Last Updated : 13 Oct, 2017 10:41 AM

 

Published : 13 Oct 2017 10:41 AM
Last Updated : 13 Oct 2017 10:41 AM

துப்பறியும் ராம் சேகர் 04: அந்தச் சொத்து எந்த மகளுக்கு?

அந்த சொத்துகள் எந்த மகளுக்கு?

ஜி.எஸ்.எஸ்.

உங்களில் ஒரு ராம்ஷேகர் – 4

இன்ஸ்பெக்டர் விக்ரமிடமிருந்து அழைப்பு வந்தது ராம்ஷேகருக்கு. ஆனால் அவர் அழைத்திருந்தது காவல் நிலையத்துக்கு அல்ல. ஒரு புதிய முகவரிக்கு.

அது ரவி வர்மாவின் பங்களா. அங்கே ரவி வர்மா உயிரற்ற நிலையில் காணப்பட்டார். அருகில் சோகத்துடன் உட்கார்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் விக்ரம். ராம்ஷேகரிடம் பின்னணியை விவரித்தார்.

ரவி வர்மாவின் குடும்பமும், விக்ரமின் குடும்பமும் பல வருடங்களாக நட்பாக இருந்தவை. ரவி வர்மாவுக்கு மூன்று மகள்கள். ஒரு முறை விக்ரமிடம் பேசும்போது தன் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களையெல்லாம் ஒரு இடத்தில் ஒளித்து வைத்திருப்பதாகவும், தன் அத்தனை சொத்துகளையும் தன்னுடைய ஒரு மகளுக்கு மட்டுமே கொடுக்க விருப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

‘’அத்தனையையும் சுயசம்பாத்தியம் என்பதால் ஒரே மகளுக்குத் தன் சொத்துகளை எழுத முடியும் என்றார். ஆனால் அது எந்த மகள் என்பதை அவர் என்னிடம் தெரிவித்ததே இல்லை. நேற்று இங்கு வந்திருந்தேன். அவருக்கு உடல் நலம் சரியில்லை என்றார். திடீரென்று அவருக்கு மாரடைப்பு உண்டானது. உடனே நான்கு வீடு தள்ளியிருக்கும் என் டாக்டர் நண்பரை வரச் சொன்னேன். அவர் வருவதற்குள் ரவி வர்மாவின் உடல் மோசமடைந்தது. தன் சொத்து ஆவணங்களையெல்லாம் எங்கே வைத்திருக்கிறார் என்ற விவரத்தை என்னிடம் சொன்னார். அந்தச் சொத்துக்களை எந்த மகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் என்னிடம் பகிர்ந்து கொள்வது நல்லதுதானே என்று கேட்டேன். ஆமாம் என்றார். ஆனால் அப்படிக் கூறிக் கொண்டிருக்கும்போதே இறந்து விட்டார். டாக்டர் வந்தபோது அவர் இறந்ததை உறுதி செய்தார்’’.

கூடத்தில் ரவி வர்மாவின் மூன்று மகள்களும் இருந்தனர். மூவரிடமும் ராம்ஷேகர் பேச்சுக் கொடுத்தார். முதல் மகள் காமினி கண்ணீருடன் ‘’என்னிடம்தான் அப்பா அன்பாக இருப்பார். யாமினியுடன் அடிக்கடி சண்டை போடுவார்”என்றாள்.

யாமினி கொஞ்சம் கோபத்துடன் குறுக்கிட்டாள். ‘’அப்பாவுக்கும், எனக்கும் அடிக்கடி நடந்தது வாக்குவாதம்தான். சண்டை அல்ல. அப்பா பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்தவர். ஆங்கிலம்கூட அவருக்கு ஆங்கிலேயரைப் போலத்தான் பேச வேண்டும். ஆனால் எனக்கு அமெரிக்காவில் பேசுவதைப் போன்ற ஆங்கிலம்தான் எட்டிப் பார்க்கும். இதைத் திருத்திக் கொண்டிருப்பார் அவர்” என்றாள்.

மூன்றாவது மகளான பத்மினி எதையும் பேசுவதாக இல்லை. அங்கிருந்த மாலை சூடப்பட்ட ரவி வர்மாவின் புகைப்படத்தின் ஃப்ரேமிலேயே தொடர்ந்து தன் கையை வைத்தபடி கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்.

‘இந்த மூவரில் யாரிடம் தன் சொத்துகளை ஒப்படைக்க ரவி வர்மா நினைத்திருப்பார்?’ தீவிரமாக யோசித்த ராம்ஷேகரின் மனதில் ஒரு பொறி எட்டிப் பார்த்தது.

இன்ஸ்பெக்டர் விக்ரமிடம் சென்றார். ‘’ரவி வர்மாவுடைய உங்கள் கடைசி சந்திப்பை எனக்கு இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும். அன்று நடந்ததை, அவரும், நீங்களும் பேசிக் கொண்டதை அப்படியே துளியும் மாறாமல் சொல்லுங்கள்”என்று கேட்டுக் கொண்டார்.

விக்ரம் பொறுப்புணர்வுடன் அன்று நிகழ்ந்ததை மீண்டும் பகிர்ந்து கொண்டார். அதில் தனக்கும் ரவி வர்மாவுக்குமான கடைசி உரையாடல் ஆங்கிலத்தில் நடைபெற்றது என்பதையும் தவறாமல் குறிப்பிட்டார்.

அதை கவனமாகக் கேட்டுக் கொண்ட ராம்ஷேகர் ‘’தனது மூன்று மகள்களில் ரவி வர்மா யாரைத் தன் சொத்துக்கு வாரிசாகத் தேர்ந்தெடுத்தார் என்பதை இப்போது என்னால் தெளிவாகவே யூகிக்க முடிகிறது”என்றார்.

பிறகு விக்ரமின் காதில் அந்த மகளின் பெயரை ரகசியமாகக் குறிப்பிட்டார். இரு நாட்களுக்குப் பிறகு சொத்து ஆவணங்களை அதன் மறைவிடத்திலிருந்து எடுத்தபோது அதிலும் ஒரு சிறு தாளில் அந்த மகளின் பெயரை எழுதியிருந்தார். ராம்ஷேகரின் யூகம் சரியாகத்தான் இருந்தது.

ராம்ஷேகரின் யூகம் என்ன? ரவி வர்மா தனது எந்த மகளை சொத்துக்கு வாரிசாகத் தேர்ந்தெடுத்தார்? எதைக் கொண்டு ராம்ஷேகரால் இதைக் கண்டுபிடிக்க முடிந்தது? விடை அடுத்த வாரம்.

(துப்பறியலாம்)

சென்ற வார விடை

சிவராமன் இடது கைப்பழக்கம் கொண்டவர் என்பது பல விஷயங்களின் மூலம் தெரிகிறது. இடது கைப்பழக்கம் கொண்டவர்கள் வழக்கமாக பெல்ட்டை அணிய சிரமப்படுவார்கள். தவிர ஆன்லைனில் அவர் ஆர்டர் செய்த நாற்காலிக்குப் பதிலாக வந்திறங்கிய நாற்காலியைப் பார்த்து அவர் ஆத்திரப்பட்டதற்குக் காரணம், அந்த நாற்காலி வலது கைக்காரர்கள் எழுதுவதற்கு மட்டுமே ஏற்றது.

சரவணனின் வலது கன்னத்தில் அறை விழுந்திருக்கிறது. எதிரில் நின்றவர் அறைந்ததாகக் கூறுகிறார். எதிராளியின் வலது கன்னத்தில் அறைந்தவர் இடது கைப் பழக்கம் உள்ளவராக இருப்பதே இயல்பு. எனவே, குற்றவாளி சிவராமன் என்று ராம்சேகர் தீர்மானிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x