Published : 30 Dec 2016 10:10 AM
Last Updated : 30 Dec 2016 10:10 AM

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் 2016: வசூல் வேட்டையும் பாக்கெட் ஓட்டையும்

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மழை வெள்ளம் முடிந்த நிலையில் 2016-ம் ஆண்டு பிறந்தது. ஆனால், 2016 தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளர்களுக்குப் பல சோதனைகள் நிறைந்த ஆண்டு எனலாம். குறிப்பிடத் தக்க அளவில் சில தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே லாபம் கிடைத்திருக்கிறது.

நடப்பு 2016-ம் ஆண்டில் டிசம்பர் 28-ம் தேதி கணக்கின்படி மொத்தம் 203 படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் சுமார் 60 - 65 படங்கள் மட்டுமே பிரபலமான படங்களாக இருந்திருக்கின்றன. பல படங்கள் திரையரங்குகளுக்கு வந்ததும் போனதும் மக்களுக்குத் தெரியவில்லை. இந்த ஆண்டில் முன்னணி நடிகர்களான கமல், அஜித் இருவருக்கும் படம் எதுவும் வெளியாகவில்லை.

கொட்டிக்கொடுத்த படங்கள்

‘பிச்சைக்காரன்', ‘அப்பா', ‘தெறி', ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' ஆகிய படங்கள் மட்டுமே முழுமையான வெற்றிப் படங்கள். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய மூன்று தரப்புக்கும் நல்ல லாபம் கொடுத்த வகையில் இவை வசூல் வேட்டை என்றே கூறலாம். ‘ரஜினிமுருகன்', ‘ரெமோ', ‘இறுதிச்சுற்று', ‘சேதுபதி', ‘இருமுகன்', ‘தர்மதுரை', ‘தேவி', ‘தில்லுக்கு துட்டு', ‘அச்சம் என்பது மடமையடா', ‘சென்னை 28- இரண்டாம் பாகம்' ஆகிய படங்கள் மூவருக்கும் லாபம் என்றாலும் பெரிய அளவுக்கு லாபமில்லை.

மேலும், ‘அச்சம் என்பது மடமையடா', ‘சென்னை 28- இரண்டாம் பாகம்' ஆகிய படங்கள் பணமதிப்பு நீக்கம் பிரச்சினையில் சிக்காமல் இருந்திருந்தால் இன்னும் வசூல் பெற்றிருக்கக்கூடும் என்றார்கள் விநியோகஸ்தர்கள். ‘மனிதன்’, ‘இது நம்ம ஆளு', ‘தேவி', ‘தோழா', ‘ஜோக்கர்', ‘விசாரணை', ‘அரண்மனை 2', ‘கொடி', ‘ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்கள் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் போட்ட பணத்துக்கு நஷ்டமின்றி இருந்தன. படத்தின் ட்ரெய்லர், விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலமாகக் கவரப்பட்ட விநியோகஸ்தர்கள் ஓட்டை பாக்கெட் என்பது தெரியாமல் பெரும் முதலீடு செய்து ஏமாந்த இரு படங்கள் என்றால் அவை ‘காஷ்மோரா', ‘தொடரி' ஆகியவைதான்.

நட்சத்திர நடிகர்கள் வரிசையில்

“நாங்கள் எதிர்பார்த்த நடிகர்களைப் பொறுத்தவரை சிவ கார்த்திகேயன் நடித்த ‘ரஜினி முருகன்' எங்களுக்கு நல்ல லாபம் ஈட்டித் தந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான ‘ரெமோ'வும் எங்களை ஏமாற்றவில்லை. இதனால் ரஜினி, அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் வரிசையில் வைத்தே சிவ கார்த்திகேயனைப் பார்க்கிறோம்” என்றார் முக்கியமான விநியோகஸ்தர் ஒருவர்.

‘கபாலி’யின் நிலை

அதேபோல் எல்லாத் தரப்பிலும் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான படம் ‘கபாலி'. பெரிய அளவில் லாபம் சம்பாதித்திருப்பதாகத் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விநியோகஸ்தர்கள் தரப்பிலோ பல ஏரியாக்களில் சுமார் 40% வரை நஷ்டம் என்கிறார்கள்.

மேலும் படம் வெளியான அன்று மிகவும் அதிகமான விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டு சர்ச்சை எழுந்தது. படத்தை ஒரு பெரிய பிராண்டாகக் கருதி பல்வேறு விளம்பர நிறுவனங்கள், தங்களுடைய பொருட்களை ‘கபாலி’ மூலம் விளம்பரப்படுத்தப் போட்டியிட்டன. அதன் மூலமாகவும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளின் திரையரங்க உரிமை மூலமாகவும் தயாரிப்பாளருக்கு லாபம் என்றாலும் விநியோகஸ்தர்கள் அப்படத்தை நஷ்டம் ஏற்படுத்திய பட வரிசையிலேதான் வைத்திருக்கிறார்கள்.

விநியோகஸ்தரின் கருத்து

தமிழ் திரையுலகின் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் 2016-ம் ஆண்டு வசூல் படங்கள் குறித்துக் கேட்ட போது, “‘பிச்சைக்காரன்', ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்', ‘அப்பா', ‘இறுதிச்சுற்று', ‘தில்லுக்குத் துட்டு' ஆகிய படங்கள் மட்டுமே விநியோகஸ்தர்களுக்கு இரண்டு மடங்கு லாபம் கொடுத்தன. நட்சத்திர நடிகர்கள் நடித்த எந்தவொரு படமுமே விநியோகஸ்தர்களை வாழ வைக்கவில்லை. அத்தனை படங்களுமே நஷ்டம் ஏற்படுத்திய படங்கள்” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

திரையரங்க உரிமையாளர் சொல்கிறார்:

திரையரங்க உரிமையாளர் ஒருவரிடம் கேட்கலாம் என சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ராகேஷிடம் கேட்டபோது “‘தெறி', ‘ரெமோ', ‘பிச்சைக்காரன்', ‘இறுதிச்சுற்று',‘கபாலி', ‘அச்சம் என்பது மடமையடா', ‘இருமுகன்', ‘ரஜினி முருகன்', ‘சென்னை 28', ‘தி ஜங்கிள் புக்', ‘தி கன்ஜூரிங் 2' ஆகிய படங்கள் எங்களுக்கு லாபகரமாக இருந்தன. டிசம்பரில் புதிய ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாட்டால் கேன்டீன் வருமானம் மிகவும் குறைந்திருப்பது உண்மைதான். வார நாட்களில் குறைந்து காணப்படும் வசூல், வார இறுதி நாட்களில் குறையவில்லை “ என்றார்.

தொலைக்காட்சி உரிமை

வசூல் நிலவரம் இப்படியிருக்கிறதென்றால் இந்த ஆண்டும் தொலைக்காட்சி உரிமை பிரச்சினை தீர்ந்தபாடில்லை. வெற்றியடைந்த படங்களை வாங்குவதில் மட்டுமே தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆர்வம் காட்டினார்கள். மற்ற படங்களைச் சீந்த ஆளில்லை. ‘தெறி’, ‘கபாலி’ படங்களின் தொலைக்காட்சி உரிமை இன்னும் விற்கப்படவில்லை. உரிமைக்கு அதிக பணம் கேட்பதால், படத்தை ஒளிபரப்பி அவ்வளவு பணத்தைத் திரும்பவும் எடுக்க முடியுமா என்று தயக்கம் காட்டுகின்றன தொலைக்காட்சி நிறுவனங்கள். தொடரும் திருட்டு வீடியோ பிரச்சினையைத் தாண்டி, தற்போது ஃபேஸ்புக் லைவ் என்ற தொழில்நுட்பத்துக்கு வளர்ந்து விட்டார்கள். ‘மாப்ள சிங்கம்' என்ற திரைப்படம், திரையரங்களுக்கு வருவதற்கு முன்பே, திருட்டு டிவிடி வெளியாகித் தயாரிப்பாளரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதிகாரபூர்வ ஆன்லைன் சந்தை

பிரச்சினைகள் இப்படியிருக்க டிஜிட்டல் வியாபாரத்தில் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் கால் பதித்திருப்பதால் வரும் காலங்களில் தொலைக்காட்சி உரிமை இல்லாமலே தயாரிப்பாளர்கள் நல்ல லாபம் சம்பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் சந்தைகள் அதிகரிக்கும்போது, தொலைக்காட்சி உரிமையின் விலை மிகவும் குறைந்துவிடும் என்ற அபாயமான சூழலும் கண்டிப்பாக ஏற்படும்.

தொலைக்காட்சி உரிமை, திருட்டு டிவிடி , நடிகர்களின் சம்பள உயர்வு, படப்பிடிப்புக்கான செலவுகள் அதிகமாவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுடன் தமிழ் திரையுலகம் 2017 -ம்

ஆண்டில் கால் வைக்கிறது. அதேபோல் இந்த ஆண்டு புதிதாக விநியோகஸ்தர்கள் பலர் ஒவ்வொரு ஏரியா உரிமையையும் வாங்கிவந்தார்கள். ஒட்டுமொத்தப் படத்தின் தமிழ்நாட்டு உரிமையைக் கைப்பற்றுவதற்குப் புதிதாகக் களம் இறங்கியுள்ளார்கள். இவர்களுடைய பயணம் எப்படி இருக்கப் போகிறது என்பதை 2017-ம் ஆண்டில்தான் காண முடியும்.

வியக்க வைத்த வெளிப் படங்கள்

தமிழ்ப் படங்களே வசூலில் திணறிவந்த சூழலில் ‘தி கான்ஜுரிங் 2', ‘தி ஜங்கிள் புக்' ஆகிய தமிழ் பேசிய ஹாலிவுட் மொழிமாற்றுப் படங்கள் தமிழகத்தில் பெரும் வசூலை அள்ளின. தமிழகத்தில் ஒரு பைசாகூட விளம்பரச் செலவு செய்யாமலே, இந்த இரு படங்களும் வசூலை அள்ளிச் சென்றன. தமிழ் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக ‘தி ஜங்கிள் புக்' வசூல் செய்து, அதனுடன் வெளியான மற்ற படங்களின் வசூலைக் கடுமையாக பாதித்தது எனத் தெரியவருகிறது.

பாலிவுட்டில் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து எடுக்கப்பட்ட ‘தோனி' திரைப்படம் நல்ல வசூலை ஈட்டியது. இப்படத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் வீரர் தோனியும் படக்குழுவும் சென்னை வந்தது ரசிகர்களைக் கவர்ந்தது. மேலும், தற்போது ஆமிர் கான் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘தங்கல்' படமும் பெரும் வசூலை ஈட்டியுள்ளது.

பெருமை சேர்த்த ‘விசாரணை'

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளியான ‘விசாரணை' இந்த ஆண்டு தமிழ் திரையுலகைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் உள்ள காவல் துறை மீதும் நீதி விசாரணை மீதும் கேள்வி எழுப்பிய படமாக இருந்தாலும், இந்திய அரசாங்கத்தால் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகவில்லை என்றாலும், அப்போட்டியில் பல்வேறு கட்டங்களைத் தாண்டியது. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் “அற்புதமான படம்” என்று புகழ்ந்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x