Published : 11 Jul 2014 01:25 PM
Last Updated : 11 Jul 2014 01:25 PM

த்ரிஷா தந்தது திகில் பட்டியலா?

திரையுலகில் எத்தனையோ எரியும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ யார் என்ற கருத்துக் கணிப்பை முன்னால் வைத்துப் பலர் சோறு, தண்ணீர் இல்லாமல் விடிய விடிய விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதை அப்படியே விஜய்- அஜித் ரசிகர்களும் பிடித்துக்கொண்டு சமூக வலைதளங்களில் குழாயடிச் சண்டையில் இறங்கியிருக்கிறார்கள். இதற்கிடையில் இப்போது ரசிகர்கள் பலரும் தற்போது த்ரிஷாவை அர்ச்சனை செய்து வருகிறார்கள்.

முன்னணி நாயகியான த்ரிஷாவிடம் உங்கள் மனம் கவர்ந்த ஐந்து முன்னணி ஹீரோக்களை வரிசைப்படுத்தமுடியுமா என்று கேட்க, கொஞ்சமும் தயக்கமில்லாமல் அஜித்தில் ஆரம்பித்து விஜய்வரை ஐந்து பேரைச் சொல்லியிருக்கிறார்.

அவரது பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது அஜித். இரண்டாவது இடம் சூர்யாவுக்கு. மூன்றாவதாக விக்ரமையும், நான்காவதாக கமலையும், ஐந்தாவதாக விஜயையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வட அமெரிக்காவிலுள்ள செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபெட்னாவின் 27வது ஆண்டு விழாவில் த்ரிஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டபோது தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்குத்தான் இந்தப் பட்டியலைப் பதிலாக அளித்திருக்கிறார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் யாருடன் ஜோடியாக நடிக்கும்போது கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததை உணர்ந்தீர்கள் என்ற கேள்விக்குத்தான் மேற்கண்ட பட்டியலை அளித்துள்ளார் த்ரிஷா.

ஒவ்வொருவருடனும் ஒவ்வொரு விதமான தோழமையை உணர்ந்ததன் அடிப்படையில் த்ரிஷா தன் உள்ளக் கிடக்கையிலிருந்து மிக வெளிப்படையான பதிலாக அவர் இதைச் சொல்லியிருக்கக் கூடும்.

தொடர்ந்து பத்து ஆண்டுகளாக வெற்றிகரமான கதாநாயகியாக நடித்துவரும் ஒருவர் இப்படி வெளிப்படையாகப் பதில் கூறக் கூடாது என்று ரசிகர்கள் நினைப்பது எந்த வகையில் சரி என்பதை ரசிகர்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்.

அஜித் - விஜய் இருவருமே இரண்டு வெவ்வேறு நிலைகளில் தங்கள் நடிப்புப் பயணத்தை திறம்பட மேற்கொண்டு வருபவர்கள். ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘ஆதி,’ ‘குருவி’ எனப் பல படங்களில் விஜயின் ஜோடியாக நடித்திருக்கிறார் த்ரிஷா.

விஜயுடன் நல்ல தோழமை இல்லாவிட்டால் அவர் எப்படி இத்தனை படங்களில் நடித்திருக்க முடியும் என்பதையும் உணராமல், த்ரிஷா ஏதோவொரு குற்றப் பட்டியலை அளித்துவிட்டதுபோல சமூக வலைதளங்களைக் கழிவுநீர்க் கால்வாய் ஆக்கி வருவது ஆரோக்கியமானதுதானா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x