Last Updated : 22 Dec, 2017 11:37 AM

 

Published : 22 Dec 2017 11:37 AM
Last Updated : 22 Dec 2017 11:37 AM

இணையத்தில் வைரலான சாமானியர்கள்!

விடைபெற இருக்கும் 2017-ம் ஆண்டைத் திரும்பி பார்க்கையில் இணைய உலகில் மீம்களும் வைரல் தருணங்களும் நிறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. சமூக ஊடகங்கள் முதல் செய்தித்தளங்களைவரை ஆதிக்கம் செலுத்தி, கவனத்தை ஈர்த்த வைரல் தருணங்களும் அநேகம் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் இணைய நட்சத்திரங்களும் பலர் இருக்கின்றனர். இப்படி இணையம் மூலம் இந்த ஆண்டு புகழ்பெற்ற சில சாமானியர்களின் சுவாரசியமான கதை:

கேட்டது கிடைத்தது

அமெரிக்கப் பள்ளி மாணவரான வால்டர் வில்கர்சன் இந்த ஆண்டு இணைய சாதனையாளராக மகுடம் சூட்டிக்கொண்டிருக்கிறார். ட்விட்டரில் வெளியிட்ட குறும்பதிவு ஒன்றுக்கு அதிக ரீட்விட்கள் பெற்றதுதான் அவரது சாதனை. 34 லட்சத்துக்கும் மேல் ரீட்விட்களை குவித்திருந்தார். இதன்மூலம், ஆஸ்கர் செல்ஃபிக்காக அதிக ரீட்விட் பெற்றிருந்த ஹாலிவுட் நட்சத்திரம் எல்லென் டிஜெனரஸ் சாதனையை அவர் முறியடித்தார்.

walter wilcorson

ரீட்விட் என்பது ட்விட்டரில் வெளியாகும் ஒரு குறும்பதிவை மற்றவர்களும் தங்கள் டைம்லைனில் மறுபதிவிடுவதாகும். பொதுவாக, கவனத்தை ஈர்க்கும் குறும்பதிவுகளுக்கு நூற்றுக்கணக்கில் ரீட்விட்கள் கிடைத்தாலே பெரிய விஷயம். அபூர்வமாகவே சில குறும்பதிவுகள் லட்சக் கணக்கில் பகிரப்படும். பெரும்பாலும் செல்வாக்குமிக்க பிரபலங்களுக்கே இது சாத்தியம். அப்படி இருக்க, வில்கர்சனுக்கு இது எப்படிச் சாத்தியமானது?

உண்மையில் அவர் எதுவும் பெரிதாகச் செய்துவிடவில்லை. ட்விட்டர் மூலம் ஒரு கோரிக்கை வைத்தார். ‘எனக்கு இலவச சிக்கன் நக்கெட் உணவு வேண்டும், அதற்கு உதவுங்கள்’ என்பதுதான் அது. இந்தக் கோரிக்கை ட்விட்டுக்கு லட்சக்கணக்கில் ரீட்விட் செய்யப்பட்டது புரியாத புதிர்தான். ஆனால், நடந்தது இதுதான்.

வில்கர்சனுக்கு ஆண்டு முழுவதும் சிக்கன் நக்கெட் இலவசமாகக் கிடைத்தால், எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. உடனே ஒரு ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனத்தை ட்விட்டர் மூலம் அணுகி, ஓராண்டு இலவச சிக்கன் நக்கெட்டுக்கு எத்தனை ரீட்வீட் தேவை எனக் கேட்டிருக்கிறார். நிறுவன தரப்பில் 1.8 கோடி ரீட்வீட் பெற வேண்டும் என பதில் வந்திருக்கிறது. வில்கர்சன் அதிகம் யோசிக்காமல், வேண்டு கோள் வைத்தார்.

அதாவது, இதை ரீட்வீட் செய்தால், எனக்கு நக்கெட் கிடைக்கும், எனவே பகிருங்கள் எனக் கேட்டிருந்தார். பத்து பேருக்கு மேல் பகிரப்போவதில்லை என நினைத்து விளையாட்டாகத்தான் இந்தக் கோரிக்கையை வைத்தார். ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில் ரீட்விட்கள் குவிந்தன. விரைவிலேயே இந்த எண்ணிக்கை 34 லட்சத்தைத் தாண்டியது. இது ஒரு சாதனையாகி, அவருக்கு இணைய புகழை தேடித்தந்தது. ‘நக்கெட் ஆசாமி’ எனும் புகழையும் பெற்றுத் தந்துள்ளது. 1.8 கோடியை அவரால் தொட முடியாவிட்டாலும், இந்தச் சாதனைக்காக அந்த நிறுவனம் அவருக்கு ஓராண்டுக்கு நக்கெட்டுக்கான கூப்பன்களைப் பரிசளித்துள்ளது.

பிபிசி தந்தை

நக்கெட் வாலிபராவது கோரிக்கை வைத்து வைரல் புகழ் பெற்றார். ஆனால், தென் கொரியா பேராசிரியர் ராபர்ட் கெல்லி பேட்டி கொடுத்து இணைய நட்சத்திரமாகி இருக்கிறார். உண்மையில் கெல்லி பேட்டியின்போது ஏற்பட்ட இடையூறால் பிரபலாமானார். எல்லாம் பிள்ளைகளின் அன்புத்தொல்லையால் வந்த இடையூறு.

தென்கொரியாவில் அந்நாட்டு அதிபருக்கு எதிரான கண்டனத் தீர்மான விவகாரம் உச்சத்தில் இருந்தது. அப்போது பிபிசி தொலைக்காட்சி கெல்லியுடன் ஸ்கைப் வழியே உரையாடிக்கொண்டிருந்தது. கெல்லி தனது அறையிலிருந்து தென்கொரிய அரசியல் சூழலை அலசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது 4 வயது மகள் உள்ளே நுழைந்து கெல்லியின் கையைப் பிடித்து இழுத்தாள். பேராசிரியர் கெல்லி சங்கடத்தை வெளிக்காட்டாமல் கேமராவைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தார். அதற்குள் அவரது ஒரு வயது மகனும் வாக்கரை தள்ளியபடி உள்ளே வந்தான். குழந்தைகளால் அவர் தத்தளித்துக்கொண்டிருக்க, நல்லவேளையாக கெல்லியின் மனைவி உள்ளே வந்து பிள்ளைகளை அழைத்துச்சென்றார்.

இந்தக் காட்சி அப்படியே கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி, அனைவராலும் ரசிக்கப்பட்டது. பேராசிரியரின் கடமையும் பிள்ளைகளின் அன்புத் தொல்லையும் சேர்ந்து இந்த வீடியோவை வைரலாக்கியதோடு, அவருக்கு ‘பிபிசி டாட்’ எனும் பட்டப்பெயரையும் பெற்றுத்தந்தது.

இன்ஸ்டாகிராம் புதல்வி

பிரிட்டனைச் சேர்ந்த பைலட் ‘பில் யங்’ இன்ஸ்டாகிராம் நட்சத்திரமாகி கவனத்தை ஈர்த்தார். பைலட்டாக உலகம் முழுவதும் பறக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த பில் யங் ஒரு நல்ல ஒளிப்படக் கலைஞரும்கூட. விமானத்தில் பறக்கும் நகரங்களில், தான் தங்கும் ஓட்டல்களில் காணப்படும் தரைவிரிப்புகளை எல்லாம் கிளிக் செய்து இன்ஸ்டாகிராமில் பகிரும் பழக்கம் உள்ளவர். அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் நன்றாக இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் அவருக்கு அதிக ஆதரவில்லை. 83 பேரே அவரைப் பின்தொடர்ந்தனர். இது குறித்து அவர் கவலைபட்டதும் இல்லை.

ஆனால், அவருடைய மகள் ஜில்லுக்கு இது ஒரு பெரும் குறையாக இருந்தது. அப்பாவின் படங்கள் எல்லாம் அற்புதமாக இருந்தும் அதிகமானவர்கள் அவற்றை ரசிக்கவில்லையே என ஏங்கினார். எப்படியும் அப்பாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைரலாக்க வேண்டும் என்றும் விரும்பினார்.

இந்த எண்ணத்தை ட்விட்டர் பக்கம் மூலம் ஒரு வேண்டுகோளாக வைத்தார். ‘கிறிஸ்துமசுக்கு நான் விரும்புவதெல்லாம், அப்பாவின் இன்ஸ்டாகிராம் தரைவிரிப்பு பக்கம் வைரலாக வேண்டும் என்பதுதான். தயவுசெய்து இதை நிகழ்த்திக் காட்ட உதவுங்கள்” என்று ட்வீட் செய்து, அதனுடன் அப்பாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் இணைந்திருந்தார்.

அவ்வளவுதான், அடுத்த சில மணி நேரத்தில் அவரது அப்பாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடருவோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தைத் தொட்டது. இதைப் பத்திரிகைகள், இணைய தளங்கள் செய்தியாக வெளியிட, பில்லின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு மேலும் ஆதரவு பெருகியது. அடுத்த சில நாட்களில் லட்சங்களைத் தொட்டது. இதனால், அப்பாவும் மகளும் திக்குமுக்காடிப்போயினர்.

இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் பாலோயர்களைப் பெற்றவர்கள் பலர் இருந்தாலும், ஒரே ஒரு ட்வீட்டால் லட்சக்கணக்கான பாலோயர்களைப் பெற்றது பைலட் பில் மட்டும்தான். அதற்கு அவர் ஆசை மகளுக்குதான் நன்றி கூற வேண்டும்.

ஷாப்பிங் லிஸ்ட்

இந்தியாவில் இளம் தம்பதி உருவாக்கிய ஷாப்பிங் லிஸ்ட்டால் இணையம் அறிந்த தம்பதியாக மாறினர். கணவர்களில் பலர் வீட்டு வேலையில் மனைவிகளுக்கு உதவும் வழக்கம் உள்ளவர்கள்தான். ஆனால், அந்த வேலைகளில் சொதப்புவதுதான் பல கணவர்களது பழக்கம். ஐ.டி. ஊழியரான இரா கோவல்கரின் கணவரும் இந்த ரகம்தான். இரா, கணவரை மார்கெட்டுக்கு அனுப்பியபோது, காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை எப்படி வாங்க வேண்டும் என விரிவாக வழிகாட்டும் குறிப்புகளைக் காகிதத்தில் எழுதிக்கொடுத்தார். இந்தக் குறிப்புச்சீட்டை அவர் ட்விட்டரில் பகிர, பலரும் இதை ரசித்து மகிழ்ந்தனர். இந்தக் குறும்பதிவு ட்விட்டரில் பேசப்பட்டு, இரா கோவல்கர் தம்பதியை இணைய நட்சத்திரமாக்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x