Published : 01 Sep 2017 11:17 AM
Last Updated : 01 Sep 2017 11:17 AM
உருது, இந்தி மொழிகளில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற பாடலாசிரியர் ஷக்கீல் பதாயூனி. கங்கை நதிக்கரையில் உள்ள மேற்கு உத்திரப்பிரதேச நகரமான பதாயூன் என்ற ஊரில் பிறந்தவர். தன் பெயரின் ஒரு பகுதியாக சொந்த ஊரை இணைத்துக்கொண்ட ஷக்கீல், இளம் வயதிலேயே அரபி, பாரசீகம், உருது ஆகிய மொழிகளைக் கற்கும் நல்வாய்ப்பைப் பெற்றார். பின்னர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அவர் படித்த காலத்தில், நாடெங்கும் ‘முஷாயாரா’ என்ற உருதுக் கவியரங்க நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குபெற்று விளங்கின. அவற்றில் தொடர்ச்சியாகப் பங்குபெற்று, பல பரிசுகள் வாங்கினார். அவரின் உறவுப் பெண் சல்மா என்பவரைக் காதலித்துக் கைப்பிடித்த ஷக்கீலின் உருதுக் கவிதைகள் புகழ்பெற்றவை.
இந்தித் திரைப்படங்களுக்குப் பாடல் எழுதும் விருப்பத்துடன் பம்பாய் நகரத்துக்கு வந்த ஷக்கீல், இசையமைப்பாளர் நௌஷாத்தின் அன்புக்குப் பாத்திரமாக ஒரு வரிக் கவிதையே போதுமானதாக அமைந்துவிட்டது. இசையமைப்பாளராக மட்டுமின்றி சிறந்த உருது மொழிப் புலவராகவும் விளங்கிய நௌஷாத், ஷக்கீலிடம் “உனது கவித்திறன் ஒரே வரியில் வெளிப்படும் விதமாகக் கவிதை ஒன்றை எழுதிக் கொடு” என்று கேட்டார். உடனே, ‘ஹம் தர்த் கா அஃப்சானா துனியா கோ சுனா தேங்கே, ஹர் தில் மே முஹபத் கீ ஏக் ஆக் லகா தேங்கே’ என்று எழுதினார் ஷக்கீல்.
இதன் பொருள், ‘நான் வேதனையின் பாடலை உலகத்துக்கு எடுத்துச் சொல்வேன். ஒவ்வொரு உள்ளத்திலும் காதல் என்ற தீயை ஏற்றிவிடுவேன்’. இங்கு ‘தர்த்’ என்றால் வேதனை என்ற பொருள் மட்டுமின்றி, நௌஷாத் அப்போது இசையமைத்துக் கொண்டிருந்த திரைப்படத்தின் தலைப்பும் ‘தர்த்’ என்றே இருந்தது.
எனவே, ‘நீங்கள் இசையமைத்துவரும் படத்துக்குப் பாடல் எழுதும் வாய்ப்புத் தரும் பட்சத்தில் அதைப் புகழடைய செய்வேன்’ என்ற பொருளும் அதில் சிலேடையாக அமைந்துவிட்டதை எண்ணி மகிழ்ந்த நௌஷாத், ஷக்கீலுக்கு உடனே வாய்ப்பளித்தார்.
‘தர்த்’ படத்துக்கு ஷக்கீல் எழுதிய அனைத்துப் பாடல்களும் பாராட்டப்பட்டு, தாம் எழுதிய முதல் படப் பாடல் மூலமே வெற்றிபெற்ற பாடலாசிரியராக ஷக்கீல் இந்தித் திரையுலகைத் தன் பக்கம் ஈர்த்தார். பின்னர் 24 வருடங்கள் நீடித்த நௌஷாத்-ஷக்கீல் கூட்டணியில் பல புகழ்பெற்ற பாடல்கள் உருவாயின.
ஷக்கீல் எழுதி, பின்னர் ‘டுன் டுன்’ என்ற பெயரில் நகைச்சுவை நடிகையாக வலம்வந்த உமாதேவி பாடிய ‘தர்த்’ படத்தின் ஒரு பாடல், அதன் இசை, பொருள், குரல் இனிமை ஆகியவற்றால் இன்றளவும் ரசிக்கப்படுகிறது. ‘அஃப்சானா லிக் ரஹீஹூம் தில்-ஏ-பேக்ரார் கா’ என்று தொடங்கும் அந்த அமரத்துவப் பாடலின் பொருள்.
பாடிக்கொண்டிருக்கிறேன் உள்ளத்தின் பரிதவிப்பை
விழிகளில் உன் வரவின் ஒளியைத் தேக்கிகொண்டு
நீ இல்லாத பொழுது வசந்தத்தில் இல்லை ஒன்றும்
(அச்சமயங்களில்)
அருகில் உள்ள வசந்தத்தின் எழிலை நோக்காமல்
அமைதியாய் இருக்கவே மனம் விரும்புகிறது
அருகில் உள்ள வசந்தத்தின் எழிலை நோக்காமல்
எனக்குச் செல்வம் எல்லாம் பெறும் வழி இருந்தும்
பிணக்கு காட்டும் காதலன் கிட்டும் விதியே உண்டு
பாடிக்கொண்டிருக்கிறேன் உள்ளத்தின் பரிதவிப்பை
உன் வரவின் ஒளியை விழிகளில் தேக்கிக்கொண்டு.
ஷக்கீல் பதாயினி போன்றே ‘தர்த்’ படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னனிப் பாடகி உமாதேவியும் தன் முதல் பாட்டிலியே புகழின் உச்சத்தை எட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT