Published : 22 Dec 2017 11:33 AM
Last Updated : 22 Dec 2017 11:33 AM
இ
ந்தக் காலத்து இளைஞர்கள் வீட்டில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து சமூக ஊடகங்களில் மூழ்கினால் பசியையே மறந்துவிடுகிறார்கள். பொழுதுபோக்க சமூக ஊடகங்களும் அவ்வப்போது சாப்பிட உணவும் ஓரிடத்தில் கிடைத்தால் சும்மா விடுவார்களா இளைஞர்கள். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘ஆர்க்னெமேஸிஸ் கேமிங்’ எனும் கேமிங் கபே இப்படித்தான் இளைஞர்களை ஈர்த்து வருகிறது. அதென்ன கேமிங் கஃபே?
பெரிய கம்ப்யூட்டருக்கு முன்பு இஷ்டத்து விளையாடுவது, இலவச வைபை மூலம் விர்ச்சுவல் ரியாலிட்டியில் விரும்பிய காட்சிகளைப் பார்ப்பது, சாப்பிட உணவு வகைகள் கிடைப்பது என பொழுதுபோக்கு அம்சங்களும் உனவக வசதியும் ஒரே இடத்தில் கிடைப்பதுதான் கேமிங் கஃபே. பெரு நகரங்களில் நடத்தப்படும் இதுபோன்ற கேமிங் கபேக்கள்தான் இன்றைய இளைஞர்களின் ஹாட் ஸ்பாட்டுகளில் ஒன்றாக உள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கேமிங் கபேவை ஹரிஷ் சூரி என்ற இளைஞர் நடத்திவருகிறார்.
உள்ளே சென்று பார்த்தால், கணினி விளையாட்டுகளிலும் சமூக ஊடங்களிலும் இளைஞர்கள் மூழ்கிக்கிடக்கிறார்கள். திரும்பும் இடங்களில் எல்லாம் உயர்த் தெளிவு கணினிகளும், கன்சோல்களும் ஆக்கிரமித்திருக்கின்றன. ஸ்னூக்கர்ஸ் விளையாடவும் தனியாக இடம் உள்ளது. கணினியில் விளையாடிக்கொண்டே சாப்பிட ஏதாவது ஆர்டர் செய்தால், சிறிது நேரத்தில் சுடச்சுட எடுத்துவந்து கொடுக்கிறார்கள். இளைஞர்களை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு அம்சங்களையும் செய்திருக்கிறார்கள். இந்த கேமிங் மையத்தை தொடங்கும் முன் இந்தியாவில் உள்ள மற்ற கேமிங் மையங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்ததாகச் சொல்கிறார் ஹரிஷ் சூரி.
“மற்ற நகரங்களில் இருப்பதைவிட வித்தியாசமாகவும் பிரம்மாண்டமாகவும் ஒரு கேமிங் மையம் அமைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு ஆரம்பிக்கப்பட்டதே இந்த கேமிங் கஃபே. நான்கு வயதிலிருந்து கணினி விளையாட்டுகள் என்றால் கொள்ளைப் பிரியம். அன்று தொடங்கிய அந்த விருப்பம்தான் இன்று என்னை சொந்தமாக கேமிங் கஃபே தொடங்கச் செய்திருக்கிறது. தற்போது கணினி விளையாட்டுகளும் பெரிய அளவில் டிரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் இன்றைய இளைஞர்களின் டிரெண்டுக்கு ஏற்றாபோல் இதை அமைத்திருக்கிறேன்” என்கிற ஹரிஷ் சூரி, “வெளிநாடுகளில் உள்ளதுபோல கணினி விளையாட்டுகள் இந்தியாவில் வளர்ச்சி அடையச் செய்ய இதுபோன்ற மையங்கள் உதவும். இதுபோல இன்னும் அதிகமான கேமிங் கஃபேக்களை இந்தியா முழுவதும் ஆரம்பிக்க வேண்டும்” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT