Published : 25 Nov 2016 10:33 AM
Last Updated : 25 Nov 2016 10:33 AM
‘‘என்னோட சினிமா கரியரே விளையாட்டா ஆரம்பித்ததுதான். முதல் படம் ‘சென்னை 28’ வெளிவந்து பத்து வருஷம் ஆச்சு. இந்தத் துறையில என்னோட அனுபவத்துக்கும் வயசு பத்து. இந்தப் பயணம் மகழ்ச்சியாத்தான் இருக்கு!’’ என்ற மகிழ்ச்சியான மனநிலையில் பேச ஆரம்பித்தார் விஜய் வசந்த்.
‘அச்சமின்றி’ என்ற தலைப்பே இதுவொரு ஆக்ஷன் கதை என்பதைச் சொல்கிறதே?
‘அச்சமின்றி’ படத்தில் கல்வித் துறையை எடுத்துக்கொண்டிருக்கிறோம். ‘என்னமோ நடக்குது’ படத்தைவிட இந்தக் கதை அதிகமான ஓட்டம், ஆட்டம் கலந்த சமுதாயச் சிந்தனையோடு இருக்கும். குறிப்பாகத் தனியார் பள்ளிகளுக்கும், அரசுப் பள்ளிகளுக்கும் இடையே உள்ள விஷயங்களைத்தான் இதில் பிரதிபலிக்கிறோம். பல விஷயங்களைத் தைரியமாகக் கையாண்டுள்ளோம். இதில் நான் பிட்பாக்கெட் திருடனாக நடித்திருக்கிறேன். அந்த அனுபவம் திரில்லாகவே இருந்தது.
தயாரிப்பு, இயக்கம், இசை, நடிகர்கள் என்று ‘என்னமோ நடக்குது’ படக்குழு அப்படியே ‘அச்சமின்றி’ படத்திலும் இணைந்திருக்கிறதே?
தயாரிப்பாளர் என் தம்பி வினோத், இயக்குநர் ராஜபாண்டி, கேமராமேன் வெங்கடேஷ், இசை பிரேம்ஜின்னு நாங்க எல்லோரும் சேர்ந்து ஜாலியா, திரில்லா 60 நாட்கள் ஒண்ணா சேர்ந்து ஒரு படம் பண்ணணும்னு இறங்கி பண்ணின படம்தான் ‘என்னமோ நடக்குது’. அதுக்கு ரசிகர்கள் கிட்டயும், விமர்சன ரீதியாவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனாலதான் திரும்பவும் நாங்க இணைந்தோம். இந்தமுறை சமுத்திரக்கனி, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, சிருஸ்டி டாங்கே, கருணாஸ்னு இன்னும் எங்கக் கூட்டணியோட பலம் கூடியிருக்கு.
‘என்னமோ நடக்குது’ படத்துக்குப் பிறகு வெளியான உங்கள் படங்கள் பெரிதாகக் கவனத்தை பெறவில்லையே?
‘என்னமோ நடக்குது’ விமர்சன ரீதியாக பேசப்பட்டதே தவிர வியாபார ரீதியாக இன்னும் வசூல் செய்திருக்க வேண்டும். ஒரு படம் வெளியாகும் நேரமும் இங்கே முக்கியமாக உள்ளது. இன்றைக்கு சினிமா எடுப்பது சுலபம். அதை வெளியிடுவதுதான் கடினம். எனக்குத் தெரிந்து சமீபத்தில் ‘கபாலி’ படத்தைத் தவிர எந்தப் படத்துக்கும் 50 நாட்கள் போஸ்டரை நாம் பார்க்கவில்லை.
நான் நடித்த ‘அச்சமின்றி’ படமும், ‘சென்னை 28 – பார்ட் 2’ படமும் இந்த ஆண்டு வர வேண்டிய படங்கள். ஆனால் தற்போது எழுந்துள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற சூழலால் ரிலீஸ் தள்ளிப்போகிறது. இங்கே இது மாதிரியான சூழல்களை எல்லாம் சார்ந்துதான் சினிமாவையும் கொடுக்க வேண்டியுள்ளது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘சென்னை-28’ கூட்டணியில் இணைந்த அனுபவம் எப்படி இருந்தது?
நண்பன் வெங்கட்பிரபு தலைமையில் மீண்டும் இணைந்தோம். அதே கலகலப்பு இருக்கும். பள்ளிக்கூட நண்பர்களை மீண்டும் பார்த்ததுபோல இருந்தது. எல்லோரும் சேர்ந்து ஒரு ஊருக்குப் போனா எந்த மாதிரி இருக்குமோ அதேமாதிரி ஒரு உணர்வு. ‘சென்னை- 28’ முதல் பாகத்தில் என் கதாபாத்திரம் தண்ணி அடிச்சிக்கிட்டே இருக்குற மாதிரி அமைந்தது. இதில் புதிதாகத் திருமணம் ஆன பையன் ரோல். அதுதான் வித்தியாசம். மற்றபடி அதே மாதிரி கிரிக்கெட் களம் உண்டு.
இன்னமும் பிசினஸ், சினிமா இரண்டிலும் சவாரி செய்கிறீர்களா?
சின்ன வயசுல இருந்தே பிசினஸ்ல இருக்கோம். வியாபாரத்தையும் பார்க்கத்தான் வேண்டும். உடம்பு முழுக்க அதுதான் ஓடிக்கிட்டிருக்கு. சினிமாவுல ஆர்வம் ஏற்பட்டதால்தான் இதுக்குள்ள வந்தேன். என்னோட ஓட்டம் மதில் மேல் பூனை மாதிரிதான். எப்போதுமே இந்த ரெண்டு பக்கமும் இருப்பேன். இப்போது படங்கள் ஒரு பக்கம் ரிலீஸ் ஆகத் தயாராக இருக்கிறது.
அதேபோல இன்னொரு பக்கம் அடுத்தடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று பண்டிகைகள் தொடர்ந்து வரவுள்ளன. இந்தக் காலகட்டத்தில் பிசினஸ் பார்க்காமல் இருக்க முடியாது. சினிமாவும் பிசினஸும் எனக்கு ரெண்டு கண்கள். எல்லாக் காலகட்டத்திலும் ரெண்டு விஷயங்களையுமே பேலன்ஸோடு வைத்திருப்பதுதான் என் திட்டம்.
அடுத்து?
‘மை டியர் லிசா’ என்ற திகில் படத்தில் நடித்துவருகிறேன். இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு இருக்கு. அடுத்தடுத்து காமெடி, வில்லத்தனம், ஆக்ஷன்னு பல கோணங்கள்ல கதைகளைக் கேட்டுவருகிறேன். இதுல மனசுக்குப் பிடித்த ஒரு நல்ல கதையா தேர்வு செய்து நடிக்க வேண்டியதுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT