Published : 02 Dec 2016 10:25 AM
Last Updated : 02 Dec 2016 10:25 AM
ஒரு பஞ்சாலையின் கதையை அதன் முதலாளியின் கதையாக மட்டும் சுருக்கிவிடாமல் தொழிலாளர்களின் வாழ்க்கைக் கதையாக, பஞ்சாலை இயங்கிவந்த காலகட்டத்தின் கதையாக அணுகி ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ திரைப்படத்தைத் தந்து கவனம் ஈர்த்தவர் தனபால் பத்மநாபன். தற்போது, தன் முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு ‘பறந்து செல்ல வா’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். விரைவில் படம் வெளியாகவிருக்கும் நிலையில் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…
‘பறந்து செல்ல வா’ படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும்போது நட்சத்திரத் தேர்வு, இசை என எல்லாவற்றிலும் இளமையும் கொண்டாட்டமும் நிரம்பி வழிகின்றன. உங்களது முதல் பட முயற்சியிலிருந்து அடியோடு விலகி, பொழுதுபோக்குப் படம் தர வேண்டும் என்று நினைக்க என்ன காரணம்?
வாழ்க்கையைச் சொல்வதற்காகவே கலை என்பது மனித இனத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையாகத் தொடர்கிறது. சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் நமது சினிமாவில் பொழுதுபோக்கு ஒரு அம்சம் என்பதைத் தாண்டி ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. இதனால் பெரும் முதலீடு கொண்ட தொழிலாக இருக்கும் சினிமாவை மிக கவனமாகக் கையாள வேண்டிய பொறுப்பு வந்துவிடுகிறது. இந்த இடத்தில் இயக்குநர் தனது சுதந்திரம் பறிபோய்விட்டதாக எண்ண வேண்டியதில்லை.
நெருக்கடிகளையும் இழப்புகளையும் எப்படி வாழ்க்கையின் யதார்த்தமாகப் பார்க்கிறோமோ அதேபோல்தான் வாழ்க்கையின் கொண்டாட்டங்களும். எனவே கொண்டாண்டமான கதைகளைத் தேர்வு செய்துகொள்வதன் மூலம் இந்தத் தடைகளை கடந்துவிட முடியும் என்று நம்புகிறேன். அதனால்தான் நட்பு, காதல், காதலின் கொண்டாண்டம், அதில் கொட்டிக் கிடக்கும் இயல்பான நகைச்சுவை ஆகியவற்றைக் களமாகக் கொண்ட ஒரு கதையைத் தேர்வு செய்து படமாக்கியிருக்கிறேன்.
நட்பையும் காதலையும் தமிழ் சினிமா கவுரவப்படுத்தியிருக்கிறது என்று நம்புகிறீர்களா?
சின்னக் குழந்தை பஞ்சு மிட்டாய்க்கு ஆசைப்படுவதுபோல நட்பையும் காதலையும் சினிமாவில் ஒரு கமாடிட்டி ஆக்கிவிட்டோம் என்பது உண்மைதான். கடந்த காலங்களில் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்று விமர்சிப்பதைவிட நாம் எப்படி அவற்றைக் கவுரவப்படுத்த வேண்டும் என்பதில்தான் இந்தப் படத்தில் எனது முழு கவனத்தையும் செலுத்தியிருக்கிறேன். பரஸ்பரம் மரியாதை கொடுப்பதன் மூலம் உருவாகும் நட்பும் காதலும் மட்டுமே உண்மையானதாகவும் நிலையானதாகவும் இருக்க முடியும். எல்லாக் காலகட்டத்துக்கும் பொருந்தும் இந்த உண்மையிலிருந்து பிறந்ததுதான் இந்தக் கதைக்கான பொறி. தனக்கான காதலைத் தேடும் ஒரு இளைஞன் அதன் உண்மையான அர்த்தத்தில் அதைக் கண்டடைவதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன்.
நடிகர் நாசரின் மகன் லுத்புதீன், ’காக்கா முட்டை’ ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே. பாலாஜி எனப் பெரிய இளைமைப் பட்டாளம் இந்தப் படத்தில் இருக்கிறதே?
அனைவரும் இந்தக் கதைக்கான தேர்வு மட்டுமே. ‘சைவம்’ படத்தில் லுத்புதீனின் சிறப்பான நடிப்பைப் பார்த்துவிட்டுத்தான் இந்தப் படத்துக்கு தேர்வு செய்தேன். ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கெனவே தன்னை நிரூபித்திருக்கிறார். தாவணி, புடவையில் கிராமத்துப் பெண்ணாகவே அதிகம் நடித்திருக்கும் அவரை முழுமையான நகரத்துப் பெண்ணாகக் காட்டியிருக்கிறேன். உடைகளில் மட்டுமல்லாமல் சிந்தனைகளாலும் மாடர்ன் பெண்ணாக சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்.
இவரோடு நடிப்பில் போட்டி போட்டிருக்கிறார் நரேல் கெங் என்ற சீனப் பெண். இவர் சிங்கப்பூரில் தற்போது புகழ்பெற்ற பாடகியாகவும் நட்சத்திரமாகவும் இருப்பவர். ஒரு தமிழ்ப் படத்தில் சீனப் பெண் ஒருவர் முழுநீளக் கதாபாத்திரம் ஏற்றிருப்பது இதுவே முதல் முறை. இவரது கதாபாத்திரத்தை ஆடியன்ஸுடன் உணர்வுபூர்வமாகப் பொருந்திவிடும் விதத்தில் அமைத்திருக்கிறேன். இந்த மூன்று முக்கியக் கதாபாத்திரங்களுடன் சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே. பாலாஜி இணைந்துகொண்டது படத்துக்கு மேலும் பலத்தைக் கூட்டிவிட்டது.
கதைக்களமாக சிங்கப்பூரைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
இது சிங்கப்பூர் தமிழர்களைப் பற்றிய படமல்ல; தமிழ்நாட்டிலிருந்து சென்று அங்கே ஐடி துறையில் பணியாற்றும் தமிழ் இளைஞர்களைப் பற்றிய கதை. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கும் ஒரு தமிழ் இளைஞனின் திருமணத்துக்கு முந்தைய பதிவுதான் இந்தப் படம். இதற்கு வேறு சில நாடுகளைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் சிங்கப்பூரைத் தேர்வு செய்யக் காரணம் அந்த நகரத்தின் ரொமான்டிக் தன்மைதான்.
தொழில் விஷயமாக நான் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வரும்போதெல்லாம் ஒரு விஷயத்தைக் கண்டு வியந்துபோவேன். சிங்கப்பூரில் பெண்களுக்குத் தரப்படும் சுதந்திரம் அபரிமிதமானது. எங்கே பெண்களுக்குச் சுதந்திரம் தரப்படுகிறதோ அங்கே மகிழ்ச்சியும் நிம்மதியும் தன்னம்பிக்கையும் இருக்கும். அது இந்தப் படத்துக்குத் தேவைப்பட்டது. அதனால் சிங்கப்பூரைத் தவிர வேறு தேசத்தை இந்தக் கதைக்கு நினைத்துப் பார்க்க முடியவில்லை.
உங்களது தொழில்நுட்பக் குழுவைப் பற்றிச் சொல்லுங்கள்?
முழுவதும் நகரத்தில் நடக்கும் கதை. மார்டன் சவுண்ட்ஸ் தேவைப்பட்டதால் அதற்கு ஜோஸ்வா ஸ்ரீதர் சரியாக இருப்பார் என்று நினைத்தேன். நான் எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு நவீனமாக இந்தப் படத்தில் இளைஞர்களின் உலகை இசையில் வரைந்திருக்கிறார். மொத்தம் ஆறு பாடல்கள். தவிர ‘நம்ம ஊரு சிங்காரி’ பாடலை ரீமிக்ஸ் என்ற பெயரில் கெடுத்துவிடாமல் சிறு மாற்றத்துடன் பயன்படுத்தியிருக்கிறோம்.
ராஜீவ் மேனனின் திரைப்படப் பள்ளியிலிருந்து வந்திருக்கும் சந்தோஷ் - பிரபாகர் என்ற இரண்டு இளைஞர்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர்களாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். சிங்கப்பூரின் இளமை குன்றாத நவீன அழகைக் கதைக்குத் தேவையான அளவு அள்ளித் தந்திருக்கிறார்கள். பாடல்களை நா.முத்துகுமார் எழுதியிருக்கிறார். ஒரு பாடலை நான் எழுதியிருக்கிறேன்.
இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் பி. அருமைச்சந்திரன் ஏற்கெனவே இரண்டு தமிழ்ப்படங்களைத் தயாரித்திருக்கிறார். எங்கள் படக் குழு ஒரு துளிகூடச் சோர்வை உணராத அழகான 50 நாட்கள் அவை. ஒரே ஷெட்யூலில் உற்சாகம் குறையாமல் 50 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி முடிக்க, தயாரிப்பாளரின் ஒத்துழைப்புதான் காரணம். இந்தக் கதையின் மீது அவர் வைத்த நம்பிக்கையை இந்தப் படமும் இதைக் காணவிருக்கும் ரசிகர்களும் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT