Published : 24 Nov 2017 11:21 AM
Last Updated : 24 Nov 2017 11:21 AM
உ
றவுகளைப் பேணுவது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல. சில நேரம் காதல் உறவில் பரஸ்பர அன்பு இருந்தாலும், அதை ஆரோக்கியமாகப் பேணுவது போராட்டமாக இருக்கும். ஓர் உறவு வலிமையுடன் தொடர்வதற்கு அன்பு மட்டும் போதுமானதில்லை என்பதுதான் அதற்குக் காரணம். ஒரு காதல் உறவு நீண்ட காலத்துக்கு நீடிப்பதற்குப் பரஸ்பர அன்பை மீறிய பல விஷயங்கள் தேவை. முயற்சி, அர்ப்பணிப்பு, நேரம் போன்ற அம்சங்கள் உறவை வெற்றிகரமாகப் பேணுவதில் பங்குவகிக்கின்றன. இந்த அம்சங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், உறவு என்பது எப்போதுமே தீர்மானகரமான விஷயமாக இருக்காது.
உறவும் தவிப்பும்
தங்களுடைய அன்பை வலிமையாக்கத் தொடர்ந்து முயன்றுகொண்டிருப்பவர்களே சிறந்த காதல் ஜோடி. அவர்கள் தங்கள் காதல் உறவை மெத்தனமாகக் கையாள மாட்டார்கள். காதல் உறவு சுமுகமாகச் செல்வதற்கான எல்லா முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்வார்கள். ஆனால், இன்றைய அவசர கதியான வாழ்க்கைச் சூழலில் பல காதல் ஜோடி தங்கள் காதல் உறவைப் பேணப் பெரிதும் சிரமப்படுகிறார்கள். சில நேரம் தங்கள் காதல் உறவை எப்படித் தக்கவைப்பது என்ற தெளிவில்லாமல் தவிக்கின்றனர். உறவைப் பேணுவதில் சிக்கல் வர ஆரம்பித்ததும் அவர்களுடைய உணர்வுகள், பந்தங்கள் அனைத்தும் சிதறத் தொடங்குகின்றன. அதைத் தடுப்பதற்கான முயற்சி எடுக்காவிட்டால், இறுதியில் அந்த உறவு முறிந்து விடுகிறது. இதைத் தடுத்து காதல் உறவை வெற்றிகரமாகப் பேண சில வழிகள் இருக்கின்றன:
கவனமாகக் கேளுங்கள்
காதல் உறவைப் பாதிக்கும் விஷயங்களை முதலில் பட்டியலிடுங்கள். இந்தப் பட்டியலை இருவரும் சேர்ந்து எழுதுவது நல்லது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் விஷயங்களை களைவதற்கான முயற்சிகளை இருவரும் சேர்ந்து முன்னெடுங்கள். உதாரணத்துக்கு, பேசித் தீர்க்கப்படாத பிரச்சினை, மனக்கசப்பு, கோபம் போன்றவை உறவைப் பாதிக்கும். இந்த விஷயங்களைக் களையாவிட்டால், காதல் உறவு நீடிப்பது கடினம். காதலர் பேசும் விஷயத்தைக் கவனத்துடன் கேளுங்கள். அத்துடன், உங்கள் காதல் துணைக்கு ஆர்வம் இருக்கும் விஷயங்களில் விருப்பம் இருந்தால் நீங்கள் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளலாம். அப்படி விருப்பமில்லாத விஷயமாக இருந்தால், அதை பேசத் தொடங்கும்போதே சொல்லிவிடுவது நல்லது.
வெளிப்படைப் பேச்சு
காதலருக்குப் பிடித்தமான, மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களைத் தெரிந்துவைத்துகொள்வது நல்லது. அந்த விஷயங்களைச் செய்வதற்கான வாய்ப்பை நீங்கள் உருவாக்கிக்கொடுக்கலாம். எப்படி உங்கள் உறவை மேம்படுத்தலாம் என்று இருவரும் வெளிப்படையாகப் பேசுவதும் பல பிரச்சினைகளைத் தீர்க்கும்.
காதல் உறவில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். நாம் எப்போதும் சரியாகத்தான் இருப்போம் என்கிற நம்பிக்கையே பல நேரம் உறவு முறிவுக்குக் காரணமாகிறது. அதனால், உங்கள் காதல் துணையின் பார்வையிலிருந்து உங்களுடைய செயல்பாடுகளைப் பரிசீலனை செய்துகொள்வது அவசியம்.
தவறிலிருந்து பாடம்
காதல் உறவை வெற்றிகரமாகப் பேணப் பொறுமை, புரிதல், கனிவு போன்ற அம்சங்கள் முக்கியமாகத் தேவை. மனிதத் தவறு என்பது அவ்வப்போது நிகழக் கூடியதே. அப்படி நீங்களோ உங்கள் துணையோ ஏதாவது தவறு செய்துவிட்டால், அதைப் பொறுமையுடன் கையாளுங்கள். பரஸ்பரம் கடுமையாக நடந்துகொள்ளத் தேவையில்லை. தவறுகளிலிருந்து பாடம் கற்றுகொண்டு, புரிதலுடன் உறவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
காதல் உறவில் ஏற்படும் சில பின்னடைவுகளுக்காக மனம் தளர வேண்டாம். நீங்கள் விரும்பும்படி எந்த உறவும் இருக்காது. எல்லா உறவிலும் சில தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படிப்பட்டதுதான் காதல் உறவும். அதனால், வெறுப்படைந்து உறவின் மீது நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. கூடுமான வரை, இருவரும் சேர்ந்து பிரச்சினைகளைக் கையாளலாம். உங்கள் காதல் உறவில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்தால், நம்பிக்கையான நண்பர்களிடமும் குடும்ப உறுப்பினர்களிடமும் ஆலோசியுங்கள். சில நேரம் வெளியில் இருப்பவர்களால்தான் சரியான வழியை உங்களுக்குக் காட்ட முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT