Published : 24 Nov 2017 11:21 AM
Last Updated : 24 Nov 2017 11:21 AM
ராம்சேகர் அந்த மருத்துவமனைக்குள் நுழையும்போது எதிரே வந்துகொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் விக்ரம்.
“என்ன விக்ரம், பத்மினியை விசாரித்தீர்களா, நானும் அவங்களைப் பார்க்கலாம் இல்லையா?”
“பிரயோஜனமில்லை ராம்சேகர். பத்மினி இப்போ மயக்கமாக இருக்கிறார். அது கோமாவாகக்கூட இருக்கலாம் என்கிறார் டாக்டர்”.
“அப்படியானால் பத்மினியிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கலையா?”.
“நான் பத்மினியிடமிருந்து பல விவரங்களை வாங்கிட்டேன். நான்தான் ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே வந்துவிட்டேனே. மெதுவாகத்தான் பேசினார். ஆனாலும் தான் சொல்ல நினைத்ததைத் தெளிவாகவே சொல்லிட்டார்’’.
ராம்சேகர் அவர் முகத்தைப் பார்க்க, தான் சேகரித்த விவரத்தை அவரிடம் பகிர்ந்துகொண்டார் இன்ஸ்பெக்டர்.
பத்மினி, வீட்டு வேலை செய்து வாழ்க்கை நடத்தும் இளம்பெண். ஆதரவற்றவர். படேலின் வீட்டிலும் அவர் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தார். படேலுக்கு அவர் மீது ஒரு கண். நிறையப் பணம் தருவதாக ஆசை காட்டியிருக்கிறார்.
“நான் மாட்டேன்னு சொன்னேன். அவர் என்னைக் கல்யாணம் செய்துகொள்வதாகச் சத்தியம் செய்தார். நம்பினேன். அப்பப்ப பணம் கொடுத்தாரே தவிர கல்யாணப் பேச்சே எடுக்கல. நான் கேட்டப்போ பிடி கொடுக்காமல் நழுவினார். ரெண்டு நாளைக்கு முன்பே அவரிடம் நான் தீர்மானமாகச் சொல்லிட்டேன். என்னைக் கல்யாணம் செய்துக்கலேன்னா செல்போன்லே அவர் என்னிடம் பேசியதையும் அவர் அனுப்பிய மெசேஜ்களையும் ஆதாரமாக்கி போலீசில் புகார் செய்வேன்னு சொன்னேன். நேத்து ராத்திரி வீட்டுக்கு வந்து என் செல்போனைக் கேட்டார். நான் மறுத்தேன். ஆத்திரத்திலே வீட்டிலிருந்த கடப்பாரையை எடுத்து என் தலையிலே போட்டார்”.
இன்ஸ்பெக்டர் சொன்னதை உள்வாங்கிக்கொண்ட ராம்சேகர், “எத்தனை மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்துச்சு?” என்று கேட்டார்.
“இரவு 11.00 மணிக்கு நடந்ததுன்னு பத்மினி சொன்னார்’’.
அங்கிருந்து கிளம்பி படேலும் அவருடைய அப்பாவும் தங்கியிருந்த வீட்டுக்கு விக்ரமும் ராம்சேகரும் வந்தனர். அது சிறிய பங்களா. வாசலிலுள்ள கிரில் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அழைப்பு மணியை அடித்ததும் படேல் கதவைத் திறந்தார். அவர் முகத்தில் களைப்பு தெரிந்தது. கூடத்தின் ஓரமாக ஒரு சிறு பெட்டி காணப்பட்டது.
“உங்க வீட்டிலே வேலை செய்யும் பத்மினி இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறார்’’ என்று விக்ரம் கூறியவுடன் படேலின் முகம் மாறியது.
“ஆஸ்பத்திரியிலா, ஏன், என்ன ஆச்சு?” என்ற படேலை உற்றுநோக்கினார் ராம்சேகர். பத்மினி கூறிய விவரங்களைச் சுருக்கமாக அவரிடம் கூறினர்.
“பத்மினியா இப்படிச் சொன்னது? சுத்த முட்டாள்தனம். எதற்காக இப்படிச் சொன்னான்னு எனக்குத் தெரியலே. அவர் ஒரு வேலைக்காரி. அவரிடம் போய் நான் பழகுவதா? அப்போ என் மேலே சந்தேகப்படறீங்களா?” என்று கேட்டார் படேல்.
பிறகு “நான் நேத்து எட்டு மணிக்கே கிளம்பி என் நண்பன் சுரேஷ் வீட்டுக்குப் போனேன். அவன் வீட்டிலே சாப்பிட்டுட்டு சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போனேன். பெங்களூருவில் இன்னிக்குக் காலையிலே 10.00 மணிக்கு ஒரு வி.ஐ.பி.யைத் தொழில் நிமித்தமா பார்த்தேன். அவர் தன் காரிலே எனக்கு லிஃப்ட் கொடுத்தார். மெட்ராசுக்கு ஒரு மணி நேரம் முன்பாகத்தான் வந்து சேர்ந்தேன். இன்னும் என் பிரீஃப்கேசைக்கூடத் திறக்கல்லே’’ என்றார்.
பின்னர் விக்ரம் கேட்டுக்கொண்டதற்கிணங்க தன் நண்பர் சுரேஷின் தொலைபேசி எண், தான் ரயிலில் முன்பதிவு செய்திருந்த விவரங்கள் போன்றவற்றை அளித்தார்.
இன்ஸ்பெக்டர் விக்ரம் வெளியில் செல்ல, ராம்சேகர் மேலும் சில கேள்விகளை படேலிடம் கேட்டார்.
சிறிது நேரத்துக்குப் பின் ராம்சேகர் வந்தவுடன் இன்ஸ்பெக்டர் தான் சேகரித்த புதிய தகவல்களை ராம்சேகரிடம் பகிர்ந்துகொண்டார்.
“படேல் தன் நண்பர் சுரேஷ் வீட்டுக்கு நேற்று போனதாகச் சொன்னது உண்மை. அந்த சுரேஷைத் தொடர்புகொண்டேன். அவரும் அவருடைய மனைவியும் இதை உறுதி செஞ்சாங்க. அவங்க குரலிலே உண்மை தெரிஞ்சது. ரயில்வே துறையைத் தொடர்புகொண்டேன். படேல் தன் பெயரில் பெங்களூரு செல்ல முன்பதிவு செய்தது உண்மைதான். அவர் பெங்களூருவில் தங்கிய ஹோட்டலைத் தொடர்பு கொண்டபோது அவர்தான் அங்கு வந்து தங்கியதாக அவர்கள் சொல்கிறார்கள். புகைப்பட அடையாள அட்டையைப் சரிபார்த்த பிறகுதான் அறையின் சாவியைக் கொடுத்தார்களாம். தனக்கு லிஃப்ட் கொடுத்ததாக படேல் குறிப்பிட்ட தொழிலதிபரைக் கேட்டபோது அவரும் அது உண்மைதான் என்கிறார்”.
ராம்சேகர் சில நிமிடங்கள் தீவிரமாக யோசித்தார்.
“ராம்சேகர், குழப்பமாக இருக்கிறது. மருத்துவமனையில் இருக்கும் பத்மினி பொய் சொன்னாரா அல்லது படேல் நம்மிடம் சாமர்த்தியமாக நடந்துகொள்கிறாரா?” என்று விக்ரம் கேட்டார்.
“விக்ரம், உங்க இரண்டு கேள்விகளுக்குமே பதில் ‘இல்லை’ என்பதாக இருக்கக் கூடும். இந்தக் கேஸிலுள்ள மிகவும் வித்தியாசமான ஒரு கோணத்தை நாம கவனிக்கத் தவறிட்டோம்னு தோணுது” என்ற ராம்சேகர் மீண்டும் அந்த வீட்டுக்குள் நுழைந்தார்.
ராம்சேகரின் எண்ண ஓட்டம் என்ன? எதற்காக அவர் மீண்டும் அந்த வீட்டுக்குள் நுழைய வேண்டும்?
சென்ற வார விடை பணம் திருடுப்போனது தொடர்பாக நான்கு பேர் கூறியதைக் கேட்ட ராம்சேகர், குற்றவாளி யார் என்பதை எப்படி ஊகித்தார்? கிளம்பும்போது தெருவில் ராஜன் பேசியதைக் கேட்ட ஒருவர்தான் அந்தத் திருட்டை செய்திருக்க வாய்ப்பு உண்டு. ஆழ்துளைக் குழாய் போட்டுக்கொண்டிருந்த சத்தத்தில் நாற்பது அடி தள்ளியிருந்த நான்கு பேருமே ராஜன் கூறியதைக் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், சண்முகம் காது கேளா மாணவர்களுக்கான பள்ளி ஆசிரியர். எனவே, சற்று தொலைவில் இருப்பவர்களின் வாய் அசைவைக் கொண்டே அவரால் ராஜன் பேசியதைப் புரிந்துகொண்டிருக்க முடியும். எனவே, அவர் குற்றவாளியாக இருக்க வாய்ப்பு அதிகம். |
(துப்பறியலாம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT