Published : 06 Oct 2017 10:09 AM
Last Updated : 06 Oct 2017 10:09 AM
க
தவுகள் அடைக்கப்பட்ட இருட்டறையில் அமர்ந்திருக்கும்போது, திரையில் விரியும் உலகில் நம்மை ஒப்படைக்கிறோம். வெளியுலகை தற்காலிகமாக மறக்கச் செய்துவிடும், அந்தக் கதைக்களத்துக்குள் நம்மையும் பிரவேசிக்கச் செய்துவிடுவதுதான் உண்மையான திரை அனுபவமாக இருக்கமுடியும். முதல் காட்சியிலிருந்து பார்வையாளர்களின் உணர்வுகளை ஈர்த்துக்கொள்வதே ஒரு சிறந்த படம் எனலாம். அப்படியொரு படத்தை நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போது இடையூறுகள் ஏற்பட்டால், அந்தப் படம் தரும் திரை அனுபவத்தை நாம் இழக்க நேரிடும். இந்தியாவுக்கு வெளியே வேறு எந்த நாட்டின் சினிமாவிலும் ‘இடைவேளை’ என்ற இடையூறு கிடையாது. விடிய விடிய தெருக்கூத்து கலையை கண்டு வளர்ந்த நம் கலை மரபில், கட்டியக்காரனும் கோமாளியும் தோன்றி நம்மை மகிழ்வித்த பிறகே காவியக் கதாபாத்திரங்கள் தோன்றுவார்கள். அவர்கள் தோன்றி நடிக்கும்முன் விடப்பட்ட இடைவேளைதான் நம் திரைப்படங்களுக்கும் இடம்பெயர்ந்தது. விடிய விடிய நடந்தேறும் கூத்துக்கலைக்கு இது சரி; ஆனால் சுருங்கச் சொல்லி காட்சிமொழியால் ஈர்க்கத் துடிக்கும் திரைக்கலைக்கும் இந்த இடைவேளை தேவைதானா? இன்னும் நாம் விவாதித்துக்கொண்டேதான் இருக்கிறோம்.
‘சின்ன’ இடைவேளைகள்?
ஏற்கெனவே இடைவேளைகள் நம் திரை அனுபவத்தின் நூலை அறுத்துவிடும்போது, இன்று பெரும்பாலான படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகள் ‘சின்ன’ இடைவேளைகளாக மாறிவிடுகின்றன. பாடல் காட்சி வந்தாலே பார்வையாளர்களில் பலர், பாத் ரூமுக்கும் கேண்டீனுக்கும் எழுந்து செல்வது அந்த பாடலின் குற்றமா என்றால் அந்தப் பாடலையும் படத்தையும் கூட்டு முயற்சியில் உருவாக்கிய பலருக்கு அதில் பங்குண்டு என்பேன். என்றாலும் அதில் இசையமைப்பாளருக்கே அதிக பங்கிருப்பதையும் மறுபதற்கில்லை. இந்த இடத்தில் இசையமைப்பாளர் எங்கே கோட்டைவிடுகிறார் என்று பார்க்கும்முன் ஒரு பாடலின் அடிப்படையான வடிவம் பற்றி தெரிந்துகொள்ளவேண்டியது மிக முக்கியம்.
இயக்குநர் பாடல் இடம்பெறும் சூழ்நிலையைக் கூறிவிடுவார். சூழ்நிலையும் பாடலின் வழியே நகரும் கதையும் அந்தப் பாடலின் மெட்டுக்கான கற்பனையை இசையமைப்பாளருக்குத் தூண்டிவிடுகின்றன. பாடல் இடம்பெறும் சூழ்நிலைக்குச் சற்றுமுன்பு அந்தப் பாடலில் பங்குபெரும் கதாபாத்திரங்களுக்கு என்ன நடந்தது, இந்தப் பாடலில் அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை மெட்டும் அதன் குரலாக ஒலிக்கும் வரிகளும் வெளிப்படுத்திவிடுகின்றன. அதேநேரம் பாடல் வரிகளில் கொண்டுவரத் தேவையில்லாத உணர்வு வெளிப்பாடுகளையோ, அந்தப் பாடலில் கதாபாத்திரங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ நகரும் கதையின் ஒரு பகுதியாக நடக்கும் சம்பவங்களையோ பாடலின் இசைக்கோவையின் வழி வெளிப்படுத்த இயக்குநர் நினைக்கலாம். அதையும் பாடலுக்கான சூழ்நிலையை கூறும்போதே இயக்குநர் விளக்கிவிடுவார்.
பாடலின் நேர அளவும் வடிவமும்
இயக்குநர் கூறிய பாடலின் சூழ்நிலை, அதற்கு கதையை நகர்த்துவதில் எவ்வளவு பங்கிருக்கிறது என்பதைப் பொருத்து, எத்தனை நிமிட நேரம் கொண்ட பாடலை இடம்பெறச் செய்தால் கச்சிதமாக இருக்கும் என்பதை, அனுபவம் மிக்க இசையமைப்பாளர் உடனே முடிவு செய்துவிடுவார். அதில் தொடக்க இசை(First BGM), பல்லவி, சரணங்கள், இசைக்கோவை ஆகியவற்றுக்கான கால அளவு எவ்வளவு என்பதை பிரித்துக்கொள்ளவேண்டும். இவை அனைத்தும் சேர்ந்து ஒரு பாடலுக்கான வடிவமும்(structure), அதன் வேகமும்(Tempo)பார்வையாளரை வசீகரிக்கும் மறைமுகமான கலை அம்சங்கள் எனலாம்.
திரைக்கதையைப் போலவே பாடலின் வடிவம் என்பதும் இன்று மாறிக்கொண்டே வந்திருக்கிறது. ஆனால் இசையமைப்பாளர்களால் அதிகமாகப் பயன்படுத்தப்படும் அடிப்படையான வடிவம் என்பது இன்றும் அதிகம் பின்பற்றப்படுகிறது. அதில் முதலில் இடம்பெறுவது தொடக்க இசை. அடுத்து பல்லவி, மூன்றாவதாக வருவது செகண்ட் பிஜிஎம். நான்காவதாக இடம்பெறுவது முதல் சரணம். அடுத்து பல்லவியின் இரண்டு வரிகள் திரும்பவும் இடம்பெறும். இதன்பிறகு மூன்றாவது பிஜிஎம். அடுத்து இரண்டாவது சரணம். இறுதியாக பல்லவியை முழுமையாகவோ அல்லது அதில் பாதியையோ இடம்பெறச் செய்து பாடலை முடித்துவிடலாம்.
மெட்டு, இயக்குநரால் ஏற்றுகொள்ளப்பட்டு இறுதிசெய்யப்பட்டபின் அதில் இடம்பெறும் பிஜிஎம்மை இசையமைக்கத் தொடங்குகிறார் இசையமைப்பாளர். கதாபாத்திரத்தின் உள்ளத்து உணர்ச்சிகளை மெட்டு வெளிப்படுத்துகிறது என்றால் அதில் இடம்பெறும் பிஜிஎம்மையும் மெட்டின் உணர்ச்சியை விட்டு விலகாத வண்ணம் இசையமைப்பது மிக முக்கியம். பிஜிஎம்மை போலவே குரலோடு இசைக்கும் உபரி ஒலிகளை ‘பேக்கிங்’(Backing) என்போம். இந்த ‘பேக்கிங்’கை பாடலுக்கான நகாசு வேலை என்று கூறலாம். இதைப்பற்றி விரிவாக இன்னொரு அத்தியாயத்தில் பார்போம். ஆனால் பாடல்களை இடைவேளைகளாக கருதிப் பார்வையாளர்கள் எழுந்துசெல்லாமல் இருக்க, அவற்றின் டெம்போ எனும் அம்சம் மிக முக்கியமானது.
மன்னாதி மன்னரும் உப்புக்கருவாடும்
நான் இசையமைத்த ‘வம்சம்’படத்தில் ‘மன்னாதி மன்னரு’ பாடலை சூழ்நிலைக்கு ஏற்ற சரியான டெம்போவைக் கொண்ட பாடல் என்று கூறலாம். வெவ்வேறு குணங்கள், வெவ்வேறு குழுக்கள் என்று வீம்புடனும் வன்மத்துடனும் வாழும் மண்வாசனை மனிதர்களை ஒரே பாடலில் அறிமுகப்படுத்த வேண்டும். கதாபாத்திரங்களின் குணாதியத்துக்கு ஏற்ப பிஜிஎம்மின் டெம்போவை மாற்றி, ஏற்றி, இறக்கி இசையமைத்த அந்தப் பாடல் காட்சியில் ஒருவரும் திரையரங்கைவிட்டு எழுந்து வெளியே செல்லவில்லை. மெலடியான பாடல்கள் படத்தின் முதல்பாதியில் இடம்பெற்றுவிடும்.
இரண்டாம் பாதியில் மெலடிக்கு பெரும்பாலும் வேலை இருக்காது. தீர்வை நோக்கி நகரும் இரண்டாம்பாதியில் நாயகன், நாயகி இருவரும் மெலடி பாடிக்கொண்டிருக்கமுடியாது. அவர்கள் இணைந்து பங்கேற்கும் கொண்டாட்டமான பாட்டுக்கான சூழல் இரண்டாம்பாதியில் அமைந்தால், அது ‘முதல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘உப்புக்கருவாடு’ பாடலின் இசைபோல இறுதிவரை டெம்போ குறையாத பாடலாக இருக்க வேண்டும். பாடலின் இந்த வேகத்துக்கு கணினி இசை எப்படிக் கைகொடுக்கிறது என்பதை அடுத்து பார்ப்போம்.
தொடர்புக்கு tajnoormd@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT