Last Updated : 09 Dec, 2016 10:44 AM

 

Published : 09 Dec 2016 10:44 AM
Last Updated : 09 Dec 2016 10:44 AM

தமிழ்த் திரையின் சூரியகாந்தி: ஜெ.ஜெயலலிதாவுக்கு ஓர் அஞ்சலி

தமிழ்த் திரையில் தனித்துத் தடம் பதித்த இயக்குநர் ஸ்ரீதர். காதலையும் அதன் புனிதத்தையும் காட்சிமொழியால் ஆராதித்த அவர், முற்றிலும் புது முகங்கள் நடிக்கும் படம் என்று அறிவித்து எடுத்த திரைப்படம் ‘வெண்ணிற ஆடை’. முதன்மைக் கதாநாயகியாக நடிக்க முதலில் நிர்மலாவைத் தேர்வு செய்திருந்தார் இயக்குநர். என்ன நினைத்தாரோ பிறகு ஹேமமாலினியை ஒப்பந்தம் செய்துவிட்டார். சில நாட்கள் படப்பிடிப்புக்குப் பின் அவரது நடிப்பில் ஸ்ரீதருக்கு திருப்தியில்லாததால் ஜெயலலிதாவைக் கதாநாயகி ஆக்கினார். இரண்டு பேர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் தலையில் ஏற்றப்பட்ட சுமை அபரிமிதமானது. ஆனால், அற்புதமாகச் செய்திருந்தார். படத்தின் டைட்டில் கார்டில்கூட ‘ஜயலலிதா’ என்று அவர் பெயரைத்தான் முதலில் போடுவார்கள். அப்புறம்தான் நாயகன் ஸ்ரீகாந்த் பெயரே வரும்.

மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை போன்ற பேதைக் காதலியின் கதாபாத்திரம். என்னவொரு நடிப்பு! அந்தப் படம் வயது வந்தவர்களுக்கான முத்திரையுடன் வந்த படம். ஜெயலலிதா முதிர்ந்த குழந்தை போல டாக்டரைக் கலாட்டா செய்து பாடும் ‘நீ என்பது என்ன?’ பாடலுக்கு அவர் ஆடியிருந்த நடனமும், அந்தக் காட்சிகளில் அவரது மழலைப் பேச்சும் எங்களையெல்லாம் வாயடைக்கவைத்தன. அப்போது எங்களுக்கு 16, 17 வயதுதான் இருக்கும். எங்களின் சமவயது கொண்ட ஜெயலலிதா 1965 மார்ச் மாதத்திலிருந்து எங்கள் கனவுக் கன்னியானதில் வியப்பில்லை.

இரண்டாவது படத்திலேயே ஈர்த்தார்

‘வெண்ணிற ஆடை’க்கு அடுத்து வந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் தன்னைவிட பலவயது மூத்தவரான எம்.ஜி.ஆருடன் எந்தத் தயக்கமும் இல்லாமல் நடித்தார். அந்தப் படத்திலேயே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கெமிஸ்ட்ரி மிக இயல்பாக உருவாகிவிட்டது. இயற்கையாகவே அழகான தோற்றம்கொண்ட ஜெயலலிதா அந்த இள வயதிலேயே படத்துக்குப் படம் நடிப்பில் வேறுபாடுகள் காட்டினார். அதனால் அவரை மானசீகமாக விரும்பக்கூடிய ரசிகர்கள் பெருகினார்கள்.

1961 வாக்கில் நடித்து 1966 வாக்கில் வெளிவந்த Epistle என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது நடிப்பை வெகுவாகப் பாராட்டில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் விமர்சனம் வந்ததாக நினைவு. 1966 பொங்கலுக்கு வந்த ‘அன்பே வா’ நன்கு ஓடியபோதும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ அளவுக்கு ஓடவில்லை. இதில் சரோஜா தேவிக்குப் பதிலாக ஜெயலலிதா நடித்திருந்தால் வெள்ளி விழாதான், தலைவர் கெடுத்துட்டாரே என்று அப்போது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பேசிக்கொண்டார்கள்.

முகராசி

அடுத்து வந்த ‘முகராசி’ அந்தக் கவலையைப் போக்கிற்று. அதில் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு சிலம்பம் கற்கும் காட்சியை யாரும் மறக்க முடியது, அதற்கேற்ற உடல்வாகு கொண்ட நடிகை அன்று அவர்தான். முகராசி என்ற தலைப்பு ஏற்ப அவரது முகம் காந்தமாய்க் கவரத் தொடங்கியது. அதேபோல் நளினம், அழகு, வேகம் ஆகிய மூன்று அம்சங்களையும் நடனத்தில் இலகுவாக வெளிப்படுத்திய திறமை அவரிடம் குடிகொண்டிருந்தது. அவருக்கு அதிகப் படங்களில் நடனம் அமைத்தவர் தங்கப்பன் மாஸ்டர். அது அவருக்கு ஒரு அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். தங்கப்பன் செவ்வியல், நவீன நடனத்தின் சரியான கலவை. அதற்காக அவரது ‘அன்னை வேளாங்கண்ணி’ படத்தில் ஜெயலலிதா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார்.

அவரது நடனத்திறனுக்கு இன்னொரு சம்பவம். ‘புதிய பூமி’ படத்தில் இடம்பெற்ற ‘நெத்தியிலே பொட்டு வைச்சேன், நெஞ்சை அதில் தொட்டு வைச்சேன்’ என்ற பாடலுக்கு ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்தினார்கள். அது எடிட் ஆகி முடிந்ததும், “ கால் முட்டியை ஒடைச்சிட்டீங்க மாஸ்டர், என் மீது கோபமோ?” என்றாராம் ஜெயலலிதா சிரித்துக்கொண்டே. ஆனாலும், படத்தில் அந்தச் சிரமம் தெரியாமல் அபாரமாக ஆடியிருப்பார்.

நடிகர் திலகத்துடன் மின்னியவர்

சின்ன பாத்திரமே செய்திருந்தாலும் ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தில் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சுந்தரராஜன், நாகேஷ் போட்டி போட்டுக்கொண்டு நடித்த படம் அது. அதில் அந்த இருவரையும் விட தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அவர்களையே ஓரங்கட்டியிருப்பார். அதன் பிறகு ஜெயலலிதா பாலசந்தர் படம் எதிலும் நடிக்கவில்லை.

‘கண்ணன் என் காதலன்’ படத்தில் அவர் நடிப்பு அபாரமானது. ‘குமுதம்’ பத்திரிகை, தன் விமர்சனத்தில், “வழக்கமாக எம்.ஜி.ஆர். படங்களில் எம்.ஜி.ஆர். மட்டும்தான் இருப்பார். ஆனால் இதில் கதையும் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, ஜெயலலிதா நடிப்பையும் பாராட்டியிருந்தது.

‘கிலோனா’ என்னும் இந்திப் படத்தின் தழுவலான ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில், முதல் பகுதியில் சிவாஜி கணேசனின் மிகையான நடிப்பைத் தன் இயல்பான நடிப்பால் ஜெயலலிதா வென்றிருப்பார். பிற்பகுதியில் சிவாஜி ரொம்பவும் அடக்கி வாசிப்பார். படம் முழுதும் ஜெயலலிதாவின் நடிப்பு, கதாபாத்திரத்தை மட்டுமே முன்னிறுத்துவதாக இருக்கும்.

வாழ்வின் பிரதிபலிப்பு

1970-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த ‘மாட்டுக்கார வேலன்’, ‘எங்க மாமா’ ஆகிய இரண்டு படங்களில் ‘எங்க மாமா’ படத்தில் அவருக்கு நடிக்க நிறைய வாய்ப்பு இருந்தது. ‘மாட்டுக்கார வேலன்’ படம் வெள்ளி விழா கண்டதற்கு அவர் அந்தப் படத்தில் அவ்வளவு அழகாக இருந்ததும் ஒரு முக்கிய காரணம் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. ‘தங்கக் கோபுரம்’, ‘முத்துச் சிப்பி’ படங்கள் இரண்டுமே அவரை மையமாக வைத்துச் சுழலும் படங்கள். அந்தப் படங்களுக்கு முழு நியாயம் செய்திருப்பார்.

‘சுமதி என் சுந்தரி’ படத்தின் கதையை அவரது வாழ்க்கை சம்பந்தப்பட்ட கதை என்றுகூடச் சொல்லலாம். படத்தில் வரும் கதாபாத்திரத்தைப் போலவே அவர் தனது அபிலாஷைகளுக்கு எதிராகவே சினிமாத் துறைக்கு வந்தார். பொற்கூண்டு வாழ்க்கையிலிருந்து விடுபடத் துடிக்கும் ஒரு நடிகையின் கதையில் பிரமாதமாக நடித்திருந்தார். அந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமான அன்றையப் பிரபல நடிகை அவர்.

அரசியல் வாழ்வின் ஆரம்பம்

‘குமரிக் கோட்டம்’ படத்தில் அவரது இரட்டை வேட நடிப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை, அதற்காகவே அது நன்றாக ஓடியது. அவர் காலத்தின் இளம் நடிகர்களான ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோ ருடன் நடித்த காதல் காட்சிகளைப் பெண்களும் விரும்பி ரசித்தனர்.

சோவின் நாடகமான ‘யாருக்கும் வெட்கமில்லை’ படமாக்கப்பட்டபோது ஜெயலலிதா அதில் நடித்தார். மிக வித்தியாசமான பாத்திரம் அது. அதில் நடித்ததின் மூலம் சோவுடனான நட்பு பலப்பட்டது. ஏற்கெனவே ‘அடிமைப் பெண்’ சோவுடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. அதே நேரத்தில் துக்ளக்கில் ஒரு கட்டுரைத் தொடர் அப்போது வெளிவந்தது. அதை எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. ‘அது யார் என்று கண்டுபிடியுங்கள்’ என்று வாசகர்களுக்குப் போட்டி அறிவித்தார் சோ. கடைசியில் அது ஜெயலலிதாதான் என்று அறிவித்தார். ஜெயலலிதாவின் வாசிப்பு ஆளுமையை உணர்த்திய கட்டுரைகள் அவை. அதன் மூலமே தன் அரசியல் வாழ்க்கைக்கும் ஒரு ஆரம்பத்தை ஏற்படுத்திக்கொண்டார் என்று சொல்லலாம்.

தன்னை நோக்கித் திரும்ப வைத்தவர்

புடவை, நவீன ஆடைகள் என எந்த ஆடையும் பொருந்தும் உடல்வாகு அவருக்கு இருந்தது. ‘வந்தாளே மகராசி’, ‘பாக்தாத் பேரழகி’ படங்களில் சண்டைக் காட்சிகளிலும் தான் சளைத்தவரில்லை என்று நிரூபித்தார். அவருடைய உயரிய ஆற்றல் வெளிப்பட்ட படம் ‘சூரியகாந்தி’. ‘அபிமான்’ இந்திப் படத்தின் தழுவல் என்றபோதும் தமிழுக்கு ஏற்ப மாற்றியிருந்தார் முக்தா சீனிவாசன். கணவனுக்கு மனைவியிடம் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை குறித்த படம். ஜெயலலிதா சொந்தக் குரலில் பாடிய பாடல்கள் இடம்பெற்ற இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா தந்தை பெரியார் தலைமையில் நடந்தது.

தனது திரையுலக வாழ்க்கையில் தான் எடுத்துக்கொண்ட எந்தப் பாத்திரத்திலும், தமிழ்த் திரையுலகையே ஒரு சூரியகாந்தியாகத் தன்னை நோக்கித் திரும்ப வைத்தவர் ஜெயலலிதா என்றால் மிகையில்லை.

- கட்டுரையாளர் தமிழ்க் கவிஞர், திரைப்பட ஆர்வலர்.
தொடர்புக்கு: kalapria@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x