Published : 10 Nov 2017 09:32 AM
Last Updated : 10 Nov 2017 09:32 AM
காதலில் தோல்வியடைந்தால் தாடி வளர்ப்பது, வாழ்க்கையை முடித்துக்கொள்வதெல்லாம் ஓல்டு ஃபேஷன். வியட்நாமில் காதல் முறிந்துவிட்டால் கூலாகப் பிரிந்துவிடுகிறார்கள். அது மட்டுமல்ல, காதலர்கள் பரிமாறிக்கொண்ட பொருட்களைக்கூட விற்பனைக்கு கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அப்படி விற்கப்படும் பொருட்களை வாங்கவே அங்கே ‘காதல் மார்க்கெட்’டும் உருவாகியிருக்கிறது.
வியட்நாமில் இயங்கிவரும் ‘ஓல்ட் ஃப்ளேம்ஸ்’ (Old Flames) என்னும் விந்தையான சந்தையில்தான் முன்னாள் காதலர்கள் தங்களுடைய காதல் நினைவுகளை விற்பனைக்குக் கொடுத்துச்செல்கிறார்கள். ஆர்வமிருக்கும் வாடிக்கையாளர்கள், இந்தச் சந்தையில் முன்னாள் காதலர்களால் கைவிடப்பட்ட காதல் நினைவுப் பரிசுகளை வாங்கிச் செல்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஹனோய் தெருவில் செயல்பட்டுவரும் இந்தச் சந்தையை டின் தங் (Dinh Thang) என்பவர் தொடங்கி நடத்திவருகிறார்.
காதலிக்கும்போது பகிர்ந்துகொண்ட காதல் கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், ‘ஸ்கராப்புக்ஸ்’, மெழுகுவர்த்திகள், வாசனை திரவியங்கள் போன்ற பொருட்கள் இந்தச் சந்தையில் விற்கப்படுகின்றன. காதல் முறிவுக்குப் பிறகு, காதலர்கள் பகிர்ந்துகொண்ட பரிசுகள் இருவருக்கும் வலியைத் தரும் நினைவுகளாக மாறிவிடும். இந்தச் சந்தை, காதல் பிரிவுத் துயரிலிருந்து வெளிவருவதற்கு பெரிதும் உதவுவதாகச் சொல்கிறார்கள் வியட்நாம் இளைஞர்கள்.
சமூக ஊடகங்களில் தற்போது அதிகளவில் செயல்பட்டுவரும் வியட்நாம் இளைஞர்கள், தங்களுடைய காதல் நினைவுகளைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று நினைக்கிறார்கள். “இன்றைய இளைஞர்கள் திறந்த மனதுடன் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் வலியிலிருந்து வெளியேவருவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கத் தயாராக இருக்கிறார்கள். காதல் பிரிவுத் துயரத்தைத் தனியாக அனுபவிக்க விரும்பவில்லை. இந்தச் சந்தை, அவர்களின் பிரிவுத் துயரத்துக்கு வடிகாலாகச் செயல்படுகிறது. தோற்றுப்போன காதலின் நினைவுகள் எப்போதும் வலியைத் தரக்கூடியதாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை” என்று சொல்கிறார் இந்தச் சந்தையின் நிறுவனர் டின் தங். இவர், சில கசப்பான காதல் முறிவுகளுக்குப் பிறகு தன்னிடம் சேர்ந்துவிட்ட தேவையற்ற நினைவுப் பரிசுகளை விற்பனை செய்யவே இந்தச் சந்தையை ஆரம்பித்திருக்கிறார். தற்போது, அதுவே அவரது தொழிலாக மாறிவிட்டது.
காதல் பிரிவுத் துயரைக் கடக்க முடியாமல் தவிக்கும் முன்னாள் காதலர்களுக்காக, இவர் ஒரு செய்திப் பலகையையும் இந்தச் சந்தையில் வைத்திருக்கிறார்கள். அந்தப் பலகையில் முன்னாள் காதலர்களுக்குத் தாங்கள் சொல்ல நினைக்கும் கருத்துகளைப் பதிவுசெய்யலாம். இந்தப் பலகையில், பல சுவாரசியமான செய்திகளைப் பார்க்க முடிகிறது. “நான் நலம்தான்”, “என்னுடைய முன்னாள் காதலரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நாம் இருவரும் எப்போதும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவேயில்லை என்றுதான் நினைக்கிறேன்” என்பன போன்ற செய்திகள் இந்தப் பலகையில் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தச் சந்தை, காதல் பிரிவு தவிர்க்க முடியாதது என்பதை உணர்த்த ஆரம்பித்திருக்கிறது. சென்ற தலைமுறையில்தான் காதல் திருமணங்கள் அறிமுகமாகியிருக்கும் வியட்நாமில், காதல் பிரிவுத் துயரைக் கடக்க உதவும் இந்தச் சந்தையை இளைஞர்கள் பெரிதும் வரவேற்கிறார்கள். அத்துடன், காதலில் தோல்வியுற்றவர்கள் மட்டுமல்லாமல் புதிய காதலை எதிர்நோக்கியும் இந்தச் சந்தைக்கு இளைஞர்கள் வருகிறார்கள் என்பது சுவாரசியமான முரண்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT