Published : 23 Dec 2016 10:30 AM
Last Updated : 23 Dec 2016 10:30 AM

எனக்கு எதிரி நானேதான்! - வடிவேலு பேட்டி

“நமக்கு ஒரு கேப் கிடைச்சுதுண்ணே… அப்படியே ஊரில் உள்ள தம்பி, தங்கைகள் எல்லாருக்கும் ஒரு வழியைக் காட்டி செட்டில் செய்துட்டேன். இப்போ ‘கத்தி சண்டை’ படத்துல காமெடியில நொறுக்க இறங்கிட்டேன். இந்தப் படத்துல நம்ம துவம்சம் இருக்குண்ணே…” என்று சிரித்தபடியே தொடங்கினார் வடிவேலு

இந்தப் படம் தவிர வேறு என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?

நிறைய படங்கள் வருது. ‘சிவலிங்கா’ படத்துல நடிச்சிருக்கேன். இப்போ விஜய் - அட்லீ படம் பேசிட்டு இருக்காங்க. ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி -2’-ல ஒப்பந்தமாகி இருக்கேன். புலிகேசி- 2 படத்தோட கதை பிரமாதமா வந்துருக்கு. கதை விவாதத்துல நானும் இருந்தேன். காமெடி ஏரியாக்கள் மட்டும் இன்னமும் செதுக்கணும்.

மணிரத்னம் மாதிரியான பெரிய இயக்குநர்களின் படங்களில் உங்களைக் காண முடிவதில்லையே?

அங்கெல்லாம் போனா பேசக் கூடாதுன்னு சொல்லுவாங்க (வசனம் இல்லாமல் நடித்துக் காட்டுகிறார்). இப்படி நடிக்கிறது நமக்கு ஒத்துவராதுண்ணே. நமக்கு காயிலாங்கடைதான் கரெக்ட். நான் வட்டார வழக்கு பேசுறவன்... ஜனங்களோட வாழ்றவன். ஆட்டோ தொழிலாளி, மூட்டை தூக்குறவங்க மாதிரி சாமானிய ஜனங்களோட பிம்பம்தான் இந்த வடிவேலு.

உங்கள் நகைச்சுவையில் வரும் வசனங்களை எங்கேயிருந்து எடுக்கிறீர்கள்?

ஊர்லயெல்லாம் டயர் வண்டிக்கு ரெண்டு ட்யூப் லைட் கட்டிட்டு மீட்டிங் போடுவாங்க. பெரிய தலைவர்கள் எல்லாம் வந்து பேசுவாங்க. மக்கள் தரையில படுத்துக்கிட்டு காலை ஆட்டிகிட்டு ரசனையா கேட்டுகிட்டு இருப்பாய்ங்க. மைக்கப் புடிச்சுப் பேசுறவர், “நான் கேட்கிறேன். இந்த நாடு என்ன செய்து கொண்டிருக்கிறது?” என்று ஆக்ரோஷமா பேசிட்டு இருப்பார். கீழே படுத்துட்டு இருக்கிற நம்மாளு, “சொல்லு... என்ன செஞ்சுட்டு இருந்தது. அதுக்குத் தானே வந்திருக்கோம்” என்று சேட்டையக் கொடுப்பான்.

மேடையில் இருக்கிறவர் “டேய்.. காலை கீழே போடுடா” என்பார். இவன் “யோவ்.. தரையில படுத்துக்கிட்டு எங் கால் மேல கால் போட்டிருக்கேய்ன். உம்மேலயா நீட்டுறேன். மொதல்ல நீ சொல்ல வந்தத சொல்லுய்யா..” என்பான். இந்தமாதிரி லந்தைக் கொடுத்த ஆளுகள்ல நானும் ஒருத்தன். பல படங்களுக்கு நான் எழுதுன காமெடிகள் கற்பனை கெடையாது. நான் அனுபவிச்சது.

நீங்கள் நடித்த நகைச்சுவைக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது எப்படி உணர்வீர்கள்?

என்னை நான் டிவியில் பார்க்கும்போது வேறு ஆளாகத்தான் பார்ப்பேன். என்னை நானாக பார்த்தால் சிரிப்பு வராது. ரசிகனாகத் தரையில் உட்கார்ந்து வேறு ஒருவனாகப் பார்த்து சிரிச்சுச் சிரிச்சு கண்ணுல தண்ணியாக் கொட்டும். அப்படி ரசிச்சுப் பார்ப்பேன்.

தமிழ்த் திரையுலகில் இன்றைய காமெடி சூழல் எப்படியிருக்கிறது?

பொதுவா வயக்காடுன்னு வந்துட்டா அதுல எல்லாமே முளைக்கும். ஆனால், நம்ம கண்ணு பார்க்குறது அந்தக் கதிர மட்டும்தான். அதுமாதிரிதான் எனக்கு என்னோட ஜோலியில மட்டும்தான் கவனம். மக்கள் மனம்விட்டு சிரிக்க வைக்க நான் ஜவாப்தாரி. இங்க எனக்கு எதிரி, போட்டி எல்லாமே நான்தான். யாரையும் போட்டியாக நான் எடுத்துக்கமாட்டேன்.

அதுக்காக வேறொருத்தர் நல்லா காமெடி பண்ணிட்டா அதைப் பார்த்து நான் சிரிக்க மாட்டேன்னு அர்த்தமில்ல. சினிமாவில என்ன விபத்து நடந்தாலும் அவங்களுக்குத் தேவையில்ல. அவங்களுக்குத் தேவை வெற்றி. நமக்குள்ளே இருக்கும் துன்பத்தைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏன்னா லாப- நட்டம் பார்க்குற வியாபாரம் இது. இங்க இரக்கத்துக்கு இடமில்ல. செஞ்ச வேலையில வெற்றியா, தோல்வியா அதை மட்டும்தான் பார்ப்பாங்க.

திரையுலகில் நிறைவேறாத ஆசை என எதுவும் இருக்கிறதா?

சத்தியமா ஒண்ணுமே இல்லண்ணே. இதுவரையில ஒரு மைல்கல்தான் தாண்டியிருக்கேன். இதுவர நடிச்ச 450-க்கும் மேற்பட்ட படங்கள் ஒண்ணுமே கிடையாது. ஒரே ஒரு ‘புலிகேசி’தான் சாதனை. அதுக்கு முன் மத்த எதுவுமே சாதனை இல்லயே. ஆனா, மக்கள் எல்லாப் படங்களையும் பார்த்து சூப்பரு சூப்பருன்னு சொல்றாங்க. அதைத் தாண்டி இன்னும் நிறைய பண்ணனும். அது வரைக்கும் நம்ம பயணம் தொடரும்.

காமெடி நடிகர்களுக்கு விருது கொடுப்பதில்லையே...

வாட்ஸ்-அப், மீம்ஸ்ல எல்லாம் சுத்திகிட்டு இருக்கேன். இதை விட ஒரு ஆஸ்கர் விருது தேவையா அண்ணே….ஆஸ்கர் விருது எல்லாம் ரொம்ப கேவலமா போச்சுண்ணே. ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாம் இரும்புக்கடையில் போய் அள்ளிட்டு வந்தது மாதிரி 2 எடுத்துட்டு வந்துட்டு, அப்புறம் என்ன விருதுடா இருக்கு என்று கேட்டுட்டார். நமக்கு எதுக்கு விருதெல்லாம்? ஜனங்க என் காமெடியப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்கிறாங்க பாருங்க அதுதான் எனக்கு ஆஸ்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x