Published : 15 Sep 2017 11:16 AM
Last Updated : 15 Sep 2017 11:16 AM
ப
த்திரிகையாளராக இருந்து திரைப்பட இயக்குநராக வெற்றிபெற்றவர் சுசி.கணேசன். ‘விரும்புகிறேன்’, ‘பைவ் ஸ்டார்’, ‘கந்தசாமி’ படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘திருட்டுப் பயலே’ படத்தின் இந்தி மறுஆக்கத்துக்காக பாலிவுட்டில் பிரவேசித்தார். தற்போது தமிழ் சினிமாவுக்குத் திரும்பி ‘திருட்டுப் பயலே 2’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார்... அவருடன் உரையாடியதிலிருந்து…
இந்திப் படங்கள் இயக்கச் செல்லும் தமிழ் இயக்குநர்கள் பெரும்பாலும் மும்பையில் குடியேறுவதில்லை… ஆனால் உங்களை அந்த நகரம் அங்கேயே இருக்க வைத்துவிட்டதே..
வன்னிவேலம்பட்டி என்ற கிராமத்திலிருந்து கல்லுப்பட்டி வந்துபோது அந்த ஊர் எனக்குப் பிரமிப்பாக இருந்தது. கல்லுப்பட்டியிருந்து மதுரை வந்தபோது அது பிரமிப்பைக் கொடுத்தது. மதுரை டூ சென்னை வந்தபோது மதுரை சிறியதாகத் தெரிந்தது. சென்னையிலிருந்து மும்பை சென்றது, இந்திய அளவில் ஒரு தயாரிப்பாளராகவும் என்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றுதான். மும்பையையும் தாண்டி எனது இலக்கு இருக்கிறது. அதை நோக்கிய பயணத்தின் ஒரு இடமாகவே மும்பையில் குடியேறியதைப் பார்க்கிறேன். எப்படியிருந்தாலும் நமது ஊரையும் காற்றையும் எப்போதும் இழக்க விரும்பமாட்டேன். புதிய மொழியைக் கற்றுக்கொள்வது குற்றமல்ல என்பதை மும்பை வாழ்க்கை உணர்த்தியது. எனக்குத் தெரியாத இந்தி, என் மகனுக்குச் சரளமாகத் தெரியும். இதுபோன்ற நன்மைகளையெல்லாம்தாண்டி, மும்பை பட உலகில் கிடைத்த அனுபவங்கள் மிக அழகானவை. அங்கேயிருக்கும் கம்ப்போர்ட் ஸோன் வேறு. இந்திப் படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக ஆனது நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.
பாலிவுட் உலகில் நீங்கள் கண்ட மாறுபட்ட அம்சங்கள் என்ன?
இங்கே படத்தை உருவாக்குவதில் மட்டும்தான் ஒரு தயாரிப்பாளரின் மொத்த கவனமும் இருக்கும். ஆனால் பாலிவுட்டில் அதுமட்டுமே அல்ல; அங்கே ஒரு படத்தை ரசிகர்களிடம் கொண்டுசெல்வதற்கான புரமோஷனில்தான் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வார்கள். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். அங்கே நடிகர்களிடம் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும்போது 60 நாட்கள் படப்பிடிப்புக்கு கால்ஷீட் என்றால் 20 நாட்கள் புரமோஷன் கால்ஷீட் என்று ஒப்புக்கொண்டு கையெழுத்திடுகிறார்கள். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில், விளம்பர டூரில், உற்சாகத்துடன் கலந்துகொள்ளவார்கள். எவ்வளவு பெரிய நட்சத்திரம் என்றாலும் மும்பையைத் தாண்டி, டெல்லி, அகமதாபாத் என்று எந்த வடமாநில நகரத்துக்கு அழைத்தாலும் வந்துவிடுகிறார்கள். புரமோஷன் முழு வீச்சில் செய்யப்படுவதால்தான் அங்கே முதல்நாள் வசூல், இரண்டாம் நாள் வசூல், மூன்றாம் வசூல் என்று ஓபனிங் அவ்வளவு அபாரமாக இருக்கிறது.
அதேபோல் அங்கேயிருக்கும் வேலைமுறையும் வேறுதான். இங்கே இயக்குநரின் முன்னால் உதவி இயக்குநர்கள் உட்காரவே யோசிப்பார்கள். அவ்வளவு பணிவும் மரியாதையும் காட்டுவார்கள். அங்கே அந்தக் கலாச்சாரமெல்லாம் கிடையாது. இயக்குநரின் முன்னால் கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி சிகரெட் பிடிப்பார்கள். அங்கே நீங்கள் ஒரு டைரக்டோரியல் டீமை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் “ஸ்டார்ட்… கட்...” கூடச் சொல்லத் தேவையில்லை. அதையும் அவர்களே சொல்லிக்கொள்வார்கள். நீங்கள் மேற்பார்வை செய்தால்போதும்.
வியாபாரச் சந்தையைப் பொருத்தவரை பாலிவுட்டுக்கு மொத்தம் 11 ஏரியாக்கள். மகாராஷ்டிரா, கோவா, குஜராத் உள்ளிட்ட பகுதிகளை பாம்பே ஏரியா என்று அழைக்கிறார்கள். டெல்லி, பிஹார், உத்தரப்பிரதேசம் மூன்றும் சேர்ந்து ஒரு பகுதி, ராஜஸ்தான், ஹரியானா ஒரு பகுதி. சவுத் என்று அவர்கள் அழைப்பது தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு தென்மாநிலங்களை. மொத்த வசூலில் 11 சதவீதம் மட்டும்தான் சவுத்தில் கிடைக்கிறது. அப்படியென்றால் மிதமுள்ள 89 சதவீதமும் வட இந்திய வசூல்தான்.
திருட்டுப் பயலே படத்தின் கதை மீது உங்களுக்கு எப்படி என்ன தீராத ருசி?
(சிரிக்கிறார்) ‘திருட்டுப்பயலே 2’நானே எதிர்பாராமல் அமைந்த ஒன்று. தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் எனக்கு நெருங்கிய நண்பர். ஒரு வேலையாகச் சென்னை வந்தபோது அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். 2006-ல் ‘திருட்டு பயலே’ படத்தை எடுத்ததன் மூலம்தான் அவர் சினிமா தயாரிப்பில் நுழைந்தார். இந்தப் பத்து ஆண்டுகளில் நான் இரண்டு படங்கள்தான் இயக்கியிருக்கிறேன். அவர்களோ இருபது வெற்றிப் படங்களை தயாரித்திருக்கிறார்கள். அப்போதுதான் கல்பாத்தி சார் “ திருட்டு பயலே 2 எடுக்கலாமா?” எனச் சட்டென்று கேட்டதும் நான் ஒருவரிக்கதை ஒன்றைக் கூறினேன். “ உடனே தொடங்குவோம்” என்று கூறிவிட்டார். அவ்வளவு பிடித்துவிட்டது அவருக்கு.
முதல் பாகத்தில் இருந்த யாருமே 2-ல் இல்லை; பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா என நட்சத்திரத் தேர்வே புதிய கதை சொல்கிறது. இது வேறு கதையா?
முதல் பாகத்தில் கதாநாயகன் உயிரோடு இருந்தால் அவனைச் சுற்றி அடுத்த பாகத்துக்கான கதை பின்னுவது ஒருவகையான சீகுவெல். கதையின் அடிப்படை அம்சத்தையும், மையக் கருத்தையும் அப்படியே வைத்துக்கொண்டு வேறு நட்சத்திரங்கள் நடிப்பதும், கதாநாயகன் மாறுவதும் ஹாலிவுட் சீகுவெல்களில் சர்வசாதாரணம். அங்கே எல்லாமே நட்சத்திரங்களும் திரைக்கதையும் மேக்கிங்கும்தான். ‘திருட்டுப்பயலே 2’ அப்படியொரு சவாலான முயற்சிதான். இதுவரை நீங்கள் பார்த்த பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் மூவரையும் இதில் நீங்கள் பார்க்க முடியாது. நறுக்கென்று சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு மாறுபட்ட போலீஸ் கதை. திரையைவிட்டு உங்கள் கழுத்தை வேறெங்கும் திரும்ப முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT