Published : 15 Dec 2017 11:41 AM
Last Updated : 15 Dec 2017 11:41 AM
சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விஷயம் டிரெண்டாகும். இப்போது சமூக ஊடகங்களின் ஃபேவரைட் செல்லப் பிள்ளை ஷின் சான். தமிழில் ஷின் சான் வரத் தொடங்கியது முதலே ஷின் சான் ஃபீவரால் குழந்தைகள் குதூகலித்துக்கொண்டிருக்கிறார்கள். ஷின் சான் பேசும் வசனங்களால், இளைஞர்கள் அதன் ரசிகர்களாக மாறி சமூக ஊடகங்களில் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். யார் இந்த ஷின் சான்?
ஷின் சான் என்பது கார்ட்டூன் கதாபாத்திரம். ஜப்பானில் 1990-ம் ஆண்டு முதன் முதலாக ஒளிபரப்பப்பட்ட கார்ட்டூன் தொடர்தான் இது. இதில் வரும் ஷின் சான் என்ற 5 வயதுச் சிறுவன் செய்யும் சேட்டைகள்தாம் இந்தக் கதாபாத்திரத்தின் சிறப்பு.
இந்த கார்ட்டூன் ஷோ தற்போது தமிழில் ஹங்காமா சேனலில் ஒளிபரப்பாகிறது. ஷின் சானின் அம்மாவான மிட்ஷியின் பேச்சை மீறி அவன் செய்யும் சேட்டைகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன. அவன் பேசும் வசனங்களும் சிரிப்பை வரவழைக்கும்.
அண்மையில் ஷின் சான் பேசிய ‘அமைதி... அமைதி... அமைதியோ அமைதி... அமைதிக்கெல்லாம் அமைதி’ என்ற வசனம் அங்கிங்கெனாதபடி சமூக ஊடகங்களில் எங்கும் வைரலானது. அந்த வசனத்தை வைத்து மீம் கிரியேட்டர்கள் வார்த்தை விளையாட்டு விளையாடி வருகிறார்கள். ‘ஷின் சான் பரிதாபங்கள்’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பக்கம் தொடங்கும் அளவுக்குக்குப் பெரியவர்களும் தீவிர ரசிகர்களாகியிருக்கிறார்கள்.
ஷின் சான் புராணம்
இந்தப் பக்கம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அதை 10 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். தற்போது ஃபேஸ்புக் மட்டுமல்லாமல் ட்விட்டர், வாட்ஸ்அப் என அனைத்திலும் ஷின் சான் புராணம்தான். ஸ்டேட்டஸ், வால்பேப்பர், மீம்ஸ் என்று ஷின் சான் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறான். ஐந்து வயது ஷின் சான் கார்ட்டூன் பாத்திரத்துக்குக் குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர் 25 வயது இளைஞர் ரகுவரன். ஏற்கெனவே பல கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு இவர் குரல் கொடுத்திருக்கிறார். ஷின் சானுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா என்று ரகுவரனிடம் கேட்டோம்.
“நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவே இல்லை. குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் கழித்து டிரெண்டிங் ஆகும் என்று நினைத்தேன். உடனே டிரெண்ட் ஆனதை நினைத்துப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இளைஞர்களின் பாராட்டுகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. ஒரு மனிதன் டென்ஷனாக, கஷ்டத்தில் இருக்கும்போது சிரிக்க வைப்பது ரொம்ப கஷ்டம். ஆனால், அதை ஷின் சான் மூலமாகச் செய்ய முடிந்தது. எல்லோருக்குள்ளும் அவ்வப்போது 5 வயது குணம் எட்டிப் பார்க்கும். அதனால்தான் அனைவராலும் இந்த கார்ட்டூன் விரும்பப்படுகிறது” என்கிறார் ரகுவரன்.
இவரோடு சேர்ந்து இன்னும் கணேஷ், சத்யா, அருண் அலெக்சாண்டர், 4 பேர் ஷின் சான் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்து வருகிறார்கள். எல்லாருக்குமே ஷின் சான் கார்ட்டூனால், பெயரும் கிடைத்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT