Published : 27 Oct 2017 11:24 AM
Last Updated : 27 Oct 2017 11:24 AM
இ
ம்தியாஸ் அலி இயக்கத்தில் ஷாஹித் கபூர், கரீனா கபூர் நடிப்பில் வெளியான ‘ஜப் வி மெட்’ படம் வெளியாகி, இந்த அக்டோபர் 26-ம் தேதியுடன் பத்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. பாலிவுட்டின் காதல்-நகைச்சுவை வகைமையில் புதுமையை உருவாக்கிய படம் இது. கீத், ஆதித்யா என்ற இந்தப் படத்தின் நாயகன், நாயகி கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே இன்றளவும் பிரபலமாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில், இயக்குநர் இம்தியாஸ் படத்தைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவவல்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். “இந்தப் படத்தில் இப்போதும் நிறைய விஷயங்களை மாற்ற விரும்புகிறேன். ஆனால், பத்து ஆண்டுகளைக் கடந்த பிறகும் மக்கள் இன்னும் இந்தப் படத்தை ரசிக்கின்றனர். அதனால், அந்த மாற்றங்களைச் செய்தால் ரசிகர்களிடம் நிச்சயம் எனக்கு அடி கிடைக்கும்” என்று கிண்டலாகச் சொல்லியிருக்கிறார் இம்தியாஸ்.
வழக்கமான ஒரு காதல் கதையாக இல்லாமல் இருந்ததுதான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம். அதைப் பற்றிக் கூறும் அவர், “இந்தப் படத்தின் எளிமை ரசிகர்களைக் கவர்ந்ததில் எனக்குப் பெரிய மகிழ்ச்சி. இந்தப் படம் வாழ்க்கையைப் பற்றிய நேர்மறையான உணர்வுகளை அனைவருக்கும் கடத்தியிருக்கிறது. வாழ்க்கையின் மீது நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, கீத் கதாபாத்திரம், மொட்டை மாடியில் பேசும் வசனம், எனக்குத் தனிப்பட்ட முறையில் மனதுக்கு நெருக்கமானது - ‘வாழ்க்கை ஒரு விளையாட்டு. அதை அனுபவிப்போம். அதைப் பற்றிய அழுத்தத்தை உருவாக்கிக்கொள்வதால் அது எளிமையாகிவிடாது’. இந்தப் படத்தின் அழகை இந்த வசனம் விளக்கிவிடும்” என்று நினைவுகூர்ந்திருக்கிறார் அவர்.
இந்தப் படத்தில், முதலில் பாபி தியோலையும், ஆயிஷா டாகியாவையும் நடிக்கவைப்பதாக இருந்ததாகவும் அவர் சொல்லியிருக்கிறார். ஷாஹித், கரீனா இருவருக்கும் இந்தப் படத்தின் வெற்றியில் சமமான பங்கு இருப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT