Last Updated : 20 Oct, 2017 11:18 AM

 

Published : 20 Oct 2017 11:18 AM
Last Updated : 20 Oct 2017 11:18 AM

இளைஞர்களுக்குப் பஞ்சம்!

 

ளைஞர்கள் இல்லாத நாடு எப்படியிருக்கும்? இந்தக் கேள்விக்கான பதிலை அனுபவபூர்வமாக உணர வேண்டுமென்றால் பல்கேரியாவுக்குத்தான் செல்ல வேண்டும். ஏனென்றால், இளைஞர்களின் எண்ணிக்கை அங்கே அதலபாதாளத்தில் சென்றுவிட்டதால், என்ன செய்வதென்றே தெரியாத கவலையில் மூழ்கியிருக்கிறார்கள் அந்த நாட்டு சீனியர் சிட்டிசன்கள்!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவில் 1989-ம் ஆண்டு நிலவரப்படி மக்கள்தொகை 90 லட்சம். ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 70 லட்சமாகக் குறைந்துவிட்டது. வேலை தேடி இளைஞர்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்குச் சென்றதே பல்கேரிய மக்கள்தொகை சரிவுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இளைஞர்கள் இல்லாத நாடு என்ன மாதிரியான பின்னடைவைச் சந்திக்கும் என்பதற்கு பல்கேரியா சிறந்த உதாரணமாக மாறிவிட்டது.

இன்றைய நிலையில், பல்கேரியாவில் உள்ள பெரும்பாலான கிராமங்கள், நிசப்தமாகக் காணப்படுகின்றன. திருமணம் செய்ய இளையோர் இல்லாததால், குழந்தை பிறப்பும் குறைந்துவிட்டது. தாங்கள் சிறுவர்களாக இருந்தபோது மக்கள் நிரம்பி வழிந்த கிராமங்களில், தற்போது பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லையே என்கிற மனக்குறையில் இருக்கிறார்கள் சீனியர் சிட்டிசன்கள்.

பல்கேரியாவில் மக்கள்தொகை குறையக் குறைய, ஒவ்வொரு கிராமமும் தனித்தீவுபோல மாறி வருகிறது. சில ஊர்களில் வீதிக்கு ஒருவர் என்ற நிலையில் சில கிராமங்களில் மக்கள்தொகை குறைந்துவிட்டது. ஆட்கள் இல்லாததால் நிரந்தரமாகக் கடைகள்கூட இல்லை என்ற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. கிராம மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருள், மருந்து தேவைகளைப் பூர்த்திசெய்ய இலகுரக வாகனத்தின் உதவியுடன் நடமாடும் மளிகை மற்றும் மருந்துக் கடையைச் சில தன்னார்வலர்கள் நடத்துகின்றனர்.

ஒவ்வொரு கிராமமாகத் தங்கள் மளிகைக் கடையை ஓட்டிச் செல்லும் இவர்கள், அங்குள்ள மக்களுக்குத் தேவையான பொருட்களை ஓரளவு கட்டுப்படியாகும் விலைக்குக் கொடுக்கின்றனர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பல்கேரியாவில் உள்ள கிராமங்கள் ஒரு நூற்றாண்டுவரை பின்தங்கி விட்டதாகவே கருதப்படுகிறது.

பல்கேரியாவில் கோலோச்சிய கம்யூனிஸ்ட்கள், 1989-ல் வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கிய பிறகு பல்கேரியா பாதிக்கப்படத் தொடங்கியது. கிராமங்களிலிருந்து வேலைவாய்ப்புக்காக மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்தனர். இதனால், கிராமங்களில் மக்கள்தொகை படிப்படியாகக் குறையத் தொடங்கி, தற்போது மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது.

இளைஞர்களைக் கிராமங்களில் தக்கவைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளையும் பல்கேரியா அரசு எடுக்காமல் விட்டுவிட்டது. விளைவு, நாட்டின் வரலாறே தடம் தெரியாமல் அழித்துக்கொண்டிருக்கிறது. ஒரு புறம் மக்கள்தொகை குறைவு; இன்னொருபுறம் இளைஞர்கள் குறைவு என மத்தளம்போல இரண்டு பக்கமும் அடிவாங்கிக்கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால், இன்னும் 20 ஆண்டுகளில் பல்கேரியாவின் மக்கள்தொகை 50 லட்சத்துக்கும் இறங்கிவிடும் என்று அடிக்கப்பட்டுள்ள அலாரத்தால், அந்த நாடு ஆடிபோய்க்கிடக்கிறது.

இளையோர் இல்லாத நாடு தங்களின் அடையாளத்தை இழந்துவிடும் என்பதற்கு பல்கேரியா ஓர் உதாரணமாக மாறிவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x