Published : 28 Oct 2022 06:35 AM
Last Updated : 28 Oct 2022 06:35 AM
இன்ஸ்டாவில் துடிப்பாக இயங்கும் கதாநாயகிகளில் ஒருவர் சாக் ஷி. சுந்தர்.சியின் இயக்கத்தில் நடித்த பிறகு பிஸியாகியிருக்கும் இவர், பிரபுதேவாவின் ‘பஹீரா’, சமுத்திரக் கனியின் ‘நான் கடவுள் இல்லை’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அதேபோல், ‘கெஸ்ட் - சாப்டர் 2’, விக்கி இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் ஜோடியாக ஒரு படம், ‘கந்த கோட்டை’ பட இயக்குநர் சக்தி இயக்கத்தில் ஒரு படம் என மூன்று படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.
‘கிடா’ - ‘குரங்கு பெடல்’ தேர்வு!
கோவாவில் 53வது சர்வதேச இந்தியப் படவிழா வரும் நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. அதில் இடம்பெறும் பிலிம் பஜாரில் சுயாதீனமாகத் தயாராகியுள்ள இந்திய மொழிப் படங்களின் விவரங்களைக் காட்சிக்கு வைத்து சர்வதேசச் சந்தைக்கு எடுத்துச் செல்லலாம். மேலும் இப்படவிழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடத் தேர்வாகும் தமிழ்ப் படங்கள் மீதான சந்தை மதிப்பும் தேசிய அளவிலான கவனமும் அதிகரிப்பது வழக்கம். இம்முறை ‘கிடா’, ‘குரங்கு பெடல்’, ‘ஜெய் பீம்’ ஆகிய மூன்று தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.
இவற்றில், ‘கிடா’ திரைப்படத்தை ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைதன்யா தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் உருவாக்கத்தில் பூ ராமு, காளி வெங்கட் ஆகியோருடன் பத்துக்கும் அதிகமான சிறார் நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். ‘குரங்கு பெடல்’ படத்தை லிங்குசாமி - சந்திரபோஸ் தலைமையிலான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘மதுபான கடை’, ‘வட்டம்’ படங்களின் இயக்குநர் கமலக்கண்ணன், எழுத்தாளர் ராசி அழகப்பனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இயக்கியிருக்கும் படம் இது.
நடிக்க வந்த ராஜீவ்!
சத்யராஜ், வசந்த் ரவி நடிக்க, குகன் சென்னியப்பன் இயக்கும் படம் ‘வெப்பன்’. அறிவியல் புனைவுத் திரைப்படமாக உருவாகும் இதில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஒளிப்பதிவாளரும் இயக்கு நருமான ராஜீவ் மேனன். இதற்கு முன் ‘ஹரிகிருஷ்ணன்ஸ்’ என்கிற மலையாளப் படத்தில் நடித்திருந்தார். தமிழ்ப் படமொன்றில் அவர் முழுநீள கதாபாத்திரம் ஏற்பது இதுவே முதல் முறை. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தை மில்லியன் ஸ்டுடியோ சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரிக்கிறார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT