Published : 22 Sep 2017 10:01 AM
Last Updated : 22 Sep 2017 10:01 AM
தமிழில் நடித்த படங்கள் வரவேற்பு பெறாத நிலையில், தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி, அங்கே பிஸியான நாயகியாக வலம்வருபவர் ரகுல் ப்ரீத் சிங். விரைவில் தமிழ்ப் படங்களில் மீண்டும் வலம்வரவிருக்கும் அவரைப் படப்பிடிப்பு ஒன்றில் சந்தித்தபோது...
அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்துவிட்டீர்கள். தொடக்கத்தில் தோல்விகளை சந்தித்த நாட்களை திரும்பிப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?
நான் திரும்பிப் பார்ப்பதே இல்லை. அப்படிச் செய்தால் இறந்த காலத்தில் வாழ்வதாக ஆகிவிடும். எதிர்காலத்தை யார் பார்ப்பது? நல்ல படமோ, மோசமான படமோ, தோல்விப் படமோ, வெற்றிப்படமோ வெளியான இரண்டு நாட்களில் அதை மறந்து விடுவேன். அடுத்த என்ன என்பதைத்தான் ஆர்வமாக எதிர்நோக்குவேன். இருந்தாலும் பல நல்ல படங்களில் நடித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சியே.
நீங்கள் முதலில் அறிமுகமான கன்னடப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தும் அதன்பிறகு அங்கே நடிக்கவில்லையே?
அந்தப் படத்துக்குப் பிறகு மூன்று வருட இடைவேளை எடுத்துக் கொண்டு கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து டிகிரி வாங்கினேன். அதன்பிறகே மீண்டும் நடிக்க வந்தேன். அப்போது கன்னடம், தெலுங்கு, தமிழ் என எந்த மொழியும் எனக்குத் தெரியாது. ஒரு தெலுங்குப் படம், ஒரு தமிழ்ப் படம் என அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. நடித்தேன். தமிழில் தொடக்கம் சொதப்பினாலும் தெலுங்கில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தேன். கன்னடத்தில் நடிக்கக்கூடாது என்றெல்லாம் திட்டமிடவில்லை.
தெலுங்கில் தொடர்ச்சியாக நடிக்க ஏதேனும் விசேஷக் காரணம் இருக்கிறதா?
பல நல்ல படங்கள் வந்துகொண்டே இருப்பதால் தொடர்ந்து நடிக்கிறேன். கண்டிப்பாகத் தெலுங்கு சினிமாதான் எனக்கு நெருக்கமானது. அங்கு என்னை ஒரு ‘அம்மாயி’யாக ஏற்றுக் கொண்டு, எனக்கு உதவிகள் செய்து, எனக்கென ஒரு அடையாளம் கொடுத்தார்கள். என் கனவை நனவாக்கினார்கள். எனவே, தெலுங்கு சினிமாவுக்கு எப்போதுமே என் மனதில் இடம் இருக்கும்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி படத்தில் நடித்து வருகிறீர்கள். எப்படி இருக்கிறது?
‘யாரியான்' படத்துக்குப்பின் இந்தியிலும் நல்ல வாய்ப்புகள் வரவில்லை. இப்போது வந்துள்ளது. எந்தப் படத்தையும் மொழி ரீதியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. அதை ஒரே கலை வடிவமாகத்தான் பார்க்கிறேன். கொரிய மொழிப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன். எந்த மொழியில் நடிப்பதும் எனக்குப் பிரச்சினையில்லை. எந்த மொழியாக இருந்தாலும் நல்ல நடிப்பைத் தரவேண்டும். அவ்வளவுதான்.
தெலுங்குப் படங்களில் கதாநாயகிகளுக்கு குறைவான முக்கியத்துவமே இருக்கும். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பல காலமாக அதுதானே நிலைமை. இது ஆணாதிக்க உலகம். திரைத்துறை மட்டுமல்ல. தற்போது சூழல் மாறிவருகிறது. இந்தியில் ‘குயின்', ‘சிம்ரன்' போன்ற அற்புதமான படங்கள் வருகின்றன. வித்யாபாலன் அற்புதமான படங்களில் நடித்துவருகிறார். 'ஹே தில் ஹை முஷ்கில்', 'ஹே ஜவானி ஹே திவானி' உள்ளிட்ட சில இந்தி கமர்ஷியல் படங்களிலும் நல்ல பெண் கதாபாத்திரங்கள் இருக்கின்றன. இங்கு நயன்தாரா நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். அனுஷ்கா சிறந்த படங்களில் நடித்து வருகிறார். நான் இந்த வருடம் நடித்து வெளிவந்துள்ள இரண்டு தெலுங்கு படங்களும் நாயகியை மையப்படுத்திய படங்களே. நாயகியை மையப்படுத்தியே படங்கள் இருக்க வேண்டும் என்று கூறவில்லை. இப்போது நாயகன் - நாயகிக்குச் சமமான முக்கியத்துவத்துடன் திரைக்கதைகள் எழுதப்பட்டு வருகின்றன. அப்படியே பல கதைகள் வரவேண்டும் என நினைக்கிறேன். அப்படியான சூழலை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன்.
நீங்கள் நடித்த பல படங்கள் வெற்றியடைந்து வருகின்றன. உங்களை அதிர்ஷ்டத் தேவதை என்று கூறலாமா?
நான் அப்படி நினைக்கவில்லை. அதை நான் ஊக்குவிப்பதும் இல்லை. நாளையே ஒரு படம் ஓடவில்லை என்றால் எனக்கு அதிர்ஷ்டம் இல்லையென்று சொல்லிவிடுவார்கள். அதிர்ஷ்டம் என நினைத்திருந்தால் எல்லோரும் அவர்களது படங்களில் என்னை நடிக்க வைப்பார்களே. ‘பாகுபலி'யில்கூட நடித்திருப்பேன். ஒரு படம் என்பது பெரிய குழுவின் கூட்டு முயற்சி. வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் அது என்னுடையது மட்டுமல்ல.
இந்திய அளவில் கால்ஃப் வீராங்கனையாக இருந்துள்ளீர்கள். தற்போதும் விளையாடி வருகிறீர்களா?
இப்போதும் விளையாடுகிறேன். ஆனால், மாதத்துக்கு ஒருமுறைதான். படப்பிடிப்பு இடைவெளியில் எப்பொழுது நேரம் கிடைத்தாலும் உடனே கால்ஃப் விளையாட்டுதான்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT