Last Updated : 03 Nov, 2017 09:48 AM

 

Published : 03 Nov 2017 09:48 AM
Last Updated : 03 Nov 2017 09:48 AM

குரு - சிஷ்யன்: குருவான என் மாணவன்!

 

ழைப்பு மணி அடித்தது. ஜன்னல் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தேன். என் பழைய மாணவன் நரேந்திரன் நின்றுகொண்டிருந்தான். ஆசையோடு வரவேற்று உள்ளே அழைத்து, உட்காரச் சொன்னேன். ‘பிளாஸ்டிக் நாற்காலி’ புதிதாக வந்த காலம். ‘நாற்காலியிலும் பிளாஸ்டிக்கா’ என்று ஒரு பார்வையை வீசி விட்டு, அவன் அமர்வதுபோல எனக்குப் பட்டது.

“என்ன இவ்வளவு தூரம், நரேன்?” என்றேன்.

“ஒன்னுமில்லை சார். சும்மாதான்..!” என்றான்.

“எப்படி இருக்கீங்க?”

“செஞ்சி மலையிலிருந்து வரேன். உங்களப் பார்க்கணும்னு தோணுச்சி..!”

“என்ன மலைக்குத் திடீர்ன்னு?”.

“தற்கொலை பண்ணிக்கத்தான்” என்றான் நரேன்.

இதைக் கேட்டதும் சற்றே அதிர்ந்து போனேன். அவனோ சிரித்துக்கொண்டே சொன்னான்; “ஆமா சார்! தற்கொலை பண்ணிக்க உச்சி மலைக்குப் போய்ட்டேன். விழுவதற்கு முன்னாடி, நாம எப்படிக் கீழ உருண்டு போவோம்னு பார்க்க ஒரு பெரிய கல்லத் தூக்கி உருட்டி விட்டேன். அது உருண்டு உடைஞ்சு போவதைப் பார்த்தவுடன், “இப்படி இந்தக் கல்லு மாதிரி சிதறிப் போகவா, இந்த உயிரும் உடம்பும். உயிரும் உடம்பும் வெறுங்கல்லான்னு நினைச்சுக்கிட்டே கீழ இறங்கி வந்திட்டேன். கீழே வந்தவுடன் உங்க நினைப்பு வந்தது. நீங்க வகுப்பில் அடிக்கடி சொல்லுவீங்களே, அந்த வசனத்தையும் வாய் சொல்லிச்சு; ‘இந்த நாசகார வாழ்க்கையில தற்கொலை பண்ணிக்கிடாத ஒவ்வொரு நாளும் மூச்சப் பிடிச்சிக்கிட்டு வாழ்ந்து தீர்ப்பதே பெரிய தியாகம்தான்’. அந்தத் தியாகத்தைத் தொடர்வோமேன்னு திரும்பிட்டேன்.”

சொல்லி முடிக்கும்வரை முகத்தில் அந்தச் சிரிப்பு மாறவேயில்லை.

காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் நான் பணியாற்றியபோது, நரேந்திரன் என் மாணவன். நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு, சுருட்டை முடி அழகு காட்டி, விரிந்த மார்போடு அமைதியாய் அவன் வகுப்புக்கு வந்துபோவதை நான் ரசித்திருக்கிறேன். அதைவிட ஆசிரியரின் ஒற்றைக் குரல் மட்டும் ஓங்க விடாமல், தொடர்ந்து வினாக்கள் கேட்பதன் மூலம் ஒருவிதமான கலந்துரையாடலாக வகுப்பறையை மாற்றி விடுவதில் நரேந்திரன் கெட்டிக்காரன்.

மூன்று ஆண்டுகள் இளங்கலைப் பட்டம் முடித்துப் போகும்போது நரேந்திரன் நெற்றியில் திருநீறு இல்லை. ‘என்ன காரணம்?’ என்று கேட்டதற்கு, “பஞ்சு சார் வகுப்புதான்” என்று பதில் சொன்னதாகக் கேள்விப்பட்டேன். அந்த மூன்றாண்டில் மற்றொரு முக்கிய நிகழ்வும் அவன் வாழ்க்கையில் நடந்தது. அதுதான் காதல். எவ்வளவோ எதிர்ப்புகள். கொலை மிரட்டல்களைத் தாண்டி, வரலாறு படித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டான்.

அதன் பிறகு, நான் புதுச்சேரிக்கு மாற்றலாகி வந்துவிட்டேன். ஆனால், பெரிதும் மனித உறவுகளைப் பொத்திப் பேணத் தெரியாத என்னோடும் அவன் தொடர்ந்து உறவுகொண்டிருந்தான்.

குடும்ப வாழ்க்கை குறித்து எப்போதும் பேச மாட்டான். ‘வறுமை, பட்டினிச்சாவு... இந்த வளமான பூமியில் இன்னும் இருப்பதற்கான நியாயம் என்ன சார்?’ என என்னிடம் அடிக்கடி கேட்பான். வாழ்வென்னும் அபத்தம், அது நிகழ்த்திக் காட்டும் துன்ப நாடகம் போன்றவைதான் அவனுடைய உரையாடலாக இருக்கும்.

அவன் காதலித்துக் கைப்பிடித்த மனைவியோ அப்படியே நேரெதிர். “புத்தகம், படிப்பு, கொள்கை, தத்துவம் இதெல்லாம் சோறு போடுமா? ஊர்ல எல்லாரையும் போலப் பிழைப்பதற்கு வழியைப் பார்” என்பதுதான் அந்தப் பெண்ணின் அன்றாட அறிக்கையாக இருக்கும். இதற்கிடையில் பச்சைக்கிளி போல இரண்டு அழகான பெண் குழந்தைகள்.

வாழ்வின் மைதானத்தில் பந்து போல வதைபடும் மாணவர்களை எதிர்கொள்ள நேரும்போது உள்ளம் பெரிதும் ஒடிந்துதான் போகிறது. இளமை ததும்பும் குறும்புகளோடு அறிமுகமான மாணவர்கள், வாழ்வின் துக்க வெள்ளத்தில் சிக்கித் துரும்பாய்த் துடிக்க நேர்வதைப் பார்க்கும்போது ஆசிரியர் என்கிற முறையில் துயரம்தான் மேலோங்குகிறது. நரேந்திரன் இந்தக் காலகட்டத்தில்தான் செஞ்சிமலை ஏறியது. என்னை வந்து பார்த்தது.

panjangam பஞ்சாங்கம்

இடையே மீண்டும் மாற்றலாகி காரைக்காலுக்கே போய்ச் சேர்ந்தேன். அந்த இரண்டு ஆண்டுகள், நரேந்திரனுடன் மீண்டும் அறிவார்ந்த உரையாடல்கள் தொடர்ந்தன. இப்போது ஓஷோ எழுதிய புத்தகங்களை வாங்கி வைத்திருந்தான். ஓஷோவின் சீடராகி இருந்தான். படித்தோம்; பேசினோம்; சில யோகப் பயிற்சிகளையும் கற்றுத் தந்தான்.

கடல் அலை கேட்கும் அளவுக்குக் கடலை ஒட்டிய வாடகை வீடு; பெரும்பாலும் மாலை நேரம் வந்துவிடுவான். அலைகள் போன்றே பேச்சு; பேச்சு; இப்பொழுது என் மாணவன், என்னைத் தாண்டி எங்கோ போய்விட்டான் என்பதை உணர்ந்தேன்.

மீண்டும் நான் புதுச்சேரிக்கு வந்த சில ஆண்டுகளில் ‘மகான் துறவி ஜீவ பிரமோத’ என்ற பெயரில் காரைக்காலிலிருந்து எனக்கு ஒரு புத்தகம் வந்தது. அது ஆன்மிகப் புத்தகம். ‘யார் இதை நமக்கு அனுப்பி இருப்பது?’ என்ற யோசனையோடு புத்தகத்தைப் புரட்டினேன்; பின் அட்டையைப் பார்த்தேன்; அடர்த்தியான தாடி வளர்த்த ஒரு துறவி! உற்றுப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அது என் மாணவன் நரேந்திரன்தான் என்று.

அடுத்தடுத்து வாழ்வில் ஏற்பட்ட எவ்வளவோ நெருக்கடிகளையும் துயரங்களையும் கடந்து முன்னேறிச் செல்லும் மனவலிமை நரேந்திரனுக்கு வாய்த்திருக்கிறது. இப்போது பார்த்து பல வருடங்கள் கடந்திருந்தாலும், எப்போதும் என்னுள் கலந்த மாணவனாகத்தான் நரேந்திரன் இருக்கிறான். என்றும் இருப்பான்.

கட்டுரையாளர்: முன்னாள் இணைப் பேராசிரியர்.
தமிழ்த்துறை, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x