Published : 04 Nov 2016 10:20 AM
Last Updated : 04 Nov 2016 10:20 AM
ராமு (1966) - 50 ஆண்டுகள் நிறைவு |
எத்தனை பெரிய நட்சத்திரம் என்றாலும் ஒருநாள் தோல்வியையும் ருசி பார்க்க வேண்டியிருக்கும். வரிசையாகத் தோல்விகள் என்றால் வெளியே தலைகாட்ட முடியாது. தமிழ் சினிமாவின் இரண்டாவது ‘காதல் மன்னன்’ என்று புகழப்பட்ட ஜெமினி கணேசனுக்கும் இது நடந்தது. ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘தேன்நிலவு’ என்று சூப்பர் டூப்பர் வெற்றிகளைக் கொடுத்தவர், காதல் கதைகளை அதிகம் நம்பியதால் மூன்று பாதாளத் தோல்விப் படங்களைக் கொடுத்தார். அதுவும் அடுத்தடுத்து. அது கோடம்பாக்கத்தின் வாய்க்கு அவல் கிடைத்ததுபோல் ஆகிவிட்டது. ‘ஜெமினியின் சுக்ரதசை ஸ்வாகா’ என்று பேச ஆரம்பித்தார்கள்.
இனியும் தாமதம் கூடாது என்று நினைத்த ஜெமினி, தனது கீரிடத்தைக் கழற்றி வீட்டில் வைத்துவிட்டு மெய்யப்பச் செட்டியாரைக் காண ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்குள் நுழைந்தார். “சார்… நீங்க அனவுன்ஸ் பண்ணியிருக்கற ‘ராமு’ படத்துல எனக்கு வாய்ப்பு கொடுங்க. ராஜா கேரக்டர் எனக்கு பர்ஃபெக்டா ஃபிட் ஆகும். இது என் உள்மனசோட ஆரூடம்” – ஜெமினி இப்படிக் கேட்டதும் ‘‘ராஜா கேரக்டர் உங்க காது வரைக்கும் எப்படி வந்துச்சு” என்று செட்டியார் கேட்கவில்லை.
ஏனென்றால் ‘ராமு’ படத்துக்குத் திரைக்கதை எழுதியவர் ஜெமினியுடன் திரையுலகில் ஒன்றாகப் பயணித்த ஜாவர் சீதாராமன். ஜெமினியும் அவரும் நல்ல சிநேகிதர்கள். “இந்த சிச்சுவேஷன்ல உனக்கு ‘ராமு’தான்டா சரியான ஸ்கிரிப்ட். வெட்கத்தை விட்டு செட்டியார்கிட்டே கேட்டுடு. ரெமுனரேஷன் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்னு சொல்லிடு” என்று அட்வைஸ் கொடுத்தார்.
பிள்ளைகளின் பிடிவாதம் தந்தையின் தீர்மானம்
செட்டியாரின் பிள்ளைகள் தலையெடுத்து திரைப்படத் தயாரிப்பு நிர்வாகத்தில் அட்டகாசமாகப் பங்கெடுத்துக்கொண்டிருந்த அறுபதுகளின் மையப் பகுதி. ‘ராமு’ படத்துக்கு ஜெய்சங்கரை ஹீரோவாக அமர்த்துவது என்று முடிவு செய்து அதை தங்கள் அப்பச்சியிடம் சொல்லி சம்மதம் பெற்று வைத்திருந்தார்கள். ஆனால் ஜெமினி போல் ஜனங்களின் அபிமானம் பெற்ற ஒரு மெகா ஸ்டார் வந்து கேட்டால் செட்டியாரால் முடியாது என்று மறுக்க முடியுமா? மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் செட்டியார் அமைதி காத்த அந்த சில விநாடிகளின் மவுனத்தைத் தனதாக்கிக்கொண்டார் ஜெமினி.
“இந்தப் படத்துக்கு நீங்க என்ன சம்பளம் கொடுத்தாலும் வாங்கிக்கிறேன். இந்தப் படத்தை முடிச்சுக்கொடுத்துட்டு அடுத்த படத்துக்குப் போறேன்” என்றார். ‘களத்தூர் கண்ணம்மா’ எனும் ஏ.வி.எம்முக்கு புகழ்சேர்த்த காவியத்தில் நடித்தவர், இவ்வளவு பெரிய நடிகர் இத்தனை இறங்கி வருகிறாரே என்று இதயம் இளகியது செட்டியாருக்கு. என்றாலும் “ பிள்ளைகள்கிட்ட கொஞ்சம் கலந்துக்கிறேன். நாளைக்கு நல்ல பதில் சொல்றேன்” என்று நம்பிக்கையோடு அனுப்பி வைத்தார்.
ஏ.வி.எம். தயாரிப்பில் அப்போது தயாராகிக் கொண்டிருந்த ‘குழந்தையும் தெய்வமும்’ படத்திலும் ஜெய்சங்கர்தான் நாயகன். எனவே குழந்தையை மையப்படுத்திய இந்தக் குடும்பப் படத்திலும் ஜெய்சங்கரையே ஒப்பந்தம் செய்துவிடுவது சரியாக இருக்கும் என்று நினைத்தார்கள் பிள்ளைகள். அதனால் தந்தையுடன் விவாதித்தார்கள். “கதையில் வரும் கொள்ளைக்காரர்களையும் கதாநாயகியை அழிக்க நினைக்கும் வில்லன் அசோகனையும் அடக்கச் சரியான ஆள் ஜெய்சங்கர்தான்” என்றார்கள்.
ஆனால், செட்டியாரின் சிந்தனை வேறு விதமாக இருந்தது. “சம்சாரத்தை இழந்து, மகனும் வாய்பேச முடியாம போயிடுற சோகத்தை தாங்கணும். அதுக்கு ஜெமினிதான் என்னோட சாய்ஸ்” என்றார். அப்பச்சியின் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? பிள்ளைகளின் பிடிவாதம், தந்தையின் தீர்மானத்தால் தளர்ந்தது. ஏ.சி. திருலோகச்சந்தரின் இயக்கத்தில் படம் விறுவிறுவென்று வளர்ந்தது. ஜெமினி கணேசன், கே.ஆர். விஜயா, மாஸ்டர் ராஜ்குமார், எஸ்.ஏ. அசோகன், ஓ.ஏ.கே. தேவர்,
வி. நாகையா, வி.கே. ராமசாமி, வி.எஸ். ராகவன், சி.எஸ். புஷ்பலதா எனப் பல புகழ்பெற்ற நட்சத்திரங்கள் நடித்த இந்தப் படம் 10.06.1966ல் வெளியாகிப் பல திரையரங்குகளில் 100 நாள் கொண்டாடியது. முதலில் ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தைப் போலவே அந்த ஆண்டின் சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருதை ’ராமு’ தட்டிக்கொண்டு வந்தது.
கதையின் கதை
அப்படிப்பட்ட இந்தப் படத்தின் கதை ஒரு படுதோல்வியடைந்த இந்திப் படத்தின் கதையை ஆதாரமாகக் கொண்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ‘குழந்தையும் தெய்வமும்' படத்தை இந்தியிலும் தயாரித்துக்கொண்டிருந்தது ஏ.வி. நிறுவனம். பாம்பேயில் நடந்து வந்த அந்தப் படத்தின் படப்பிடிப்புக்குச் சென்றார் செட்டியாரின் புதல்வர் சரவணன். விமானத்திலிருந்து இறங்கி காரில் ஸ்டூடியோ நோக்கிப் போய்க்கொண்டிருந்தவரை ஈர்த்தது ஒரு சினிமா சுவரொட்டி.
ஒரு சிறுவனுடன் அந்நாளின் முன்னணி இந்திப் பட நாயகன் கிஷோர் குமார் சோகம் கவியும் முகத்துடன் அந்தச் சினிமா சுவரொட்டியில் நிற்க, காரை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவரிடம் “இது என்ன படம்? பெரிய ஹிட்டா?” என்றார். கிஷோர் குமாருக்காக அந்தப் படத்தை ஏற்கெனவே பார்த்து நொந்துபோயிருந்த டிரைவர் “இதுவொரு மொக்க ‘மூங்கா’ படம். வாய்பேச முடியாத ஒரு சிறுவனைப் பற்றிய கதை. கடைசிவரைக்கும் அழுவாச்சி காவியம்” என்று அலுத்துக்கொண்டார். அந்தப் படம்தான் “தூர் ககன் கி சாவோன் மேயின்' (Door Gagan Ki Chhaon Mein) என்ற இந்திப் படம்.
தலையெழுத்தை மாற்றிய திரைக்கதை
படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பதினைந்தாயிரம் ரூபாய்க்கு (இன்றைய பணத்துக்கு அது பதினைந்து லட்சம் என்று கூடக் கொள்ளலாம்) வாங்கிய பின் அந்தப் படத்தை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு, திருலோகச் சந்தர், கதை-வசனகர்த்தா ஜாவர் சீதாராமன் ஆகியோருக்குப் போட்டுக்காட்டியிருக்கிறார்கள்.
படம் முடிந்ததும் “இது சுத்த வேஸ்ட்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்களாம் கிருஷ்ணனும் பஞ்சுவும். அவர்கள் மிகவும் நம்பும் எழுத்தாளர் ஜாவர் சீதாராமனோ, “பிறவியிலேயே வாய் பேச முடியாத சிறுவனின் கதையான இதைத் தேற்றுவது கல்லில் நார் உரிப்பது போல” என்று நழுவ, அவரைப் பிடித்து நிறுத்திய சரவணன், “அந்தச் சிறுவன் பிறவியிலேயே வாய் பேச முடியாதவன் இல்லை. இடையில் ஏற்பட்ட ஒரு விபத்தினால் ஊமையானவன். அது எப்படிப்பட்ட விபத்து, அந்த விபத்து யாருக்கு நடந்தது என்று திரைக்கதையில் அவனுக்கு நடந்த விபத்தை ஃப்ளாஷ் பேக்காக மாற்றி எழுதிப் பாருங்கள்” என்று சொல்ல “எனக்கு இப்படி ஒரு ஐடியா தோன்றாமல் போய்விட்டதே?” என்று வியந்து, ஒரு தோல்விப் படத்தின் கதையை ஆதாரமாகக் கொண்டு அதன் தலையெழுத்தை ஐந்தே நாட்களில் மாற்றிப் புதிய திரைக்கதையை எழுதி முடித்தார் சீதாராமன்.
கிஷோர் குமாரின் பாராட்டு
இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்துகொள்ள செட்டியாரின் அழைப்பை ஏற்று மெட்ராஸ் வந்தார் இந்திப் படத்தின் கதாநாயகனான கிஷோர்குமார். விழாவில் கலந்துகொள்ளும் முன் அவருக்கு படத்தைத் திரையிட்டுக் காட்டப்பட்டது. வெற்றி விழாவில் பேசிய கிஷோர் குமார் “ தமிழ் ரீமேக்கை பார்த்ததும் நாங்கள் கதையை எத்தனை பலவீனமாக அமைத்திருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். திரைக்கதையாசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்” என்றார்.
இசையமுதம்
இந்தப் படத்தின் வெற்றிக்குத் திரைக்கதை முதல் காரணம் என்றால் இசை இரண்டாவது காரணம். மெல்லிசை மன்னரின் இசையில் வெண்பனிக்குரலோன் பி.பி. நிவாஸ் பாடிய ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடல் இன்றளவும் புதுமையோடு ஒலிக்கிறது. அதேபோல ‘பச்சைமரம் ஒன்று இச்சைக்கிளி ரெண்டு’ பாடலும் இன்றும் நம் நினைவுகளைக் கிளறக்கூடியது. இந்தப் படத்தில் ‘ராமு’வாக நடித்திருந்த மாஸ்டர் ராஜ்குமாரின் நடிப்பையும், படத்தில் தோன்றும் அவனது அன்புக்குரிய நாயின் உயிர்காக்கும் தோழமையும் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாதவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT