Published : 02 Dec 2016 10:39 AM
Last Updated : 02 Dec 2016 10:39 AM
மும்பையில் சுமார் 6 கோடி செலவில் ‘2.0' பர்ஸ்ட் லுக் விழா நடைபெற்றிருக்கிறது. ‘நாயகன் நானல்ல. அக்ஷய்குமார் தான்' என்று ரஜினி அவ்விழாவில் பேசியதுதான் ஹைலைட். அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த அவ்விழா முடிந்திருக்கும் நிலையில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் '2.0' படத்தைப் பற்றி நாம் திரட்டிய முன்னோட்டத் துளிகள்:
> முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். முதல் பாகத்தில் இறந்த வில்லன் போராவின் மகனான சுதான்ஷூ பாண்டே, அவரிடம் தீமையான சிட்டி ரோபோவின் Code-களை வைத்துப் புதிதாக ஒரு ரோபோவை உருவாக்குகிறார். இவருடன் ஒரு தீய விஞ்ஞானியாக நடித்திருக்கும் அக்ஷய் குமாரும் கைகோர்த்துக்கொள்கிறார். இவ்விருவரையும் அழிக்க ரோபோ விஞ்ஞானியான வசீகரன் (விஞ்ஞானி ரஜினி) அழித்துவிட்ட சிட்டி ( ரோபோ ரஜினி) ரோபோவை உருவாக்கி என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதைச் சுருக்கம் என்று காதைக் கடிக்கிறார்கள் ஷங்கர் வட்டாரத்தில்.
> அக்ஷய் குமார் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அர்னால்ட், ஆமிர்கான், விக்ரம் எனப் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஷங்கர். இதனாலேயே இப்படம் தொடங்கத் தாமதம் ஆனது. இறுதியில் இக்கதையைக் கேட்டு அக்ஷய் குமார் உடனடியாக ஓகே சொல்ல படப்பிடிப்பும் துரிதமாகத் தொடங்கப்பட்டது.
> இது ரோபோக்களுக்கும் அவற்றை உருவாக்குகிறவர்களுக்கும் இடையிலான மோதல் என்பதைக் குறிப்பிடும் விதமாக ‘THE WORLD IS NOT ONLY FOR HUMANS' என்று படத்தின் தலைப்புக்குக் கீழே டேக்லைன் இடம்பெற்றிருக்கிறது. பறவைகள் சில ரோபோக்களாக உருவாகிச் சண்டையிடுவது போன்று ஒரு காட்சியைச் சமீபத்தில் படமாக்கியிருக்கிறார்கள். இதற்காக ஆள் உயரம் கொண்ட பறவைகள் சிலவற்றை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
> இதில் ஒலிப்பதிவுப் பொறியாளராகப் பணியாற்றி வரும் ரசூல் பூக்குட்டி, படத்துக்குப் பயன்படுத்த காகங்களின் ஒலியை ஒலிப்பதிவு செய்திருக்கிறார். இப்பணி தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.
> புதிய தலைமுறை 3டி கேமிரா மூலமாக இந்தியாவில் ஒளிப்பதிவாகும் முதல் படம் ‘2.0'. இதனால் கிராபிக்ஸ், எடிட்டிங் பணிகள் ஆகியவற்றில் சில சிரமங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இப்படத்தின் எடிட்டிங் பணியின்போது, 3டி கண்ணாடி அணிந்துதான் பணிபுரிந்திருக்கிறார் எடிட்டர் ஆண்டனி.
> ஹாலிவுட் தரத்தில் உருவாகிவருவதால் ஒரே ஒரு பாடல் மட்டும் படத்தில் இடம்பெற்றால் போதும் என்று முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். ஆனால், படத்தின் இசை ஆல்பத்தில் மொத்தம் 6 பாடல்கள் இருக்கும் என்கிறார்கள் படக் குழுவினர். அதிலும் ஒரே ஒரு பாடலை முடித்து ஷங்கரின் ஒப்புதலைப் பெறுவதற்குள் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
> படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை உக்ரைன் நாட்டில் படமாக்கப் படக் குழு திட்டமிட்டு இருந்தது. அதற்காக அங்கு சென்று இடங்களை எல்லாம் தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால், ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அப்பாடலை முழுக்க பச்சை வண்ணத் திரைச்சீலை (க்ரீன் மேட்) பின்னணியில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். அதனை வைத்து உக்ரைன் நாட்டில் படமாக்கியது போன்று கிராபிக்ஸ் செய்துகொள்ளவிருக்கிறார்கள்.
> இப்படத்துக்காகத் தினமும் 6 மணி நேரம் மேக்கப் போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார் அக்ஷய் குமார். “எந்தவொரு படத்தின் மேக்கப்புக்கும் நான் இவ்வளவு மெனக்கெட்டதில்லை” என்று தெரிவித்திருக்கிறார். இதற்காகவே படப்பிடிப்புத் தளத்துக்கு 6 மணி நேரத்துக்கு முன்பாகவே வந்து, மேக்கப் போட்டு படப்பிடிப்பு நேரத்துக்குத் தயாராக இருக்கும் அக்ஷய் குமாரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் ஷங்கர்.
> ‘எந்திரன்' முதல் பாகத்தில் ராணுவத்துக்கு ரோபோக்கள் பயன்பட்டால் எப்படியிருக்கும் என்று ஒரு காட்சி வரும். அதையே 2-வது பாகத்தின் மையக் கதையாக்கிவிட்டார் ஷங்கர் என்று சொல்கிறார்கள் படக்குழுவினர். “ராணுவத்தில் ரோபோக்களைச் சேர்ப்பதால் என்னவெல்லாம் பிரச்சினைகள் வரும் என்பதையும் ஒரு பகுதியாகக் காட்டியிருக்கிறார்” என்கிறார்கள். இதற்காகச் சென்னையிலுள்ள ராணுவ முகாமுக்குள் பிரத்யேக அனுமதி வாங்கிச் சில காட்சிகளைப் படம்பிடித்திருக்கிறார். இதற்கு முன்பு அங்கு எந்தவொரு படப்பிடிப்புக்கும் அனுமதி கிடைத்ததில்லை.
> சென்னையின் கோடம்பாக்கம், வடபழனி ஃபாரம் மால் ஆகியவற்றில் ஒரு சில காட்சிகளை மட்டும் படம்பிடித்திருக்கிறார்கள்.
> இப்படத்தின் 50 சதவீத கிராஃபிக்ஸ் பணிகளை முடித்து விட்டார்கள். இன்னும் சில முக்கியக் காட்சிகளுக்கு மட்டும் மிகவும் மெனக்கெட்டுவருகிறது படக் குழு. மேலும், இப்படத்தில் பணிபுரியவிருப்பதால் ‘பாகுபலி 2' படத்திலிருந்து விலகினார் கிராபிக்ஸ் வல்லுநர் ஸ்ரீனிவாஸ் மோகன்.
> சுமார் ரூ.350 கோடி பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறது லைக்கா நிறுவனம். மேலும், இதை விளம்பரப்படுத்தவும் பல கோடிகளைச் செலவு செய்யத் திட்டமிட்டிருக்கிறது.
> ‘எந்திரன்' படத்தின் தயாரிப்பு நிறுவனம், 2-வது பாகத்தின் போது தலைப்பைத் தரமாட்டேன் என்று தெரிவித்ததால் ‘2.0' என்று படத்தின் பெயரை மாற்றினார்கள்.
> விஜய் -விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கும் படத்துக்கான கதையைத் தயார் செய்து, இருவரின் ஒப்புதலையும் பெற்று அதில் பணியாற்றிவந்தார் இயக்குநர் ஷங்கர். ரஜினி அழைத்து “மீண்டும் ஒரு படம் பண்ணலாமா” என்று பேசவே ‘2.0' தொடங்கப்பட்டிருக்கிறது.
> ரஜினிக்கு தெலுங்குப் படவுலகில் நல்ல மார்க்கெட் இருந்தாலும் 2.0 தெலுங்குப் பதிப்பின் நட்சத்திர மதிப்பைக் கூட்ட ரஜினியின் நண்பர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, வசூல் மன்னன் மகேஷ்பாபு ஆகிய இருவரையும் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க தனிப்பட்ட முறையில் அழைத்திருக்கிறாராம் ஷங்கர். அவர்கள் படத்தில் நடித்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT