Published : 11 Nov 2022 06:37 AM
Last Updated : 11 Nov 2022 06:37 AM

சொல்ல மறந்த கதை: சிவதாணுவின் சுயமரியாதைக்கு 20 வயது!

ஸ்டாலின் சரவணன்

கோவா திரைப்பட விழா கலந்துரையாடலில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறனிடம், பூமணியின் ‘வெக்கை’ நாவலை ‘அசுர’னாக எடுத்துள்ளீர்கள். நாவலில் இடம்பெறும் காட்டின் உயிர்ப்புமிக்க காட்சிகளும் படத்தில் அப்படியே எடுக்கப்பட்டு இருந்தால் இன்னும் படம் நன்றாக வந்திருக்கும் அல்லவா?’ என்று கேட்டேன். அப்போது வெற்றிமாறன், “ஒரு நாவலுக்கு முழுக்க நேர்மை செய்யப் படம் எடுப்பதில்லை. நாவலின் பின்னட்டை வாசகங்கள்கூட படமெடுக்கப் போதும்" என்றார். ஒரு திரைக்கதை வடிவமைப்பில் இதுவே சரியானது.

தங்கர்பச்சான்

நாஞ்சில் நாடன் எழுதிய ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலின் உயிர்ப்பு சற்றும் குறையாமல், ‘சொல்ல மறந்த கதை’ படத்தைத் தந்திருந்தார் தங்கர்பச்சான். அந்த நாவலை வாசித்தபோது அவர் அழுத பகுதிகளைத் திரைக்கதை ஆக்கும்போதும் உணர்ச்சிவசப்பட்டதாக அவரே தெரிவித்து இருந்தார். அது படமாக வந்தபோது பார்வையாளர்கள் அதே இடங்களில் உணர்ச்சி வசப்பட்டனர். இருபது வருடங்கள் கழித்து இப்போது படம் பார்க்கும்போது அந்த உணர்ச்சி மாறாமல் இருக்கிறது. ஒரு படம் இரண்டு தசாப்தங்கள் கழித்தும் நினைவுகொள்ளத்தக்க வேண்டிய தேவையை இதுவே நிர்ணயிக்கிறது.

சிவதாணு, பார்வதி, சொக்கலிங்கம் ஆகிய மூன்று கதாபாத்திரங்களை முதன்மையாகக் கொண்டு இப்படம் வட தமிழகத்தின் வாழ்வியலை அசலாக முன்வைக்கிறது. இளையராஜாவே எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார். பெயர்கள் போடும்போது வரும் ஒரு பாடலில் நாயகன் சேரன் சிவதாணுவாக அறிமுகம் ஆவார். அந்தப் பாடல் முடிவடைவதற்குள் சிவதாணுவின் வியர்வை வாசம் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டுவிடும். அந்த ஒரு பாடலில் நெல் பயிரிடுவது, கரும்புத் தோட்டம், ஆடு மாடுகள் மேய்த்தல், முந்திரிக் காடுகளுடனான பிணைப்பு என எல்லாவற்றையும் ஒரு சிறு பிசிறுகூட இல்லாத திரைக்கதை வழியே அவ்வளவு நேர்த்தியாகச் சித்தரித்திருப்பார்.

கல்லூரி முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் ஓர் இளைஞன், அவன் குடும்பம், தங்கள் சக்திக்கு வெகுவாக மீறிய ஒரு பெரிய இடத்தில் சம்பந்தம் செய்ய நேரிடுகிறது. இதனால் அந்த இளைஞனின் சுயமரியாதைமிக்க வாழ்வு என்னவாகிறது என்பதே கதை. இயக்குநர் சேரன் ஒரு நடிகராக இதில் அறிமுகமாகியிருந்தார். அவரது தோற்றத்துக்கும் உடல்மொழிக்குப் பொருத்தமான களம்.அதில் சிவதாணுவாக மாறிப்போயிருந்தார் சேரன். பார்வதியாக வரும் ரதி கதாபாத்திரம் பெரும்பாலும் கண்ணீர் சிந்திக்கொண்டேதான் இருக்கும். காதல், தாய்மை இரண்டையும் சேர்த்து சுமப்பவள் பார்வதி. சிவதாணு, சொக்கலிங்கம் இருவருக்கும் இடையில் ஒரு அப்பாவித்தனம் இயல்பாக இழையோடியபடியிருக்கும். இலக்கிய வாசகர் மத்தியில் அறியப்பட்ட ஒரு கதையை, அதன் பாதையிலிருந்து விலகாத வகையில் திரைப்படமாகத் தருவது இலக்கியப் பரிச்சயமும் படைப்பாளுமையும் கொண்ட ஒரு கலைஞனால் மட்டுமே இயலக்கூடியது. தங்கர் பச்சான் மண்ணிலிருந்து முகிழ்த்த எழுத்துக்காரராகவும் இருப்பதால் இக்கதையை விலகலின்றி காட்சிமொழிக்குள் கொண்டுவர முடிந்தது.

ஒரு நல்ல திரைப்படம் என்றால் எப்படியிருக்கும் என்பதற்கு எந்தவொரு அளவுகோலும் கிடையாது, அதை ஒரு பெட்டிக்குள் அடைக்க முடியாது. ஒரு நிலப்பரப்பை அதன் அசல்தன்மை மாறாமல் அப்படியே படமாக எடுக்கவேண்டும் என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்தக் கூறுகளுக்கு மிகவும் பொருத்தமானது ‘சொல்ல மறந்த கதை’. பயிர் செய்யும் முறைகள், அதை சந்தைப்படுத்த அவர்கள் படும் பாடு, உணவுப் பழக்கம், உடுத்தும் ஆடைகள், எண்ணெய் வழியும் செம்புல மனிதர்களின் முகங்கள்,மரபுகள், மாநிறப் பெண்கள் என எல்லாவற்றிலும் நிலத்தைத் துளியும் மாறாமல் இயக்குநர் செதுக்கியிருக்கிறார். அந்த நிலப்பகுதியின் தன்மையோடு வரும் திருமண நிச்சயதார்த்தம், அதற்கு முந்தைய திருமண ஏற்பாட்டுக் காட்சிகள், திருமணம், காதணி விழா என எல்லா விழாக்களையும் படத்தின் போக்குக்கு ஏற்றவாறு பொருத்தியிருப்பார்.

சிவதாணுவின் கதாபாத்திரச் சித்தரிப்பில் இருக்கும் நேர்மை அப்படியே பார்வையாளர்களைப் பற்றிக்கொள்ளும். சொக்கலிங்கம் செய்யும் அநீதிகளைக் கண்டு பார்வையாளர்களை அவர் மீது அறம்சார் கோபம் கொள்ளச் செய்ததும் ஒரு வெற்றியே. ஒரு பெரிய தொழிற்சாலையில் பணிபுரியும் மேலாளர், துணை அதிகாரி, அவருக்கு அடுத்தகட்ட அலுவலர்கள் மூவருமே ஆங்கிலத்தில் பேசி முப்பத்தி ஐந்து மதிப்பெண்கள் என்று பேசி சிரிக்கும் இடம், கிராமத்து அப்பாவி இளைஞரின் கதாநாயக வழிபாட்டைக் கண்டிக்கும் இடம் உட்பட வசனங்கள் சினிமா சட்டகத்துக்கு வெளியே மண்ணின் மொழியில் எழுதப்பட்டிருக்கும்.

மனிதன் ஒரு சமூக விலங்கு, அவன் தன் குடும்ப உறவுகளைப் பேண வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறான். மனிதர்கள், அவர்தம் உறவுகளைப் பற்றி உண்மைக்கு மிக நெருக்கமாக இப்படம் பேசுகிறது. மனித உறவுகளின் பலங்களையும் கீழ்மைகளையும் நியாயமான அளவுகோலில் வைத்துப் பேசுவதே கலையின் பெரும்பணி. நாடகத் தன்மையோடு இருந்தாலும் அதனைப் பேசத்தான் வேண்டியிருக்கிறது. இன்னொரு புறம் தனிமனித சுதந்திரம் என்பது கலை முன்வைக்கும் கறாரான கோரிக்கை. அதனைத் தாண்டி மனித வாழ்வின் தேவை என்பது பெரிதாக எதுவுமில்லை. தனிமனித சுதந்திரத்தில் சுயமரியாதை பெரும் பங்காற்றுகிறது. அதை எப்போதும் எவருக்கும் விட்டுக்கொடுக்காத வாழ்வையே மனிதன் இயற்கையிடம் மன்றாடுகிறான். அதையும் அழுத்தமாகப் பேசுகிறது திரைக்கதை.

சமூக, அரசியல் பார்வையோடு ஒரு நிலத்தில் வாழும் மனிதர்களை ரத்தமும் சதையுமான கதை மாந்தர்களாக இப்படம் முன்வைக்கிறது. அதற்கு அடித்தளமாக சமகாலத்தின் இலக்கிய படைப்பு தேர்வு செய்யப்பட்டு, சரியான படைப்பாளியின் காட்சி மொழியில் வாழ்வின் அவலங்களைப் பேசும்போது கண்ணீர்க் கோடுகள் உங்கள் கன்னத்தில் நீளவே செய்யும். அதனால்தான் ‘சொல்ல மறந்த கதை’யில் சிவாதாணுவின் சுயமரியாதையை ஆழ்மனம் இன்னும் ஆராதிக்கிறது. - ஸ்டாலின் சரவணன்
stalinsaravanan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x