Published : 04 Nov 2016 10:24 AM
Last Updated : 04 Nov 2016 10:24 AM

திரைக்குப் பின்னால்: பாரதிராஜாவை வியக்க வைத்த இளைஞர்!

விக்ரம், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘இருமுகன்’ படத்தின் தயாரிப்பு வடிவமைப்பும் கலை இயக்கமும் மிகவும் பேசப்பட்டன. அந்தப் படத்தின் கலை இயக்குநர் சுரேஷ் செல்வராஜன். தென்னிந்திய திரைப்படங்களைத் தாண்டி பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி பறக்க விட்டிருக்கும் அவரை ‘தி இந்து’ தமிழுக்காகச் சந்தித்துப் பேசியதிலிருந்து….

கலை இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?

சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் வரைவேன். ஓவியப் போட்டிகளில் கிடைத்த பரிசுகளால் ஆர்வம் அதிகரித்தது. அப்பா நிறைய ஊக்குவித்தார். சிறுவயதில் என் குருநாதர்கள் சாபு சிரில், தோட்டாதரணி பேட்டிகளெல்லாம் தொலைக்காட்சியில் வரும். அவர்கள் ஓவியத்தை பற்றிப் பேசும்போதுதான், ஓவியம் வரையத் தெரிந்தால் சினிமாவுக்குச் செல்லலாம் என்று தெரிந்துகொண்டேன்.

கலை இயக்குநராக ஆக வேண்டும் என்றால் சென்னை அல்லது புதுச்சேரியில் ஓவியக் கல்லூரி இருக்கிறது, அங்கு படிக்க வேண்டும் என்றார்கள். ஓவியக் கல்லூரியில் சேர்த்துவிடுங்கள் என்றவுடன் சின்னப் பையன் சொல்கிறான் என்று எண்ணாமல் என் ஆர்வத்தைப் பார்த்துச் சேர்த்துவிட்டார்கள். நீ நினைத்ததைப் பண்ணு என்று பச்சைக் கொடி காட்டியது என் அப்பாதான்.

புதுச்சேரியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் அப்பா என்னை சேர்த்துவிட்டார். அங்கு படிப்பு முடித்தவுடன், சென்னையில் சாபு சிரிலிடம் 2 வருடங்கள் பணியாற்றினேன். இந்தியில் அவர் பணியாற்றும்போது அவருடன் இணைந்து 20 படங்கள் வரை செய்தேன். பள்ளியில் உள்ள ஆர்வம், அப்பாவின் ஊக்கம் என சிதம்பரம், புதுச்சேரி, சென்னை என்றெல்லாம் ஒடி இப்போது மும்பையில் செட்டிலாகியிருக்கிறேன்.


'இருமுகன்' படத்துக்காக உருவாக்கிய ஆய்வுக்கூடத்தில்

ஸ்பெஷல் ப்ராப்பர்ட்டி வடிவமைப்பாளராக எப்படி வளர்ந்தீர்கள்?

இந்தியாவில் தனியாக அதற்கென்று ஒரு துறையே கிடையாது. சாபு சிரிலுடன் 10 வருடங்கள் பணியாற்றியதால் கலை இயக்கத்தில் நிறைய துறைகள் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். மினியேச்சர், ஸ்பெஷல் பிராப்பர்ட்டி என நிறைய இருக்கிறது. மற்ற கலை இயக்குநர்களிடம் கற்றுக்கொள்ள முடியாத வாய்ப்பு எனக்கு சாபு சிரிலிடம் கிடைத்தது. சல்மான் கான் நடித்த 'கிக்' படத்துக்குச் சிறப்பு உபகரணங்கள் வடிவமைப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அதில் சல்மான் கான் அணிந்து வரும் மாஸ்க் நான் வடிவமைத்ததுதான். மும்பையில் அந்த மாஸ்க் மிகவும் பிரபலம். இந்தியாவில் செய்த முதல் பிரிண்ட் 3டி மாஸ்க் அதுதான்.

சாபு சிரிலிடம் பணியாற்றியபோது, நீங்கள் செய்த படங்களில் உங்களுடைய அனுபவங்களைச் சொல்லுங்கள்

‘அந்நியன்', ‘பில்லு பார்பர்', ‘கட்டா மிட்டா', ‘ஜானே மன்' உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன். ‘எந்திரன்' படத்தில் நான் ஒரு கலை இயக்குநராகப் பணியாற்றிஇருக்கிறேன். ‘பொம்மலாட்டம்' படத்துக்காகப் போலியாக ஒரு கேமிராவை உருவாக்கினேன். படத்துக்குள் படப்பிடிப்பு எனும்போது, தனியாக கேமிராவை வாடகைக்கு எடுத்து வைக்க முடியாது. ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வரை வாடகையே வரும். ஆகையால் போலியாக ஒரு கேமிராவை உருவாக்க முடியுமா எனக் கேட்டார்கள்.

நான் செய்து கொடுத்துவிட்டு வெளியூருக்குச் சென்றுவிட்டேன். ஒரு நாள் பாரதிராஜா சார் அலுவலகம் சென்றபோது, “சாபுவின் உதவியாளரா நீ. யாருப்பா அந்த கேமராவைச் செய்தது” என்றவுடன் நான்தான் என்றேன். உடனே எழுந்து நின்று கைக்கொடுத்து “படப்பிடிப்பில் எல்லோரும் கேமராவை நோக்கி நடந்து வாங்க என்று சொன்னால், பாதிப் பேர் உன்னோட போலி கேமராவை நோக்கிப் போயிடுறாங்கப்பா. போலி எது, உண்மை எது என்று தெரியாத அளவுக்கு அற்புதமாகச் செய்திருந்தாய்” என்றார்.

கலை இயக்குநர், தயாரிப்பு வடிவமைப் பாளர், சிறப்பு உபகரணங்கள் என உங்களுடைய பயணம் எப்படியிருக்கிறது?

முழுமையாகக் கலை இயக்குநராக ‘க்ரிஷ் 3' செய்தேன். சாபு சிரில்தான் அந்தப் படத்துக்குத் தயாரிப்பு வடிவமைப்பாளர். என்னை நம்பி ஒரு பெரிய படத்தைக் கொடுத்தார். தயாரிப்பு வடிவமைப்பாளராக எனக்கு முதல் படமே 'பிரதர்ஸ்' என்ற 100 கோடி பட்ஜெட் படம் கிடைத்தது. அந்தப் படம் எனக்கு ஒரு பெரிய அங்கீகாரமாக இருந்தது.

தயாரிப்பு வடிவமைப்பாளர், கலை இயக்குநர் என்பதைத் தாண்டி சிறப்பு உபகரணங்களும் பண்ணுவார் என்பதால் அழைக்கிறார்கள். ‘இருமுகன்' அப்படித்தான் கிடைத்தது. அந்தப் படம் வழக்கமான கலை இயக்குநருக்கான படம் கிடையாது. அரங்குகளுக்குள் சிறு சிறு பொருட்கள் கூட உங்களுடைய கவனம் ஈர்க்க வேண்டும் என்று மெனக்கெட்டுச் செய்தோம்.

விளம்பரப் படங்களுக்கு மினியேச்சர் பண்ணுவேன். இந்தியாவிலேயே பெரிய திரைப்படக் கல்லூரியான புனே திரைப்பட கல்லூரியில் பகுதிநேர ஆசிரியராக மினியேச்சர் பற்றி வகுப்பு எடுத்துவருகிறேன். முன்பு அனைவருமே ஓவியக் கல்லூரியில் படித்துக் கலை இயக்குநராக நிறைய பயிற்சி எடுத்த பிறகுதான் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரியத் தொடங்கினார்கள். 1995 முதல்தான் புனே திரைப்படக் கல்லூரியில் தயாரிப்பு வடிவமைப்புக்கு எனப் படிப்பை உருவாக்கினார்கள். நான் புனே திரைப்பட கல்லூரியில் படிக்கவில்லை. ஆனால், அங்கு பகுதி நேரமாக வகுப்பு எடுப்பது எனக்குப் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.


'கிக்' படத்துக்காக உருவாக்கிய 3டி முகமூடியுடன்

பெரும்பாலான படங்களில் நாயகனுக்கும் இயக்குநருக்கு மட்டுமே பெயர் கிடைக்கும். நமது பணி அங்கீகரிக்கப்படவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா?

எனக்கு மட்டுமல்ல, பல கலை இயக்குநர்களின் பணி இப்போது வரை பெரிதாகப் பேசப்படாமல் இருப்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான். இது குறித்து பல கலை இயக்குநர்களிடம் நான் பேசியிருக்கிறேன். ‘இருமுகன்' எனக்குத் தயாரிப்பு வடிவமைப்பாளராக முதல் படம். ஆனால், 10 படத்தில் கிடைக்க வேண்டிய பெயர் எனக்கு ஒரு படத்தில் கிடைத்தது. நமக்கு அங்கீகாரம் இல்லையே என்ற சூழலில் ‘இருமுகன்' படத்துக்காகப் பலரும் வாழ்த்து தெரிவித்ததால் மகிழ்ந்தேன். தற்போது அடித்தட்டு மக்களுக்கும் அரங்குகள் பற்றித் தெரிந்திருக்கும் அளவுக்கு திரையுலகம் மாறிவருகிறது என நினைக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x