Published : 25 Jul 2014 01:22 PM
Last Updated : 25 Jul 2014 01:22 PM
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் இளைஞர்களைத் தங்கள் பக்கம் இழுத்துப் பிடித்துவைத்தன. ஆப்பிள் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் வாட்ச்களின் பக்கம் தனது காலடியைப் பதித்துள்ளது.
நவீனத்தையும் ஆப்பிளையும் விரும்பும் இளைஞர்களின் ஆப்பிள் ஐவாட்ச் பற்றிய கனவு நனவாகும் காலம் நெருங்கிவிட்டது. வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்சை வெளியிடும் எனத் தெரிகிறது.
இந்த ஆப்பிள் ஐவாட்ச்சின் சிறப்பு என்னவென்றால் இதில் இருக்கும் பிராசசரும் ஆப்ரேட்டிங் சிஸ்டமும்தான். இந்த ஐவாட்ச்சை போனுடன் இணைத்தும் பயன்படுத்திக்கொள்ளலாம். தனியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். கிட்டத்தட்ட ஒரு குட்டி கம்ப்யூட்டரை கையில் அணிந்திருப்பதும் இந்த ஐவாட்ச்சைஅணிந்திருப்பதும் ஒன்றுதான்.
ஸ்கிரீன் அகலத்தின் அடிப்படையில் 1.7 இன்ச், 1.3 இன்ச் ஆகிய இரு அளவுகளில் இந்த ஐவாட்ச் தயாராகிறது. ஆண், பெண் இரு பாலரும் அணியும் வகையில் ஆப்பிள் ஐவாட்ச் இருக்கும். சிறிய அகலம் கொண்ட ஸ்கிரீன் ஐவாட்ச்கள் பெண்களுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்படுகின்றன.
ஆப்பிள் ஐவாட்சில் அமைந்திருக்கும் ஓலெட் டிஸ்ப்ளே பார்ப்பதற்குப் பளிச்சென்று இருக்கும். இதன் நெகிழ்வுத்தன்மை கொண்ட டிஸ்ப்ளே சந்தையில் கிடைக்கும் மோட்டரோலா, சாம்சங், எல்ஜி ஆகிய நிறுவனங்களின் ஸ்மாட்வாட்ச்களுக்குச் சரியான போட்டியாக அமையும் என்கிறார்கள்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி கியர், மோட்டரோலா நிறுவனத்தின் மோடோ 360, சோனியின் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவையும் இந்த ஆண்டில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
ஆப்பிள் ஐவாட்சுக்கு ஒரு ஸ்போர்ட்டி லுக் கிடைக்க வேண்டும் என்பதற்காக நைக் நிறுவனத்தின் பிரதான வடிவமைப்பாளர் ஒருவரை ஆப்பிள் நிறுவனம் ஐவாட்ச் வடிவமைப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இணையங்களில் கிடைக்கும் ஆப்பிள் ஐவாட்சின் படங்கள் இதயங்களை வருடுகின்றன.
நளினமாகவும் ஸ்போர்ட்டியாகவும் உள்ள ஐவாட்ச்கள் சந்தையை நிச்சயமாகக் கலக்கும் எனச் சொல்லலாம். இந்தியாவில் இந்த வாட்ச் கிடைக்க கொஞ்சம் காலதாமதம் ஆகலாம் என்பது வருத்தம் தரும் செய்தியே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT