Published : 18 Jul 2014 02:51 PM
Last Updated : 18 Jul 2014 02:51 PM
“ஜூலை பிறக்கும் ஜூலை பிறக்கும்
ஜூனியருக்கும் சீனியருக்கும்
கல்லூரி வாசல் எங்கும்
ராகிங் நடக்கும்...”
- இந்தப் பாடல் இன்று பழங்கதையாகி வருகிறது. ஜூலை மாதத்தில் கல்லூரிகளுக்குச் சென்றால் கையில் ரோஜாப்பூவுடனும், இனிப்புடனும் ஜூனியர் மாணவர்களை சீனியர்கள் வரவேற்கும் காட்சிகளைப் பார்க்கலாம். ‘ஃபிரெஷர்ஸ் டே’ என அழைக்கப்படும் ஜூனியர்-சீனியர் அறிமுக தினம் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில ஆண்டுகள் முன்புவரை நடைபெற்றுவந்தது. இன்றோ எல்லாக் கல்லூரிகளிலும் இந்தக் கலாசாரம் பரவி ஜூனியருக்கும் சீனியருக்கும் இடையே தொடக்கத்திலேயே ஒரு நட்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
ஒரே பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் தொடங்கி 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒரு தோப்புக் குயில்களாகவே இருந்திருப்பார்கள். 12-ம் வகுப்புக்குப் பிறகு ஒவ்வொருவரும் ஒரு திசையை நோக்கிச் செல்லும் போதுதான் மனதில் திக்...திக்.. ஆரம்பிக்கிறது.
புதிய கல்லூரி, புதிய புதிய மாணவர்கள், ஆங்கிலம், தமிழ் மீடியம் பேதமின்றி ஒரே மீடியம் சார்ந்த கல்வி என்கிறபோது நடுக்கம் கூடிவிடும். இப்படி ஒருவித பயத்துடன் கல்லூரியில் நுழையும்போது ராகிங்கும் சேரும்போது கல்லூரி வாழ்க்கை பல மாணவர்களுக்கு நரகமாகிவிடுவதுண்டு.
கடுமையான சட்டத்தின் மூலம் ராகிங்கை அரசு கட்டுப்படுத்தினாலும், ஜூனியர் - சீனியர் என்ற வேறுபாடு மாணவர்கள் மத்தியில் இருக்கவே செய்தது. இன்று கல்லூரிகளும், மாணவர் அமைப்புகளும் முன்னின்று நடத்தும் அறிமுக தினம் அந்த எண்ணத்தையே மாற்றி வருகிறது. தொடக்கத்திலேயே ஜூனியர் - சீனியர் மாணவர்களிடையே நல்ல அறிமுகம் ஏற்பட இத்தினம் உதவுகிறது. எந்த சூழ்நிலையில் ஒரு மாணவர் கஷ்டப்பட்டுப் படிக்க வருகிறார், அவர்களின் குடும்பப் பின்னணி என்ன என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள நேரும்போது மாணவர்களிடையே உதவும் மனப்பான்மையும் வந்திருக்கிறது.
அன்றும் இன்றும்
“ஜூனியர் மாணவியா கல்லூரிக்குள் நுழைஞ்சப்ப ஆங்கில மீடியத்தில் படிக்க முடியுமான்னு ரொம்ப பயமா இருந்துச்சு. அறிமுக தினம் அன்னைக்கு சீனியர் மாணவிகள் கூப்பிட்டு நிறையப் பேசினாங்க. என் பயத்தை தெரிஞ்சிகிட்டு அதை பத்தி நிறைய மோட்டிவேஷன் கொடுத்தாங்க. சக நண்பரா பல அனுபவங்களை ஷேர் பண்ணிக்கிட்டாங்க. துறை ரீதியாகவும் ஜூனியர்களோட சீனியர்கள் பேசுவாங்க.
அதெல்லாம் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு. இன்னைக்கு நான் மூன்றாமாண்டு வந்துட்டேன். என்கிட்ட அறிமுக தினம் அன்னைக்கு எப்படி நடந்துகிட்டாங்களோ, அதே மாதிரிதான் என் ஜூனியர்ஸ் கிட்ட நான் நடந்துக்குவேன்” என்கிறார் கோவையைச் சேர்ந்த கல்லூரி சீனியர் மாணவி உமா மகேஸ்வரி.
அறிமுக தினம் மூலம் தொடக்கத்திலேயே நல்ல நட்பு ஏற்படுவதால், படிப்பதில் தொடங்கி, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் எனப் பல விஷயங்களிலும் சீனியர்கள் தங்கள் அனுபவங்களை ஜூனியர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது. கேம்பஸ் இண்டர்வியூவை எதிர்கொள்ளவும் சீனியர் மாணவிகள் ஜூனியர்களுக்கு குறிப்பு கொடுக்கவும் இத்தினம் பிள்ளையார் சுழியாக இருந்து உதவுகிறது.
“முதல் நாளில் இருந்தே சீனியர் - ஜூனியர் பேதம் பார்க்காமல் பழகுகிறார்கள். வந்த முதல் நாளிலேயே அவுங்களோட செல்போன் நம்பர் எல்லாம் கொடுத்துட்டாங்க. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேச சொல்லியிருக்காங்க. என்ன உதவி கேட்டாலும் ஓடோடி வந்து செய்யுறாங்க. ராகிங் என்ற பயமே எங்க கல்லூரியில் இல்லை” என்கிறார் ஜூனியர் மாணவர் அகில்.
ஃபிரெஷர்ஸ் டே இன்று ஜாலி டே
தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரிகளில் அறிமுக தினம் என்பதெல்லாம் கிடையாது. வெளி நாடுகளில் ‘ஸ்டூடன்ஸ் ஓரியண்டேஷன்’ என்ற பெயரில் பல ஆண்டுகளாகவே ‘வெல்கம் டே’ கொண்டாடப்பட்டுவருகிறது.
ஜூனியர்-சீனியர் இடையே நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பாலமாக சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அறிமுக தினம் பெரு நகரங்களில் ஃபேஷன் ஷோ, டிஸ்கோத்தே, பப், கிளப்புகளில் ஆட்டம் பாட்டம் என ‘ஜாலி டே’யாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. இன்னும் சில இடங்களில் ஜூனியர் - சீனியர்கள் இணைந்து ஆதரவற்றோர் இல்லங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவது, பொருளுதவி செய்வது எனச் சமூகப் பார்வையும் சேர்ந்திருக்கிறது. இப்படி ‘ஃபிரஷர்ஸ் டே’யின் முகமும் நாளுக்கு நாள் மாறியும் வருகிறது.
அறிமுக தினத்திற்கான அடிப்படையை இழக்காத வரை ஜூனியர்-சீனியர் மாணவர்கள் இணைந்து கொண்டாடும் இத்தினம், இரு தரப்புக்கும் இணைப்புப் பாலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT