டார். தோட்டத்திற்குள் வந்த ஜென் துறவி தோட்டத்தின் நடுவே இருந்த மரம் ஒன்றை நோக்கி விரைந்தார். மரத்தின் அருகே சென்று அதன் அடி மரத்தைப் பிடித்துப் பலமாக உலுக்கினார். இதனால் மரத்திலிருந்து இலைகளுக்கும் பூக்களும் நிலத்தில் பொலபொலவென உதிர்ந்தன. குரு அதிர்ச்சியுடன் ஜென் துறவியைப் பார்த்தார். “இப்போது இந்த இலைகளையும் பூக்களையும் மரத்தில் மறுபடியும் இணைத்துவிடு” என்று கூறி விட்டு ஜென் துறவி நடையைக் கட்டிவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT