Published : 02 Dec 2016 11:03 AM
Last Updated : 02 Dec 2016 11:03 AM
சமகால சமூகப் பிரச்சினைகளைத் திரைப்படங்களில் பிரதிபலிப்பதில் முன்னேறிக்கொண்டேயிருக்கிறது பாலிவுட். அந்த வகையில், இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான ‘பிங்க்’, பெண்களுக்கு ‘நோ’ சொல்லும் உரிமையிருப்பதை ஆணித்தரமாகப் பதிவுசெய்திருந்தது. அதைத் தொடர்ந்து, இப்போது வெளியாகியிருக்கும் ‘டியர் ஜிந்தகி’ மனநலனுக்காக சிகிச்சை எடுப்பது கேலிக்குரிய விஷயமல்ல என்பதை மிக நேர்த்தியாகப் பதிவுசெய்திருக்கிறது. அத்துடன், இன்றைய இளம் பெண்கள் காதல் வாழ்க்கைத் தேர்வுகளால் சமூகத்தில் எதிர்கொள்ளும் அழுத்தத்தையும் பேச முயற்சித்திருக்கிறது.
கைரா (ஆலியா பட்), மும்பையில் பாலிவுட் பட வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளம் ஒளிப்பதிவாளர். பணி வாழ்க்கையைத் திறமையாகக் கையாளும் அவளால் காதல் வாழ்க்கையை அப்படிக் கையாள முடியவில்லை. காதல் வாழ்க்கை அவளுக்குப் பிடிபடாமல் ஆட்டம் காட்டுகிறது. ஒரு காதலை அவளே உடைத்துவிடுகிறாள். இன்னொரு காதல் அவளை ஏமாற்றிவிடுகிறது. இதனால் தூக்கமில்லாத இரவுகளுடன் போராடத் தொடங்குகிறாள். ஒரு கட்டத்தில், மும்பையை விட்டுச் சொந்த ஊரான கோவாவுக்குச் சென்று பிடிக்காத பெற்றோருடன் தங்க வேண்டிய சூழலும் உருவாகிறது. அங்கு சென்ற பிறகும், தூக்கமில்லாத இரவுகளே தொடர்கின்றன. ஒரு கட்டத்தில் மனநல மருத்துவர் ஜெஹாங்கீர் கானிடம் (ஷாருக் கான்) சிகிச்சைக்காகச் செல்கிறாள். அந்தச் சிகிச்சையின் மூலம் கைரா தன்னைத்தானே மீட்டெடுக்கும் பயணம்தான் ‘டியர் ஜிந்தகி’.
கவுரி ஷிண்டே நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் இது. அவருடைய ‘இங்கிலிஷ் விங்லிஷ்’ திரைப்படத்துடன் ஒப்பிடும்போது, ‘டியர் ஜிந்தகி’அந்த அளவுக்குத் தீவிரமான கதைக் களத்தைக் கொண்டிருக்கவில்லை. எனினும் சுதந்திரமாகத் தனித்து இயங்க நினைக்கும் சமகால இளம்பெண்களின் மனப்போராட்டத்தை யதார்த்தமாகவும் எளிமையாகவும் பதிவுசெய்வதில் வெற்றியடைந்திருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் முதல் பாதித் திரைக்கதை ‘பார்ட்டி’, ‘பிரேக்-அப்’ என வழக்கமான பாலிவுட் பாணியில்தான் பயணிக்கிறது. ஜெஹாங்கீர் கான் அறிமுகத்துக்குப் பிறகுதான் நேர்த்தியாக நகரத் தொடங்குகிறது. மருத்துவர் ஜெஹாங்கீருக்கும் கைராவுக்கும் இடையிலான உரையாடல்தான் திரைப்படத்தின் அடிப்படை. அதனாலோ என்னவோ, வசனங்களில் தத்துவ நெடி தூக்கலாக உள்ளது.
“ஒரு வேலையைச் செய்வதற்கு நாம் ஏன் எப்போதும் கடினமான வழியைத் தேர்ந்தெடுக்கிறோம்? எளிமையான வழியைத் தேர்ந்தெடுத்தால்கூட நம்முடைய வேலை முடியலாம்”, “ஒரு நாற்காலியை வாங்குவதற்கு முன்னர் பல நாற்காலிகளை முயற்சி செய்துபார்க்கிறோம். அப்படியிருக்கும்போது, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் அப்படிச்செய்வதில் என்ன தவறு இருக்கிறது?” இப்படியான வரிகள் படம் முழுவதும் நிரம்பியிருக்கின்றன. சொல்லப்போனால், உரையாடலிலேயே படத்தை நகர்த்தியிருப்பது குறிப்பிட்ட அளவுக்கு எடுபடவும் செய்கிறது.
கைராவின் கதாபாத்திரத்தை எல்லா விதத்திலும் ரசிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது. ஆனால், அவளுடைய வலியைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவதற்குத் தவறியிருக்கிறார் இயக்குநர். அவளுடைய பிரச்சினை மேலோட்டமாகவே அணுகப்பட்டிருப்பதால் பார்வையாளர்களிடம் அழுத்தமான உணர்வுகளை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால், மனநலனுக்கும் சமூகத்துக்கும் இருக்கும் தொடர்பைச் சில தனித்துவமான காட்சிகளில் விளக்கியிருக்கிறார்.
கைராவின் கனவில், திருமணமான புதுமணப் பெண்கள் அவள் சேற்றில் விழுந்திருப்பதைப் பார்த்துச் சிரிக்கும் காட்சி, இரண்டு காதல்கள் இருந்தது இயல்பான விஷயம்தான் என்பதை ஜெஹாங்கீர் விளக்கும் காட்சி ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். சமூகம் எப்படித் தன்னுடைய ஆதிக்கத்தைத் தனிமனித முடிவுகள்மீது செலுத்துகிறது என்பதை இக்காட்சிகள் வலிமையாக விளக்குகின்றன.
ஆலியா பட் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். “என்னை ஏன் ஐந்து வயதில் தாத்தா-பாட்டியிடம் விட்டுவிட்டுச் சென்றுவிட்டீர்கள்?” என்று அம்மா-அப்பாவிடம் அழுவது, காதலன் மேலிருக்கும் கோபத்தில் பச்சை மிளகாயைச் சாப்பிடுவது எனப் பல இடங்களில் அசத்தியிருக்கிறார். ஷாருக் கானின் இயல்பான, முதிர்ச்சியான நடிப்பைப் பார்ப்பது உற்சாகமான திரை அனுபவத்தை அளிக்கிறது.
நீண்ட காலத்துக்குப் பிறகு, ஷாருக்கிடமிருந்து யதார்த்தம் கலந்த வசீகரமான நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது. ‘சூப்பர் ஸ்டார்’ இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தப் படத்தில் நடித்ததற்காக ஷாருக்கை நிச்சயம் பாராட்டலாம். கைராவின் காதலர்களாக வரும் குணால் கபூர், அங்கத், அலி ஜாபர் ஆகியோரில் அலி ஜாபரின் நடிப்பு குறிப்பிடும்படி இருக்கிறது.
அமித் திரிவேதியின் பின்னணி இசையில் ‘லவ் யூ ஜிந்தகி’, ‘ஜஸ்ட் கோ டு ஹெல் தில்’, ‘லெட்ஸ் பிரேக்-அப்’ போன்ற பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. லக்ஷ்மண் உதேகரின் கேமரா கோவாவின் அழகை அற்புதமாகப் படம்பிடித்திருக்கிறது.
சமூகத்தின் கற்பிதங்களை உடைத்தெறிய வேண்டிய அவசியத்தையும், வாழ்க்கையைக் காதலிக்க உடல் ஆரோக்கியத்தைப் போல மன ஆரோக்கியமும் அவசியம் என்பதையும் ‘டியர் ஜிந்தகி’ திரைப்படம் எளிமையாகவும் அழகாகவும் விளக்கியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT