Last Updated : 17 Nov, 2017 09:25 AM

 

Published : 17 Nov 2017 09:25 AM
Last Updated : 17 Nov 2017 09:25 AM

துப்பறியும் ராம் சேகர் 09: அய்யோ... பணம் போச்சே!

ராஜனும் அவரது மனைவியும் அழுதுக்கொண்டிருந்தனர். அவர்கள் வீட்டில் வைத்திருந்த பெரும் தொகையைக் காணோம். துப்பறியும் நிபுணர் ராம்சேகர் அங்கு வந்து சேர்ந்தார்.

“எவ்வளவு பணம்?” என்று கேட்டார்.

“இரண்டு லட்சம்” என்று ராஜன் உடைந்த குரலில் கூற, அவரது மனைவி விம்மினார்.

“வீட்டில் எதுக்காக இவ்வளவு பணத்தை வச்சிருந்தீங்க, உங்க வங்கிக் கணக்கிலே போட்டிருக்கலாமே?” என்றார்.

“அது கிராமத்திலுள்ள என் நிலத்தை விற்றதில் வந்த பணம் சார். நாளைக்கு வங்கியில் போடலாம்னு நினைத்திருந்தேன்” என்றார் ராஜன்.

“நீங்க வீட்டில் பணத்தை வைத்திருக்கும்​ விஷயம் தெருவில் யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார் ராம்சேகர். ஏனென்றால் ராஜனும் அவரது மனைவியும் நான்கு தெரு தள்ளியிருந்த கடைத்தெருவுக்கு சென்று வந்த நேரத்துக்குள் திருட்டு நடந்திருந்தது. அப்படியானால், அவர்கள் வெ​ளியே செல்வதைக் கவனித்த யாரோதான் திருடியிருக்க வேண்டும். அப்படி கவனித்தவன், அதே தெருவில் இருப்பவராக இருக்க வாய்ப்பு அதிகம். இப்படி யோசித்துதான் ராம்சேகர் அந்தக் கேள்வியைக் கேட்டார்.

“வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே கிளம்பும்போது நான் என் மனைவியிடம் முட்டாள்தனமாக ஒன்றைச் சொன்னேன்” என்றார் ராஜன் தயக்கத்துடன்.

“அது என்ன?” என்று கேட்டார் ராம்சேகர்.

“வீட்டில் ரெண்டு லட்ச ​ரூபாயை வைத்துவிட்டு, இப்படி ஒரு சாதாரண பூட்டை வீட்டுக்குப் பூட்டி இருக்கிறோமே! சீக்கிரமா திரும்பி வந்துடணும் என்பதை உரத்துச் சொன்னேன்”.

“இதையெல்லாம் தெருவில் நீங்க சொன்னதே தவறு. அது இருக்கட்டும். எதற்காக அதை உரத்தக் குரலில் சொன்னீங்க? உங்க மனைவிக்கு காது சரியாகக் கேட்காதா?”

“அப்படியில்லை. பக்கத்தில் இருக்கும் வீட்டில் ஆழ்துளை குழாய் போட்டுக்கொண்டிருந்தார்கள். அதனால் ஒரே சத்தம். நாலடி தள்ளியிருந்த என் மனைவிக்குக் கேட்பதற்கே நான் அந்த அளவுக்கு கத்த வேண்டியிருந்தது”.

ராம்சேகர் அடுத்த கேள்வியைக் கேட்டார். “நீங்க உங்க மனைவியிடம் அப்படிச் சொன்னபோது உங்க வீட்டுக்கு அருகே யாராவது இருந்தார்களா?”.

சற்று யோசித்த ராஜன், “எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறம் சுமார் நாற்பது அடி ​தூரத்தில் நின்றுகொண்டு நான்கு பேர் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை எனக்குத் தெரியும். அவர்கள் நான்கு பேரும் நண்பர்கள். தினமும் இந்த நேரத்தில் இங்கே வந்து பேசுவார்கள்”.

அவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்தபின் ராம்சேகர் அவர்கள் ஒவ்வொருவரையும் விசாரி​த்தார். அவர்கள் கூறியதில் சில பகுதிகள் கீழே உள்ளன.

நபர் - 1 “பெயர் முத்து. நான் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன். போன மாதம்தான் ஒரு லட்ச ​ரூபாய் கொடுத்து இந்தப் பழையக் காரை வாங்கினேன்’’.

நபர் - 2 “என் பெயர் சண்முகம். நான் நிறைய நல்ல விஷயங்களைச் செய்து வருகிறேன். நேற்றுகூட அனாதை விடுதி ஒன்றுக்கு பத்தாயிரம் ​ரூபாய் நன்கொடை கொடுத்தேன். காது கேளாத மாணவர்களுக்கான பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருக்கிறேன்”.

நபர் - 3 “பெயர் மூர்த்தி. எனக்குக் கோபம் நிறைய வரும். கோபத்தில் ஒருவரைக் கத்தியால் குத்திவிட்டேன். அவர் பிழைத்துக்கொண்டார். ஆனாலும் எனக்கு சிறை தண்டனை கிடைத்தது. ஒரு மாதத்துக்கு முன்னால்தான் சிறையிலிருந்து விடுதலை ஆனேன்”.

நபர் - 4 “என் பெயர் கந்தன். நான் வங்கி ஒன்றில் வேலை செய்கிறேன். இந்த ராஜனுக்கு நன்றாக வேண்டும். அதே தெருவில்தான் நானும் இருக்கிறேன். அவன் வீட்டுக் குப்பையை என் வீட்டு வாசலில் வேண்டுமென்றே போடுவான்”.

நான்கு பேர் கூறியதையும் கேட்ட ராம்சேகர் குற்றவாளி யார் என்பதை ஊகித்து விட்டார். உங்களால் ஊகிக்க முடிகிறதா? யார், எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?

சென்ற வார விடை

இறந்து கிடந்த சக்ரபாணி உதவியாளர் நரசய்யாவின் பாக்கெட்டுகளை ராம்சேகர் ஏன் சோதிக்கச் சொன்னார். பின் அவசரமாக வாசலுக்குச் சென்று அங்கிருந்த குப்பைக் கூடையில் உள்ள பொருட்களை ராம்சேகர் ஏன் கவனித்தார்?

சக்ரபாணியை இறக்கச் செய்து வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களைத் திருடுவதுதான் நரசய்யாவின் திட்டம்.

சக்ரபாணியின் இரண்டாவது மனைவி நடிகை பிரேமலதாவின் பேட்டி தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்குத் தொடங்கி 9.00 மணிவரை ஒளிபரப்பாகி இருக்கிறது. அந்த நிகழ்ச்சி தொடங்கியவுடன் நரசய்யா வெளியில் கிளம்பிவிட்டார். போகும்போது ரிமோட்டிலுள்ள பேட்டரியையும் கழற்றி எடுத்துச் சென்றுவிட்டான்.

தன் மனைவியின் கவர்ச்சிப் புகைப்படங்கள் ஒளிபரப்பாவதைப் பார்த்து சக்ரபாணியின் ரத்தக் கொதிப்பு அதிகமானது. இதனால் ரிமோட் கையருகே இருந்தும் சக்ரபாணியால் அதை இயக்கி சானலை மாற்ற முடியவில்லை. நகர்ந்து சென்று டி.வி. செட்டில் இருக்கும் சுவிட்சை ஆஃப் செய்ய முடியாதபடி அவருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிக்கும் நடுவே ஒரு மேஜை இருக்கிறது. தவிர அவர் பலவீனமாகவும் இருந்திருக்கிறார்.

கூடத்திலுள்ள சுவர் கடிகாரம் நின்றிருந்தது. இதைப் பார்த்ததும் அதிலுள்ள பேட்டரி தீர்ந்துவிட்டது என்று உணரும் ராம்சேகர் ரிமோட்டில் இருக்கும் பேட்டரி பற்றி யோசிக்கிறார். யார் முகத்தைக் காணவே சக்ரபாணிக்குப் பிடிக்காதோ அவளது நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்க நேர்ந்ததில் அவருக்கு ரத்த அழுத்தம் ஏறி மாரடைப்புக்கு வழிவகுத்திருக்கிறது.

கழற்றப்பட்ட ரிமோட் பேட்டரிகள் நரசய்யாவின் பாக்கெட்களிலோ வாசலிலுள்ள குப்பைக் கூடையிலே இருக்கக் கூடும் என எண்ணுகிறார் ராம்சேகர். அதனால்தான் அந்தத் தேடல்.

(துப்பறியலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x