Published : 16 Dec 2022 06:36 AM
Last Updated : 16 Dec 2022 06:36 AM

கோலிவுட் ஜங்ஷன்: தொண்டன் பெறும் பாடம்!

கட்சி அரசியலைக் கதைக் களமாகக் கொண்ட முழு நீள அரசியல் படங்கள் அரிதாக வருபவை. அப்படியொரு படம் ‘கட்சிக்காரன்’. “ஆட்சியில் அமர்ந்த கட்சிகள், அவற்றுக்கு கூட்டணி பலம் கொடுத்த கட்சிகள் என அத்தனையையும் வெறுக்கும் நாயகன், புதிதாக நம்பிக்கை கொடுக்கும் ஒரு கட்சியில் இணைகிறார்.

தனது கட்சியின் பெண் தொண்டர் ஒருவர்தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று தேடிப் பிடித்துத் திருமணம் செய்துகொள்கிறார். மனைவியின் தாலியை விற்று நிகழ்ச்சி நடத்தும் நாயகனுக்கு அரசியல் கற்றுக்கொடுக்கும் பாடம்தான் கதை” என்கிறார் படத்தை எழுதி இயக்கியிருக்கும் ப.ஐயப்பன்.

படத்தின் ட்ரைலரில் இடம்பெற்றுள்ள காரசாரமான அரசியல் நையாண்டி வசனங்கள் கவனம் ஈர்த்துள்ளன. ‘தோனி கபடிக் குழு’, ‘வேட்டைநாய்’ படங்களில் நடித்த விஜித் சரவணன் நாயகனாகவும் அவரது ஜோடியாக ஸ்வேதா பாரதியும் நடித்துள்ளனர். அப்புக்குட்டி மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கல்லூரி வாழ்க்கையின் சவால்! - முன்னணிப் பட நிறுவனங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராக அனுபவம் பெற்றுள்ளவர் பெருமாள் காசி. அவரது எழுத்து, இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘என்ஜாய்’. எல்.என்.எச். கிரியேசன் சார்பில் கே. லட்சுமி நாராயணன் தயாரித்துள்ள இப்படத்தில் முழுவதும் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் கூறும்போது: “பள்ளிக் கல்வி முடிந்து, கல்லூரி வாழ்க்கையில் நுழையும் இளைஞர்கள், யுவதிகளில் பலர் அங்குள்ள புறச்சூழல் தரும் அழுத்தம் காரணமாக (Peer pressure) நிலை தடுமாறுகிறார்கள். தங்களது குடும்பச் சூழல், வளர்ந்த சூழல் ஆகியவற்றை மறந்து, வெவ்வேறு வர்க்கப் பின்புலங்களிலிருந்து வருபவர்களின் நட்பைப் பெற, அவர்களைப் போல் ஆடை ஆணிவது உட்பட தங்களுடைய ‘லைஃப் ஸ்டை’லை மாற்றிக்கொள்ள முயல்கிறார்கள்.

அதில் தடுமாறி, தடம் மாறும் மூன்று மாணவர்கள், மூன்று மாணவிகள் பற்றிய கதைதான் ‘என்ஜாய்’. இன்றைய தலைமுறையில் இதுவொரு முக்கியமானப் பிரச்சினை. அது இளைஞர்களுக்குச் சரியாகச் சென்று சேர வேண்டும் என்பதற்காக ‘அடல்ட் காமெடி’யைத் தொட்டுக்கொண்டு கூறியிருக்கிறோம்.” என்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x