Published : 30 Dec 2016 09:01 AM
Last Updated : 30 Dec 2016 09:01 AM
இரைச்சல் நிறைந்த பேய்ப் படங் களுக்கு நடுவே ஆர்ப்பாட்டம் இல்லாமல் திகிலூட்ட வந்திருக்கிறது ‘துருவங்கள் பதினாறு’. இருக்கையை விட்டுப் பார்வையாளர்கள் நகர முடியாதபடி மர்மத் திரைக்கதையைக் கச்சிதமாகப் படைத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன்.
தீபக் (ரஹ்மான்) முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர். ஐபிஎஸ் அதிகாரி ஆவதை லட்சியமாகக் கொண்ட ஒரு இளைஞர் இவரைச் சந்திக்க வருகிறார். தான் கையாண்ட ஒரு கொலை வழக்கை அவரிடம் விவரிக்கிறார் தீபக். ஃபிளாஷ்பேக்காக விரியும் கதையில் ஒரு தற்கொலை நிகழ்ந்ததாகப் புகார் வருகிறது. பின்னர் விசாரணையில், அது கொலை என்பது தெரியவருகிறது. அந்தக் கொலை சம்பந்தமான விசாரணை யில் அதைச் சுற்றிலும் பல குற்றங்கள் ஆங்காங்கே நடந்திருப்பதும் கட்டவிழ் கிறது. ஒவ்வொருவரும் தத்தமது பார்வை யில் யார் கொலையாளி என ஊகிக் கிறார்கள். தீபக்கும் அவரது உதவியாளர் கவுதமும் கிட்டத்தட்ட கொலையாளியை நெருங்கிவிடும் நேரத்தில் நடக்கும் ஒரு திருப்பம் அவர்களது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. அது என்ன என்பதுதான் கதை.
பொதுவாக, துப்பறியும் கதை என் றாலே கதாநாயகன் அதிபுத்திசாலி யாகவே செயல்படுவார். ஆனால் இங்கு முதன்மைக் கதாபாத்திரங்களான தீபக் கும் கவுதமும் ஆங்காங்கே கோட்டைவிடு கின்றனர். தீபக் செல்போனை சார்ஜ் செய்ய மறந்துவிடுவது, கவுதம் தொப் பியை மறந்துவிடுவது, தீபக் வீட்டின் முகவரி தெரியாமலேயே அவசரக்குடுக் கையாக ‘ஓகே, வீட்டுக்கு வந்துடுறேன் சார்’ எனச் சொல்லி போன் அழைப்பை கவுதம் துண்டிப்பது போன்ற காட்சி களில், திறமையான காவல்துறை அதிகாரிகளும் சொதப்பக்கூடியவர்களே எனக் காட்டப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் இருவரும், கிடைத்த துப்புகளை புத்திசாலித்தனமாக ஒன்றோடு ஒன்று கோத்து கொலையாளியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.
Every detail counts (ஒவ்வொரு விவரமும் முக்கியம்) என்கிறது படத்தின் துணைத் தலைப்பு. அதற்கு ஏற்ப, படத்தில் விசாரணை நடத்தப்படும் விதமும் காவல் நிலையத்துக்குள் நிகழும் சின்னச் சின்னச் சம்பவங்களும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எளிமையான கதையை முன்னும் பின்னுமாகக் கலைத்துப் போட்டுப் புத்திக்கூர்மையோடு திரைக்கதையாக மாற்றியிருக்கிறார் கார்த்திக் நரேன். பாத்திரங்களின் பார்வையில் கதை விரிவதால் இது குழப்புவதற்காக மெனெக்கெட்டுச் செய்ததுபோல அல்லாமல், இயல்பாகவே இருக்கிறது. தொடக்கத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே கதை புரியும் எனும் அளவுக்குத் துல்லியமாக வேலைபார்த்திருக்கிறார்.
புலனாய்வாளரின் ‘இன்ஸ்டிங்க்ட்’ சமாச்சாரம் படம் முழுக்க உலவுவது கொஞ்சம் ஓவர். எல்லாத் துப்புகளும் அடுத்தடுத்து வரிசைகட்டுவதும் திரைக் கதை எடுத்துக்கொள்ளும் சலுகை யாகவே தோன்றுகிறது. விபத்து, கொலை, தப்பி ஓட்டம் என்று பலர் நடமாடும் அந்த இரவில் யார், என்ன, ஏன் என்ப தெல்லாம் தெளிவாக இல்லை.
துப்பறியும் கதை என்பதால் அனுபவ மில்லாத நடிகர்களின் மிகையான நடிப்போ, அசட்டுத்தனமான ரியாக்ஷனோ திகிலுக்குப் பதிலாக எரிச்சல் ஏற்படுத்தி விடும். ஆனால், அனைத்துப் புதுமுகங் களும் கதைக்கு ஏற்றபடி நடித்திருப்பதும் இயக்குநர் அதைத் திறம்படக் காட்சிப்படுத்தியிருப்பதும் சிறப்பு.
கவுதமாக நடித்திருக்கும் பிரகாஷின் நடிப்பும் அவரது கதாபாத்திரமும் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் மனநிலையை அழகாகப் பிரதிபலிக்கின்றன. தேர்ந்த நடிகர் என்று நிரூபித்திருக்கிறார் ரஹ்மான்.
இருளையும் ஒளியையும் அளவாகப் பாய்ச்சிப் பயமுறுத்தியிருக்கிறார் ஒளிப் பதிவாளர் சுஜித் சாரங். வெறும் சத்த மாகக் காதில் அறையாமல் திகிலூட்டும் ஒலிகளைக் கோத்திருக்கிறார் இசை யமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்.
வலுவான புலனாய்வுக் கதை, கச்சிதமான திரைக்கதை, நேர்த்தியான படமாக்கம், மர்மக் கதைக்கேற்ற ஒளிப் பதிவு, இசை ஆகியவற்றுடன் மிரட்டு கிறது இளைஞர் கார்த்திக் நரேனின் ‘துருவங்கள் பதினாறு’. சிற்சில குறை களை மீறி தாராளமாகப் பாராட்டத்தக்க படம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT