Published : 09 Dec 2016 10:44 AM
Last Updated : 09 Dec 2016 10:44 AM
சோ ராமசாமிக்கு அஞ்சலி |
கலைவாணர், காளி என். ரத்தினம், கே.ஏ. தங்கவேலு, சந்திரபாபு, ஏ. கருணாநிதி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், வெண்ணிற ஆடை ராமமூர்த்தி, கவுண்டமணி – செந்தில், விவேக், சந்தானம் என்று நகைச்சுவை நடிகர்களின் வரிசை நீளமாக இருந்தாலும் தன்னுடைய கூர்மையான வசனங்களால் நடப்பு அரசியலை குத்திக் காட்டுவதில் சோ தன்னிகரற்று விளங்கினார். தேசிய அரசியலையும் தமிழக அரசியலையும் திரைப்படத்தில் காட்சிக்கேற்றவாறு பேசி சிரிக்க வைப்பார்.
முழுக்க முழுக்க அரசியலையே மையமாக வைத்து அவர் நடித்த இரண்டு படங்கள் ‘முகம்மது பின் துக்ளக்’ மற்றும் ‘நிஜங்கள்’. இரண்டு படங்களுமே எல்லாத் திரையரங்குகளிலும் ஓரிரு நாட்களோ, ஓரிரு காட்சிகளோதான் திரையிடப்பட்டது. ‘முகம்மது பின் துக்ளக்’காவது நாடகமாகப் பலமுறை பார்க்கப்பட்டிருக்கிறது. 1982-ல் வெளியான ‘நிஜங்கள்’ படத்துக்கு நேர்ந்ததுதான் மகா சோகம். சிவகுமார், மேனகா, எஸ்.வி. சேகர், சோ நடித்திருந்த அந்தப் படத்துக்கு மது அம்பாட் ஒளிப்பதிவு, சேதுமாதவன் இயக்கம்; இருந்தும் தமிழ் ரசிகர்களுக்கு அந்தப் படம் பிடிக்காமல் போனது. மலையாளத்தில் எடுக்கப்பட்டிருந்தால் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும்.
அந்தப் படத்தின் முதல் காட்சியில், லவுட் ஸ்பீக்கரில் இனிமையான கர்நாடக இசை ஒலித்துக்கொண்டிருக்கும். சோ வருவார், மைக் செட்டுக்காரனைப் பார்த்து, “என்ன கண்றாவிய்யா இது, இதைப் போட்டா ஜனங்க ரசிப்பாங்களா, மாத்துய்யா” என்பார். உடனே ஒரு டப்பாங்குத்துப் பாட்டை அவரும் போடுவார். ‘ஆங், இதுதான் வேணும்’ என்று மக்களின் ரசனையைக் கேலி செய்வார். பிறகு கூட்டம் தொடங்குவதற்கு முன்னால் அதே ஆளைப் பார்த்து, “இந்த ஸ்பீக்கரை வடக்குப் பக்கமாகத் திருப்பி வை – நான் பேசறது அந்த வடக்கத்திக்காரனுங்களுக்குக் காதில் விழட்டும்” என்பார். அப்போது மத்தியில் வெவ்வேறு விதமான கூட்டணி அரசு பரிசோதனைகள் நடந்த காலம்.
ஓட்டல் நடத்தும் வெண்ணிற ஆடை மூர்த்தியும் சோடா கடை நடத்தும் சோவும் அந்த குக்கிராமத்திலிருந்து சென்னைக்கு முதல் பேருந்து சேவையைத் தொடங்கும் நிகழ்ச்சியாக காட்சியைச் சித்தரித்திருப்பார்கள். ‘எருமை முக்கு’ என்ற நம் கிராமத்தை ‘இனி மக்கள் முக்கு’ என்று அழைக்க வேண்டும் என்று அரசுக்கு ஒரு கோரிக்கையைத் தெரிவித்துவிட்டு, “இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை” என்று அடிக்குரலில் கூறுவார்.
அந்த பஸ் போய்க்கொண்டிருக்கும் வழியில், தேர்வுத்தாள் கடினமாக இருக்கிறது என்பதற்காகக் கல்லூரி மாணவர்கள் அந்த பஸ்ஸை தடுத்து நிறுத்திவிடுவார்கள். ‘அரசு ஒழிக’ என்று பஸ்ஸின் எல்லா பக்கங்களிலும் எழுதுவார்கள். ‘படிக்கிற பசங்க – இப்பதான் எழுத ஆரம்பிச்சிருக்காங்க’ என்று கிண்டலடிப்பார். ‘சென்னைக்கு மேலிடத்தைச் சந்திக்க லேடி மெம்பரைக் கூட்டிகிட்டு’ என்று மகளிர் அணியையும் செமையாக டேமேஜ் செய்வார்.
விரசமற்ற நகைச்சுவை
சோ, தனது பல படங்களிலும் வெகு மக்களில் ஒருவராக வேடம் போட்டு அந்த மக்களையே கேலி செய்திருக்கிறார். அடித்தட்டு மக்களைப் பார்த்து மேல்தட்டு வர்க்கம் செய்யும் ஏளனமாகவும் அதை நாம் கருத வேண்டியிருக்கிறது. அவர் தீவிரமான வலதுசாரி என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, காமராஜர், ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற நல்ல அரசியல்வாதிகளையும் தலைவர்களையும் பாராட்டியதும்.
மனோரமாவுடன் ‘வா வாத்யாரே ஊட்டாண்டே’ என்ற பாடலுக்கு அடக்க ஒடுக்கமான ஜாம்பஜார் ஜக்குவாகப் பிரமாதமாக சோ நடித்திருப்பார். பிறகு துக்ளக்கில் எழுதிய தொடரிலும் ஜக்கு என்ற கதாபாத்திரம் ரகுநாத ஐயருக்கு நடப்பு அரசியலை விலாவாரியாக புட்டுபுட்டு வைப்பார்.
தங்கப் பதக்கம் திரைப்படத்தில் வையாபுரி என்ற பெயரை ‘வைகை வளவன்’ என்று மாற்றிக்கொண்டு ‘ஒரு ரூபாய்க்கு 3 கிளி, கோணி இல்லாதவர்களுக்கு கோணி வழங்கும் திட்டம்’ என்ற வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பார். ரஷ்ய, அமெரிக்க அரசுகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். திருமணமாகாத இளம் பெண்ணுக்கு ஆசிரியை வேலை வாங்கித்தருமாறு அண்ணி மனோரமா கேட்க (இதில் சோவுக்கு இரட்டை வேடம்), ‘தாயே, நான் என்ன அஞ்சு, பத்து வாங்குகிறவன் என்றா நினைத்தாய் (ரேட்டு அதிகமாச்சே)’ என்று பதறுவார். மகேந்திரன் கதை வசனத்தில் உருவான படம் என்பதால் சோவின் அரசியல் காமெடி டிராக்குக்கு அதில் நிறைய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
தி.மு.க.வின் மேடைப் பேச்சுத் தன்மையைக் கிண்டலடிக்கும் வகையில் ‘சென்றுவருகிறேன் தாயே! படை பல பார்த்து, உடை பல அணிந்து, கடை பல திறந்து, வடை பல தின்று, விடைபெற்றுக்கொள்கிறேன்’ என்று மூச்சுவிடாமல் சோ பேசும் வசனம் இன்றும் சிரிப்பை வரவழைக்கக்கூடியது. உள்ளீடற்ற அடுக்கு மொழிப் பேச்சு தீவிரமாக ஆகியிருந்த காலத்தில் அதற்கான எதிர்வினையாகத்தான் சோவின் இந்த வசனத்தை நாம் பார்க்க வேண்டும்.சோவின் நகைச்சுவை விரசமற்றது. கதாநாயகர்களைக் கூட சமயத்தில் காலை வாரும் விதத்தில் பேசிவிடுவார்.
‘தேன்மழை’ படத்தில் நாகேஷும் சோவும் வேலையில்லா இளைஞர்கள். ஒரு இன்டர்வியூவுக்குப் போய், மேனேஜர் வரவில்லை என்று தெரிந்ததும் அட்டெண்டர் பையனை சாமர்த்தியமாக வெளியே அனுப்பிவிட்டு, மற்றவர்களை சோவே நேர்காணல் செய்து வேலைக்கு லாயக்கில்லை என்று அனுப்பிவிடுவார். நாகேஷ் அட்டெண்டராக நடிப்பார். கடைசியில் நிஜ மேனேஜரே வர அவரையும் பேட்டி கண்டு அனுப்பும்போது அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்துவிடும்.
அரசியல் பொடி தூவி அவர் செய்த நகைச்சுவை அவருக்குத் தமிழ்த் திரையுலகில் தனியிடம் பெற்றுத்தந்தது என்றால் பத்திரிகைத் துறையிலும் சினிமா தொடர்பாக சோ செய்த ஒரு விஷயத்துக்கு முன்னோடியும் இல்லை பின்னோடியும் இல்லை. தனது ‘துக்ளக்’ இதழில் எழுதப்படும் திரைப்பட விமர்சனங்களில் அந்தப் படங்களின் இயக்குநர்களிடமும் கருத்தைக் கேட்டு அவர் வெளியிடுவார். சோவைப் போலத் திரையுலகிலும் பத்திரிகையுலகிலும் தனிமுத்திரை பதித்தவர்கள் மிகச் சிலரே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT