Published : 04 Nov 2016 10:21 AM
Last Updated : 04 Nov 2016 10:21 AM
இயக்குநர் விஜய்யுடனான மண வாழ்விலிருந்து பரஸ்பர சம்மதத்துடன் விலகிய அமலா பால் தற்போது கோலிவுட்டில் பிஸியான நாயகி. வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படும் ‘வட சென்னை’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். அடுத்து கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், சுதீப் நடிப்பில் பெரிய பட்ஜெட் படமாகத் தயாராகியிருக்கும் ‘ஹெப்புலி’ படத்தில் அமலாதான் கதாநாயகி.
இவை தவிர தெலுங்கில் பெயரிடப்படாத இரண்டு படங்கள் என வேகம் காட்டிவரும் இவரை ‘திருட்டுப் பயலே’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக ஆக்கியிருக்கிறார் இயக்குநர் சுசி கணேசன். பாபி சிம்ஹா நாயகனாகவும் பிரசன்னா வில்லனாகவும் நடிக்கும் இந்தப் படத்தில் அமலாவுக்கும் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தக்கூடிய கனமான கதாபாத்திரமாம்.
போலீஸ் சந்தானம்!
‘வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ்’ புதிய தயாரிப்பாக உருவாகும் படத்தில் சந்தானம் முதல்முறையாகக் காவல் அதிகாரியாக நடிக்கிறார். எம்.ஜி.ஆர். பாடலான ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்ற தலைப்பைச் சூட்டியிருக்கிறார்கள். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய கே.எஸ்.மணிகண்டனே இந்தப் படத்தையும் இயக்குகிறார். ‘அநேகன்’ புகழ் அமைரா, சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இவர்களுடன் ரோபோ சங்கர், ‘மொட்டை’ ராஜேந்திரன், ‘யோகி’ பாபு, மயில்சாமி, கோவை சரளா என பத்து நகைச்சுவை நடிகர்கள் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். கோபிநாத் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை என தொழில்நுட்பக் கூட்டணியும் பலம் காட்டுகிறது. “படத்தில் சந்தானம் சிரிப்பு போலீஸா, சீரியஸ் போலீஸா?” என்றதற்கு இப்போது அதைக் கூற முடியாது என்கிறார் இயக்குநர்.
நகைச்சுவை பாதை
‘சுப்ரமணியபுரம்’, ‘பசங்க’ படங்களில் தொடங்கி இதுவரை 8 படங்களைத் தயாரித்துள்ள சசிகுமார் 9-வது படத்தில் தனது ஆக்ஷன் பாதையை மாற்றியிருக்கிறார். அறிமுக இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு. ‘பலே வெள்ளையத் தேவா’ என்று தலைப்பு சூட்டியது மட்டுமின்றி, முதல்முறையாக முழுநீள நகைச்சுவைக் கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்கிறது இயக்குநர் வட்டாரம்.
மீண்டும் மேடி
‘இறுதிச் சுற்று’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் அதிக கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறாராம் மாதவன். சற்குணம் இயக்கத்தில் தற்போது நடித்துவரும் மாதவன், தொடர்ந்து முதல் படம் வெற்றி கொடுத்த பல இயக்குநர்களிடம் கதை கேட்டு, அவற்றில் மூன்று கதைகளுக்கு ஓகே சொல்லியிருக்கிறாராம். மூன்றுமே அதிரடி ஆக்ஷன் கதைகள்! மேடியை முழுவீச்சில் ஆக்ஷன் நாயகனாக இனி தமிழ் ரசிகர்கள் காணலாம்.
ஹன்சிகா வந்தாச்சு!
“என்னதான் ஆச்சு?” என்று ஹன்சிகாவைப் பார்த்து கொஞ்ச நாளாகக் கேட்க ஆரம்பித்திருக் கிறார்கள் ரசிகர்கள். கதை சர்ச்சையில் சிக்கிக்கொண்ட ஜெயம் ரவியின் ‘போகன்’ படத்தைத் தவிர, கைவசம் எந்தப் படமும் இல்லாமல் இருந்தார். பல புதுமுகக் கதாநாயகிகளின் வரவால் ஒதுங்கிவிட்டாரா அல்லது ஒதுக்கப்பட்டுவிட்டாரா என்ற பரபரப்பான பேச்சுக்களையெல்லாம் தற்போது பொய்யாக்கிவிட்டார். ‘மான் கராத்தே’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்த ஹன்சிகா, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ்ஃபிக்ஷன் கதையில் அவருக்கு மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT