Published : 23 Dec 2016 10:27 AM
Last Updated : 23 Dec 2016 10:27 AM
எம்.எஸ்.வி.யின் குரலில் நாகேஷ் எழுத்தாளராகக் கதாபாத்திரமேற்றுக் கம்பீரமாகப் பாடும் பாடல் ‘கண்டதைச் சொல்லுகிறேன்’. அது ஒரு எழுத்தாளனின் வாக்குமூலமாக ஒலித்தது. எழுதியவர் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன். இந்தப் பாடல் வரியையே தலைப்பாக வைத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் எடிட்டர், இயக்குநர் பி.லெனின்.
தன் முந்தைய படைப்புகள் மற்றும் படத்தொகுப்புக்காகப் பலமுறை தேசிய விருது பெற்றவர் லெனின். இம்முறை பறை ஒரு பண்பாட்டு இசைக்கருவி என்ற பார்வையுடன் இரு தலைமுறைகளின் கதையை ஒரு தமிழ்க் கிராமத்தின் பின்னணியிலிருந்து எழுதி இயக்கியிருக்கிறார். இம்மாத இறுதியில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.
பறையை மீட்டெடுக்கும் இளைஞர்கள்
கதையின் முக்கியக் கதாபாத்திரம் மாசானம். முன்னோர்கள் தனக்குத் தந்து சென்ற பறை மீது உயிரையே வைத்திருப்பவர். ஆனால் பறைக்குச் சமூகம் உரிய மரியாதை தராததால் விரக்தியடைந்து குடிக்கு அடிமையாகிறார். ஆனால் மாசானத்தின் மகன் சுடலையோ, பறை இசைப்பதில் நிபுணத்துவம் பெற்றவன். பாரம்பரியமான அந்த இசைக் கருவியை வாசிப்பதில் சில மாற்றங்கள் செய்து அதைச் சுவாரஸ்யமாக மற்றவர்களுக்கும் கற்பிக்கிறான்.
நகரத்து இளைஞனான சித்தார்த் இசைக்கலைஞனாக முயற்சி செய்பவன். இசையை அதன் இயல்போடு சுவாசித்து அதை நேசிப்பவன். அவனது பெற்றோர் இசையைப் பணப்பால் சுரக்கும் ஒரு பசு என நினைக்கிறார்கள். சித்தார்த் பறையிசையைக் கற்றுக்கொள்ள சுடலையின் கிராமத்துக்கு வருகிறான். இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். சுடலையின் அபாரத் திறமை சித்தார்த்தைக் கவர்கிறது.
பணம் மீதான பிடிப்புடன் வாழ்பவர்களிடமிருந்து புதிய தலைமுறையைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் பறையிசையின் பண்பாட்டுச் செழுமையை மீட்டெடுத்து மக்கள் அரங்குக்கு எடுத்துவரப் போராடுகிறார்கள். அவர்களது இசைப் போராட்டம் என்னவாகிறது என்பதை டிசம்பர் 30-ம் தேதி திரையில் காணலாம்.
மண்ணும் வாழ்வும்
“பறையிசை கதையின் மையமாக இருந்தாலும் அதனோடு தொடர்புடைய எளிய மக்களின் வாழ்வு, மண் மணம் மாறாமல் இந்தப் படத்தில் பதிவாகியிருக்கிறது” என்கிறார் இந்தப் படத்தில் மாசானமாக நடித்திருக்கும் ‘பூ’படப்புகழ் ராம். இவரைத் தவிர ஆனந்த், கருணா, ஜானகி , ஜெனிஃபர் உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். “இவர்கள் அனைவருமே பறை உள்ளிட்ட கருவிகளை முறையாக வாசிக்கத் தெரிந்தவர்கள். அவர்கள் நடிக்கவேண்டிய எந்த அவசியமும் இன்றித் தங்களது கதாபாத்திரங்கள் போலவே எண்ணி அவற்றில் ஜொலித்திருக்கிறார்கள்” என்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆஷிஷ் தவார்.
இசையை மையப்படுத்திய இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பவர் பி.ஆர்.ராஜன். பாடல்களைக் கவிஞர் இளம்பிறை எழுதியிருக்கிறார். இந்தப் படத்தை லெனினின் நீண்டகால உதவியாளர் மாருதி கிருஷ் எடிட் செய்துள்ளார். கோ. தனஞ்ஜெயன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் இருவரும் இந்தப் படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT