Published : 17 Nov 2017 09:25 AM
Last Updated : 17 Nov 2017 09:25 AM
த
லைநகர் டெல்லியில் நச்சுக் காற்றின் அளவு நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. டெல்லி மக்களின் வாழ்வில் முகமூடிகளும் காற்று சுத்திகரிப்பான்களும் தவிர்க்க முடியாத அம்சங்களாக மாறி வருகின்றன. குருகிராமைச் சேர்ந்த திருமண ஒளிப்படக் கலைஞர் ஆஷிஷ் பாரீக் இந்த அம்சத்தை வித்தியாசமாகப் பதிவுசெய்ய விரும்பினார். இந்த நிதர்சனத்தை ஒரு ‘திருமணத்துக்கு முந்தைய படப்பிடிப்பு’ (Pre-Wedding Photo Shoot) மூலம் பதிவுசெய்து, சமூக ஊடங்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
டெல்லியில் திருமண படப்பிடிப்புக்குப் பெயர்போன இடங்களில், திருமணத்துக்காகக் காத்திருக்கும் ஜோடியை வைத்து, இவர் ஒளிப்படங்களை எடுத்திருக்கிறார். இந்த ஜோடி டெல்லியின் நச்சுக் காற்றைச் சமாளிப்பதற்காக மாசைக் கட்டுப்படுத்தும் முகமூடிகளுடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர்.
“டெல்லியில் திருமண படப்பிடிப்புக்கு ஏற்ற பல அழகான இடங்கள் இருக்கின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அவை எரிவாயுக் கூடங்களாக மாறியதால், டெல்லி சாம்பல் நிறமாகியிருக்கிறது. இந்நகரின் மக்களுக்கும் புதிய முகங்கள் கிடைத்திருக்கின்றன” என்று தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஒளிப்படக் கலைஞர் ஆஷிஷ் பாரீக்.
இந்த ஒளிப்படங்களை டெல்லியின் பிரபல இடங்களில் ஒருநாள் முழுவதும் எடுக்கலாம் என்று திட்டமிட்டு இருந்திருக்கிறார்கள். ஆனால், அந்த ஜோடியாலும் ஒளிப்படக் கலைஞராலும் நச்சுக் காற்றின் தீவிரத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இரண்டு மணி நேரத்திலேயே படப்பிடிப்பை முடித்திருக்கின்றனர்.
முகமூடிகள் அணிந்த ஜோடிகளின் ஒளிப்படத் தொகுப்பு, இனி வரப்போகும் காலத்தில் டெல்லி எப்படி இருக்கும் என்ற கேள்வியைப் பல தரப்பினரிடமும் எழுப்பியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT