Published : 18 Jul 2014 10:00 AM
Last Updated : 18 Jul 2014 10:00 AM

வேட்டிக்கு சல்யூட் அடிக்கும் இளசுகள்

பெண்களுக்கான உடைக் கட்டுப்பாடு தொடர்பாகச் சர்ச்சை ஏற்படுவதுதான் நம்மூரில் வழக்கம். ஆண்களுக்கான உடைக் கட்டுப்பாடு தொடர்பாக முதன்முறையாகச் சர்ச்சை வெடித்திருக்கிறது. தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் வேட்டி கட்டியவர்களை அனுமதிக்காததே பிரச்சினைக்குக் காரணம். 'இப்போல்லாம் யாரு வேட்டி கட்டுறா, இதைப் போய்ப் பெரிய விஷயமா பேசிக்கிட்டு' என்று நினைக்கிறீர்களா?

வேட்டி, நம்முடைய ஃபேஷன்தான் என்கிறார்கள் மாடர்ன் தமிழ் இளைஞர்கள். மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாகத் தெரிய வேட்டியையே இன்றைய இளைஞர்கள் பலரும் தேர்ந்தெடுக்கிறார்கள். மின்னலடிக்கும் வெண்மை நிறத்தில், தழையத் தழைய வேட்டி கட்டுவதைப் பெருமையாக நினைக்கும் இளைஞர்களும் நிறைய இருக்கிறார்கள்.

வேட்டி கெத்து

"வேட்டி கட்டினாலே ஒரு கெத்து வந்திடும். பெரிய மனுஷன் மாதிரி கம்பீரமா இருக்கும். காலேஜ் ஆண்டு விழாவுக்கு வேட்டிதான் கட்டிக்கிட்டு வருவோம்" என்கிறார் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் படிக்கும் முரளி. இதைச் சொல்லும்போது வேட்டியின் பிரகாசம் அவரது முகத்தில் தொற்றிக் கொண்டிருந்தது. "எங்க காலேஜுக்கு வேட்டி கட்டி வரலாம். ஜீன்ஸ் பேன்ட், டி ஷர்ட்தான் போடக் கூடாது. அந்தளவுக்கு வேட்டிக்கு இங்கே மதிப்பு ஜாஸ்தி" என்கிறார் அவரது நண்பர் ரஞ்சித் குமார்.

கோவை பேரூரில் உள்ள தமிழ்க் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் படிக்கும் சோ.நடராசு, சசிகுமார், பார்த்திபன் மூவரும் எல்லா நாட்களிலுமே வேட்டி, சட்டையையே ஆசையாக அணிகிறார்களாம். "எங்களால முடிஞ்ச அளவு பாரம்பரியத்தைக் காப்பாத்துறோம். இது வேகமானதா இல்லாம இருக்கலாம். ஆனா, இது நிலைக்கும். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. எங்க கல்லூரியே இதுக்குச் சிறந்த உதாரணம்." ஆமாம், அவர்களது கல்லூரி வேட்டிக்கு ஜே சொல்கிறது. திங்கள்கிழமையும் வெள்ளிக்கிழமையும் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து வர வேண்டும் என்பது கல்லூரி விதிமுறை.

இந்தக் கல்லூரியின் செயல்பாட்டையே ஆமோதிக்கிறார் வேட்டி, சட்டையில் சென்றுகொண்டிருந்த புதுச்சேரி இன்ஜினியர் குணசேகர் (22), "நாமதான் வேட்டி, சேலைய மதிக்கிறதில்ல. வெளிநாட்டிலேந்து பொங்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் பார்த்திருந்தா

வேட்டி, சேலையின் மதிப்பு நமக்குப் புரியும். வெளிநாட்டிலேர்ந்து நம்ம நாட்டுல வந்து தங்குற பொண்ணுங்ககூட சுடிதார்தான் போடுறாங்க. நான் வீட்டுல இருக்கும்போது வேட்டிதான் கட்டுவேன். குடும்ப விழாக்கள்ல வயதொத்த இளைஞர்கள் கூட்டமா வேட்டி அணிந்து வந்தாலே, தனி கெத்துதான்.” என்கிறார்.

புது யோசனை

இப்படி வேட்டியை விரும்பும் இளைஞர்கள் மத்தியில் வேட்டியைப் பிரபலப்படுத்தப் புது யோசனைகளையும் சொல்கிறார் பாளையங்கோட்டை வி.எம். சத்திரத்தைச் சேர்ந்த ஆர். நடராஜ்குமார் (18). - “வேட்டி, பேன்ட் ரெண்டிலும் சவுகரியம், அசவுகரியம் உண்டு. சில கல்வி நிலையங்கள்ல இருக்கிற மாதிரி ‘வேட்டி தினம்’ கொண்டாடி வேட்டி அணிவதை ஊக்குவிக்கலாம். எல்லா நாளுமே வேட்டி கட்டணும்னு கொண்டு வரலாம் ” என்கிறார்.

- கா.சு.வேலாயுதன், அ.அருள்தாசன்,
செ.ஞானப்பிரகாஷ், எ.பாலாஜி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x