Published : 29 Sep 2017 09:23 AM
Last Updated : 29 Sep 2017 09:23 AM

திரை வெளிச்சம்: பைனான்சியர்களின் பிடியில் தமிழ் சினிமா ?

மிழ்த் திரையுலகில், படத்தயாரிப்பு மிகவும் கடினமான தொழிலாக மாறிவருகிறது. சொந்தப் பணத்தை வைத்துப் படமெடுத்த சூழல் மாறி, தற்போது பைனான்சியர்களின் பிடியில் தமிழ் சினிமா சிக்கித் தவிக்கிறது. இயக்குநர்-நடிகர் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற முடிவெடுத்துவிட்டால், தயாரிப்பாளர் தயாரிக்க முன்வருகிறார். அவர் இக்கூட்டணிக்கு எவ்வளவு வியாபாரம் என்பதைப் பொருத்துப் படத்தின் மொத்தப் பொருட்செலவை முடிவுசெய்கிறார். இதற்குப் பிறகுதான் பைனான்சியர்கள் ஒரு படத்துக்குள் வருகிறார்கள். தயாரிப்பாளருக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ, அதற்குத் தகுந்தார்போல் தயாரிப்பாளரின் நிலம், வீட்டுப் பத்திரம் சொத்துப் பத்திரங்களைப் பிணையாக எழுதி வாங்கிக் கொண்டு பணம் அளிக்கத் தொடங்குவார்கள். நடிகருக்கு முன்பணமாகத் தரப்படும் காசோலையைத் தயாரிப்பாளர் வழியே கொடுக்கிறார்கள்.

லேப் எனும் கடிவாளம்

படம் முடிவானதுடன் தயாரிப்புக்கான லேபை முடிவு செய்துவிடுவார்கள். லேப் (Lab) என்பது ஒரு படத்தையும், அதன் இறுதிக் கணக்கையும் முடிக்கும் இடம். பைனான்சியர், தயாரிப்பாளரிடம் வட்டிக்குக் கொடுக்கும் பணத்துக்கு, அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் லெட்டர் பேடில் கடிதம் வாங்கி லேப்பில் இணைத்துவிடுவார். லேப்பில் இருக்கும் கணக்கை முடிக்காமல் எந்ததொரு படத்தையும் வெளியிட முடியாது. பைனான்சியர் தனது பாதுகாப்புக்காக, தயாரிப்பாளரிடம் வாங்கும் கடிதத்தில் , படத்தின் தொலைக்காட்சி உரிமை, மற்ற மொழி உரிமைகளையும், பணம் கட்டாத பட்சத்தில் தனக்கே சொந்தம் என எழுதி வாங்கிக்கொள்வார். எப்போதெல்லாம் பணம் கொடுக்கிறார்களோ அதை லேபில் இணைத்துக் கொள்வார்கள்.

வட்டியில் விழுவது ஏன்?

10 கோடி ரூபாய் படத்துக்கு, ஒரு மார்க்கெட் உள்ள கதாநாயகன் - இயக்குநர் இருந்துவிட்டால் படத்தின் தொலைக்காட்சி உரிமை ரூ. 2 கோடி, வெளிநாட்டு உரிமை ரூ. 1 கோடி, மற்றமொழி உரிமை ரூ. 1 கோடி என நான்கு கோடி ரூபாய்க்கு வியாபாரம் உத்தரவாதமாகிறது. பைனான்சியர், தயாரிப்பாளரிடம் அவரின் 6 கோடி ரூபாய் சொத்துகளை வாங்கிக் கொண்டு, நான்கு கோடி ரூபாய் உத்தரவாதமான வியாபாரத்தையும் அவர் பெயரில் எழுதி வாங்கி கொண்டு, 10 கோடி ரூபாய் கொடுப்பார். தயாரிப்பாளரும் 6 கோடி ரூபாய் சொத்தை விற்று, அந்தப் பணத்தில் தயாரிப்பதைவிட இது நல்லவழி என நினைக்கிறார். படத்தின் லாபத்தில் வட்டியை எளிதாகக் கட்டிவிட்டு, சொத்தை மீட்டுக் கொள்ளலாம் என நம்புகிறார்கள். இங்குதான் மாட்டிக் கொள்கிறார்கள்

குட்டிபோடும் வட்டி

ஒரு படம் நிறைவடையக் குறைந்தது 10 மாதம் ஆகிறது என்று வைத்துக்கொண்டால், கடனாகப் பெற்ற 10 கோடி ரூபாய்க்கு, வட்டி மட்டும் 5 கோடி ரூபாய் சேர்ந்துவிடுகிறது. படம் எடுக்கவே 10 கோடி ரூபாய் கடன் வாங்கிய தயாரிப்பாளரால் வட்டியை மாதாமாதம் கட்ட முடியாது. 5 கோடிக்கு வட்டிக்கு, ஒரு வட்டி போட்டு தயாரிப்பாளரின் 6 கோடி ரூபாய் சொத்துகளைத் தன் பெயரில் எழுதி வாங்கிக் கொள்வார் பைனான்சியர். 10 கோடி ரூபாய் அசல் அப்படியே இருக்கும்

பைனான்சியரே அவருக்கு வேண்டிய விநியோகஸ்தரைத் தேர்வுசெய்து படத்தை 5 கோடி ரூபாய்க்கு எம்.ஜி முறையில் விற்று அதை எடுத்துக் கொள்வார். சாட்டிலைட், வெளிநாட்டு உரிமத்தை விற்று ரூ. 3 கோடியை எடுத்துக் கொள்வார். ஆக அவருடைய 10 கோடியில், அசல் 8 கோடி ரூபாய் பைனான்சியருக்கு வந்து விடுகிறது. (எம்.ஜி என்பது மினிமம் கேரண்டி வியாபாரம். முதலில் ஒரு தொகை பெற்றுக் கொண்டு படம் வெளியான பின்னர் பட வியாபாரத்தில் லாபத்தைப் பகிர்ந்துகொள்ளும் முறை)

எங்கே சிக்கிக் கொள்கிறார்கள்?

படம் மிகப் பெரிய வெற்றியடைந்தால் பைனான்சியர் மீதம் உள்ள ரூ. 2 கோடியை எடுத்துக் கொண்டு தயாரிப்பாளருக்கு வியாபாரத்தில் 50 சதவீதம் மட்டுமே கொடுப்பார் எனக் கூறப்படுகிறது. அதற்குப் படம் சுமாரான வெற்றி எனக் காரணம் சொல்வார் எனவும் தயாரிப்பாளரால் இதைக் கண்டுபிடிக்க முடியாது எனவும் கூறுகிறார்கள். எஞ்சியிருக்கும் மற்ற மொழி உரிமைகள் தயாரிப்பாளருக்குத் திரும்பக் கிடைக்கும். அதாவது பெரிய வெற்றிப் படமாக இருந்தால் தயாரிப்பாளருக்கு ரூ. 4 கோடியோ ரூ. 5 கோடியோ கிடைக்கும். படம் சுமாராகவோ மோசமாகவோ அமைந்தால், தயாரிப்பாளருக்கு எதுவும் கிடைக்காது. ஆனால் பைனான்சியர் அந்தச் சுமாரான வியாபாரத்தில் அவருக்கு அசலில் வரவேண்டிய ரூ. 2 கோடியை எடுத்துக் கொள்வார்.

உறுதியான லாபம் யாருக்கு?

மிகப் பெரிய வெற்றிப் படத்தில் தயாரிப்பாளர், கடனாகப் பெற்ற ரூ. 10 கோடி மற்றும் ரூ. 5 கோடி வட்டியையும் சேர்த்து ரூ. 15 கோடி முதலீடுசெய்து, ரூ. 5 கோடி சம்பாதிக்கிறார். படம் சுமார் அல்லது தோல்விப் படமாகும் பட்சத்தில் தயாரிப்பாளர் ரூ. 15 கோடியை முழுவதுமாக இழக்கிறார். இதில் அவர் சம்பாதித்த சொத்து, வட்டி பணத்துக்குப் போய் விடுகிறது. ஆனால் ரூ. 10 கோடி முதலீடுசெய்த பைனான்சியர், படம் வெற்றியோ தோல்வியோ ரூ. 15 கோடி உறுதியாகச் சம்பாதிக்கிறார் என்று கூறப்படுகிறது.

சினிமா தயாரிக்கவரும் தயாரிப்பாளர்கள் முடிந்தவரை சொந்தப் பணத்தில் படமெடுப்பதே புத்திசாலித்தனம். பெரும் தொகைவட்டி கட்டாமல் தோல்வியைத் தாங்கி கொள்ளலாம். தன்னுடைய பொருளாதாரத்தை நம்பிப் படமெடுக்காமல், பைனான்சியரின் பொருளாதாரத்தை நம்பிப் படமெடுக்கும் தயாரிப்பாளரின் நிலைமை படத்தின் வெற்றி, தோல்வியைத் தாண்டி என்றுமே கவலைக்கிடம்தான் என்பதைத் தற்போதைய கோடம்பாக்கத்தின் நிலை உணர்த்துகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்கள் ஏன் வங்கிகளை அணுகுவதில்லை என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் வங்கிகள் கேட்கும் பட்ஜெட், வியாபாரம், ஊதியம் உள்ளிட்ட தகவல்களைத் தர தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை என்பதுதான் அடிப்படையான சிக்கலாகத் தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x