Published : 17 Nov 2017 09:25 AM
Last Updated : 17 Nov 2017 09:25 AM
பொ
துவாக பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள், ஒட்டுமொத்த கவனத்தையும் படிப்பிலேயே செலுத்திக்கொண்டிருப்பார்கள். ஆனால் பதினேழு வயதான சித்தார்த் ராய் இதில் சற்றே வித்தியாசப்படுகிறார். பள்ளிப் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தாமல், புத்தகம் எழுதுவது, பாட்மிண்டன் பயிற்சியில் ஈடுபடுவது, மேடைப் பேச்சுக்கு தயார்படுத்திக் கொள்வது எனப் பல விஷயங்களை பிளஸ் டூ படிப்பின் இறுதிக்கட்டத்தில் செய்துகொண்டிருந்தார். பள்ளிப் படிப்பை முடித்த சில நாட்களிலேயே அவர் இந்தியாவின் இளம் எழுத்தாளராக உருவெடுத்தார். சித்தார்த் ராய் எழுதிய ‘தி ஸ்பெஷல் ஃபிஷ்’ (The Special Fish) எனும் நூல், அவரை நாடு முழுவதும் பிரபலமாக்கியிருக்கிறது.
ஏதாவது ஒரு புள்ளியில் இருந்துதானே சித்தார்த்தின் எழுத்து உலகம் தொடங்கியிருக்க வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்திய அந்த நிமிடம் எது என்று சித்தார்த்திடம் கேட்டால், சுவாரசியமான கதையை விவரிக்கிறார். பள்ளியில் கணக்குப் பரீட்சை எழுதுவதிலிருந்து தப்பிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கவிதையை எழுத சித்தார்த் முடிவு செய்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் முதல் கவிதை மீது அதீத ஆர்வம் ஏற்பட்டு, சுமார் 6 மணி நேரம்வரை செலவிட்டு அதனை நிறைவு செய்தார். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைவரும் அந்தக் கவிதை சிறப்பாக இருப்பதாக தெரிவித்தனர். எதிர்பாராத விதமாக பள்ளி அளவிலான போட்டியில் சித்தார்த் கவிதையும் தேர்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதுதான் சித்தார்த்தின் எழுத்து உலகிற்கு அரிச்சுவடியானது.
படிப்புக்குப் பிறகு எழுத்து
அதன் பிறகு கதை, கட்டுரை, கவிதை என சித்தார்த் தொடர்ந்து எழுதினாலும், அவரைச் சுற்றியிருந்த சுற்றத்தார், படித்து டாக்டர் அல்லது இன்ஜினீயர் ஆனால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என தொடர்ந்து அவரிடம் அறிவுறுத்தியது. இதனால், சித்தார்த் அடி மனதில் இருந்த எழுத்தாளனுக்கு கொஞ்ச காலம் லீவு விட்டார்.
ஆனால், 11-ம் வகுப்பு படித்தபோது, சிறுகதை ஒன்றை எழுதத் தொடங்கிய சித்தார்த்தின் மனதில் மீண்டும் எழுத்துத் தீ பற்றிக்கொண்டது. தன்னுடைய ஆசையை முழுமையாக நிறைவேற்ற தொடர்ந்து எழுதிய சித்தார்த், இறுதியில் அதை ‘தி ஸ்பெஷல் ஃபிஷ்’ என்கிற நாவலாக உருவாக்கினார். அறிவியல் பிரிவு மாணவராக இருந்துகொண்டு நாவல் எழுதுவது சாதாரண காரியம் அல்ல.
பெற்றோர், ஆசிரியர்கள் அளித்த ஊக்கமும் உற்சாகமும் சித்தார்த்தை இந்தியாவின் இளம் எழுத்தாளராக மாற்றியிருக்கிறது.
வளர் இளம் பருவத்தினரின் வாழ்வியல் பிரச்சினைகளை அலசும் இந்த நூல் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கும், விவசாயிகளின் மேம்பாட்டுக்கும் செலவிடப் போவதாக சித்தார்த் அறிவித்திருக்கிறார்.
சமூகத்தின் மீதான அக்கறையும், அன்பும் எங்கிருந்து பிறந்தது என்று சித்தார்த்திடம் கேட்டால், “நமக்கு எல்லாவற்றையும் கொடுத்த இந்தச் சமூகத்துக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?” என்று எதிர் கேள்வி எழுப்புகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT