Published : 03 Nov 2017 09:54 AM
Last Updated : 03 Nov 2017 09:54 AM
‘மை ஆக்கி கையோட
உசிர எத்தி ஹோதியவே
அவ ஓப்போ தாரி எல்லா
கவ பீத்து ஹோதியவே’
அட்டகாசமாகத் தொடங்குகிறது அந்த படுகுப் பாடல். அந்தப் பாடலின் தமிழ் மொழியாக்கம் இது:
‘மை போட்ட கையோடு
உயிரைக் கொண்டு செல்கிறாளே…
அவள் போகும் பாதை எல்லாம்
அன்பை வைத்துச் செல்கிறாளே..’
2 நிமிடங்கள் 13 நொடிகள் மட்டுமே கொண்ட அந்தப் பாடல் முழுக்க காதல் நிறைந்து வழிகிறது. பாடல் வரிகள், நடன அமைப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் என அத்தனையும் புது முயற்சியாக இருந்தாலும்… அசத்தல்!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் இனம், தனித்துவமான பல கலாச்சாரக் கூறுகளைக் கொண்டது. அதில் ஒன்று அவர்களின் பாரம்பரிய நடனம். திருமணம், திருவிழா என எந்தச் சுப நிகழ்வாக இருந்தாலும், தங்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்வது படுகர்களின் வழக்கம்.
ஒரு புறம், பாரம்பரிய நடனம் பின்பற்றப்பட, இன்னொரு புறம், படுகு மொழியில் துள்ளலான பாடல்களை இயற்றி, அதற்கு ‘வெஸ்டர்ன் ஸ்டைல்’ நடனம் ஆடும் முயற்சி தற்போது நடைபெற்றுவருகிறது.
‘படுகா பட்டிங் ஹவுஸ்’ (பி.பி.ஹெச்.) தயாரிப்பில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கரியமலை பகுதி இளைஞர்கள் சிலர், ‘எங்க பேரே’ (தமிழில்: நாங்க வேற) என்ற பெயரில் இந்த ‘சிங்கிள் ட்ராக்’கை யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு, சமூக வலைத்தளங்களில் உள்ள படுகர் இன மக்களிடம் பிரமாத வரவேற்பு கிடைத்திருக்கிறது.
வீடியோவைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=wKCbwlwWYhE
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT