Last Updated : 03 Nov, 2017 09:49 AM

 

Published : 03 Nov 2017 09:49 AM
Last Updated : 03 Nov 2017 09:49 AM

துப்பறியும் ராம் சேகர் 07: காரைத் திருடியது யார்?

அந்தப் பூங்கா பசுமையாக இருந்தது. இலைகளையும் மலர்களையும் ஆங்காங்கே ஓடிக்கொண்டிருந்த குழந்தைகளையும் ரசித்துக்கொண்டிருந்தார் துப்பறியும் நிபுணர் ராம்சேகர்.

அ​ப்போது அங்கு வந்து சேர்ந்தார் இன்ஸ்பெக்டர் விக்ரம். “ராம்சேகர், நீங்க எங்கே இந்தப் பக்கம்? கவலைப்படாதீங்க. இப்போ உங்க அமைதியை நான் கெடுக்கப் போறதில்லே. எந்த க்ரைம் விஷயத்தையும் சொல்லப்போவதில்லை. இயற்கையை மனசார ரசியுங்க” என்றவர் தன்னுடன் வந்திருந்த நண்பரை அறிமுகப்படுத்தினார்.

அறிமுகப்படுத்திய அடுத்த நிமிடமே இன்ஸ்பெக்டர் விக்ரமுக்கு ஓர் அவசரத் தொலைபேசி அழைப்பு வந்து சேர, அவர் கிளம்பிச் சென்றார்.

விக்ரமின் நண்பரிடம் ஒப்புக்காகச் சில வார்த்தைகள் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்லத் ​தீர்மானித்தார் ராம்சேகர்.

அச்சுதன் என்ற பெயர் கொண்ட அந்த நபர், தயங்கித் தயங்கி ஒரு விஷயத்தை ராம்சேகரிடம் பகிர்ந்துகொண்டார். “நான் இங்கேதான்மூணு தெரு தள்ளி இருக்கிறேன். சமீபத்தில் என் காரை ஒருவன் திருடிவிட்டான். இது தொடர்பாக உங்களிடம் பேசத்தான் இன்ஸ்பெக்டர் விக்ரம் நினைத்தார். ஆனால், பொது இடத்தில் உங்களிடம் இது பற்றித் தொந்தரவு செய்யக் கூடாது என்றும் அவர் நினைத்தார்” என்றார்.

அச்சுதனை உற்றுப் பார்த்தார் ராம்சேகர். அச்சுதனின் முகத்தில் ஆழ்ந்த கவலை இருந்தது. ராம்சேகருக்குள் இருந்த துப்பறியும் நிபுணர் சிலிர்த்தெழுந்தார்.

“உங்க கார் எப்படித் திருட்டுப் போனது, பகலிலா இரவிலா ஏதாவது கடை வாசலிலா?”

“இல்லை. என் கண் எதிரிலேயே கார் பறிபோனதுதான் கொடுமை. ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்கு காரில் சென்றுவிட்டு கடைகளில் சில பொருட்களை வாங்கிக்கொண்டு, அந்தக் கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த என் காரை அடைந்தேன். அந்த காரில் ஏறி அதை ஸ்டார்ட் செய்ய முயலும்போது சட்டென அங்கு வந்துசேர்ந்தான் ஒருவன். அவன் கையில் துப்பாக்கி இருந்தது. “காரை ​வீட்டுக் கீழே இறங்கு. இனிமேல் இந்த கார் என்னுடையது” என்றான். நான் பயந்துகொண்டு இறங்கினேன். அப்போது அந்தப் பகுதியில் யாருமே இல்லை. மின்வெட்டு காரணமாக ஜெனரேட்டர் உதவியில் சில விளக்குகள் மட்டுமே மங்கலாக எரிந்துகொண்டிருந்தன. இதெல்லாம் அவனுக்கு வசதியாகி விட்டது” என்று பெருமூச்சு விட்டார் அச்சுதன்.

“அவனை நீங்கள் நன்கு பார்த்தீர்களா, அடையாளம் காட்ட முடியுமா?”

ராம்சேகரின் கேள்விக்கு, “அவன் தொப்பி போட்டுக் கொண்டிருந்தான். கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்திருந்தான். ஆனாலும்கூட அவன் முகத்தை என்னால் அடையாளம் காட்ட முடியும். என் காரின் பதிவு எண்ணே எனக்கு அன்று எதிரியாகி விட்டது” என்றார்.

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று ராம்சேகர் கேட்க, “என் காரின் பதிவு எண் 3. அதுதான் அவனுக்கும் ராசியான எண்ணாம். தவிர வயலெட்தான் அவனுக்கு ராசியான நிறமாம். என் காரும் வயலெட் நிறம். அதனால்தான் என் காரைத் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னான். எந்த ஜோதிடர் அவரிடம் காரைத் திருடிக் கொண்டுபோ என்று சொன்னாரோ தெரியவில்லை” என்று கசப்புடன் சிரித்தவர் தொடர்ந்து பேசினார்.

“உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டேன். இன்ஸ்பெக்டர் விக்ரம் என் நண்பர். குற்றவாளியைக் கண்டுபிடித்து காரை என்னிடம் எப்படியும் ஒப்டைப்பதாக ஆறுதல் கூறியிருக்கிறார். உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்”.

அடுத்த கேள்வியை ராம்சேகர் கேட்க முயல்வதற்கு முன்னால் எதிர்பாராத சில விஷயங்கள் நடைபெற்றன. அதே பூங்காவில் சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்த ஒருவனை உற்றுப் பார்த்தார் அச்சுதன்.

“அவன்தான்” என்று கத்தினார். அச்சுதன் இருந்த திசையைப் பார்த்த அவன், மின்னல் வேகத்தில் செயல்பட்டான். பூங்காவின் வாசலை நோக்கி ஓடினான். ராம்சேகரும் வெகு வேகமாக அவன் பின்னே ஓடினார்.

பூங்காவுக்கு வெளியே சென்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தான். அப்போது எதிரே ஒரு கார் வரவே அதுகுறித்தும் கவலைப்படாமல் அந்த காரைத் தாண்டி ஓடினான். அடுத்து ராம்சேகர் அவனைப் பின்தொடர, கார் நின்றது.

இதற்கிடையில் அந்தத் திருடன் வெகு வேகமாக ஓடி எங்கோ மறைந்துவிட்டான். ஓட்டுநர் வண்டியிலிருந்து இறங்கி ராம்சேகரைப் பார்த்து, “நீங்கள் தெருவில் விளையாட என் வண்டிதான் கிடைத்ததா? உங்களைப் பற்றி போலீஸில் புகார் செய்கிறேன்” என்று கத்தினார்.

அவரது இரு கைகளையும் பிடித்துக்கொண்ட ராம்சேகர், சற்றுத் தள்ளியிருந்த போலீஸ்காரரை அங்கு அழைத்தார்.

ராம்சேகரின் செயலுக்கு என்ன காரணம்? விடை அடுத்த வாரம்.

சென்ற வார விடை

செங்கமலக்கண்ணன் பற்றி நான்கு பேரில் யார் கூறியதை வைத்துக் கொண்டு சிறுவனின் அப்பா யாராக இருக்குமென ராம்சேகர் ஊகித்தார்?

சிறுவன் தனது அப்பாவைப் பற்றிக் கூறும்போது ‘காலையில் வரும்போது’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான். அப்படியானால், அவன் அப்பா இரவு நேரங்களில் பணியாற்றுபவர் என்பது தெளிவாகிறது. ஒரு ​நூலகரோ, பேக்கரியில் வேலை செய்பவரோ, விசா அலுவலகத்தில் மக்களை ஒழுங்குபடுத்துபவரோ இரவு வேலையில் பணியாற்ற வாய்ப்பு இல்லை. ஆனால், நாளிதழைப் பொருத்தவரை இரவில் பணியாற்ற வேண்டிய கடமை கணிசமானவர்களுக்கு உண்டு. எனவே நாளிதழில் சிறுவனின் தந்தை பணியாற்ற வாய்​ப்பு அதிகம் என்பதை யூகிக்கிறார் ராம்சேகர்.

(துப்பறியலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x