Last Updated : 17 Nov, 2016 04:54 PM

 

Published : 17 Nov 2016 04:54 PM
Last Updated : 17 Nov 2016 04:54 PM

பயமும் சிரிப்பும் கலந்த பயணம்! - மதறாஸ் டு பாண்டிச்சேரி 50 ஆண்டுகள் நிறைவு

இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு நிம்மதியடைந்த அமெரிக்கர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு மாறினார்கள். அமெரிக்காவின் குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றுலா சென்றுவருவதை சாகசமாகக் கருதிச் செய்தனர். இப்படிப் பயணங்களின் மீது அவர்கள் காட்டிய விருப்பம்தான் ‘ரோட் மூவி’ என்ற புதுவகை சினிமா உருவாகக் காரணம்.

‘போனி அண்ட் கிளைட்’(Bonnie and Clyde), ‘ஈஸி ரைடர்’(Easy Rider) ஆகிய இரண்டு முன்னோடிப் பயணத் திரைப்படங்கள் அமெரிக்காவுக்கு வெளியேயும் ‘ரோட் மூவி’களுக்குச் சாலை போட்டுக் கொடுத்தன. இவை சென்னையிலும் வெளியாகி ஓடின. இவற்றைத் தொடர்ந்து வெளிவந்த ‘ இஃப் இட்ஸ் டியூஸ்டே இட் மஸ்ட் பி பெல்ஜியம்’(If It’s Tuesday It Must Be Belgium) என்ற பயணத் திரைப்படம் சென்னையின் பிராட்வே, கெயிட்டி, சன் ஆகிய திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிச் சாதனை படைத்தது.

இந்தப் படத்துக்கு தமிழ் ரசிகர்கள் நல்கிய ஆதரவினைக் கண்டு, உசிலை த. சோமநாதன் ‘மதறாஸ் டூ பாண்டிச்சேரி’ படத்தின் கதையை எழுதினாரா என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்த் திரையின் முழுமையான பயணத் திரைப்படம் ஒன்றுக்கான கதை, வசனத்தை எழுதியவர் என்ற முறையில் தமிழ் சினிமா வரலாறு அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறது.

பொதுவுடைமை எழுத்துக்காரர்

உசிலை சோமநாதன் உசிலம்பட்டியில் பிறந்து வளர்ந்தவர். 15 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சியின் கலைக்குழுவில் இணைந்து நாடக நடிகராக வலம்வந்தார். 21 வயதில் பொதுவுடைமை நாடகங்களை எழுதத் தொடங்கினார். இவரது நாடகங்கள் பலவற்றுக்கு இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதாராஜன் இசையமைத்திருக்கிறார். தி.மு.க.வை எதிர்த்துக் கடுமையான விமர்சனங்களைச் செய்த ம.பொ.சி. ‘எழுச்சிக் கடல்’ என்ற நாடகமொன்றை எழுதினார். அதற்காகத் துணிச்சலாகப் பேசும் இளம் நடிகர் ஒருவரைத் தேடி உசிலை சோமநாதனைக் கண்டுபிடித்தார்.

அந்த நாடகத்துக்கு எழுந்த எதிர்ப்பை மீறி அதில் நடித்துவந்த அவர், பிறகு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் மதுரையிலிருந்து மதராஸ் வந்தார். அவரை இரட்டை இயக்குநர்கள் திருமலையும் மகாலிங்கமும் ஆதரித்தனர். நடிப்பதை நிறுத்திவிட்டுத் திரைப்படங்களைத் தயாரித்துவந்த நடிகர் பி.எஸ். வீரப்பாவும் இவருக்குக் கதை, வசனம் எழுத வாய்ப்புகளைத் தந்தார். மக்களின் அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் யதார்த்தமான நகைச்சுவைத் தருணங்களைத் தொட்டுக்கொண்டு தனது கதைகளில் நக்கலும் நையாண்டியும் கலந்த சமூக விமர்சனத்தையும் கதாபாத்திரங்கள் வழியே இடம்பெறச் செய்தார் சோமநாதன். ‘சாது மிரண்டால்’, ‘சோப்பு சீப்பு கண்ணாடி’, ‘பொண்ணு மாப்ளே’ எனப் பல படங்களில் இந்தத் தன்மையைக் காணலாம்.

‘மதராஸ் டூ பாண்டிச்சேரி’ படத்தைத் தனது சிறப்பான படைப்பாக எழுதினார் அவர். ஒரு ‘பயணத் திரைப்பட’த்துக்கான இலக்கணத்தை மீறிவிடாமல், பேருந்தில் பயணிக்கும் மனிதர்களின் உலகம் எப்படிப்பட்டது என்பதைப் பயமும் நகைச்சுவையும் இரண்டறக் கலந்த அனுபவமாகத் தரவே, அந்தத் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிபெற்றது.

ஒரு பேருந்தும் அதன் பயணிகளும்

‘அன்பே சிவம்’, ‘பையா’, ‘நந்தலாலா’, ‘கண்டேன் காதலை’, ‘பத்து எண்றதுக்குள்ள’ என மிகக் குறைவான ‘பயணத் திரைப்பட’ங்களே முயற்சிக்கப்பட்டுள்ள தமிழ் சினிமாவில், ‘மதறாஸ் டூ பாண்டிச்சேரி’யின் கச்சிதம், ஒழுங்கு ஆகிய அம்சங்கள் இந்திய அளவில் முன்னோடிப் படங்களுள் ஒன்றாக அதை ஆக்குகின்றன. அந்த அளவுக்கு ப்ளாஷ்பேக் காட்சிகள் பேருந்துப் பயணம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பை மறக்கச் செய்துவிடாதபடி கச்சிதமான சிறுசிறு நறுக்குகளாக வந்து செல்லும்.

சினிமா நட்சத்திரம் ஆகும் ஆவலுடன் இருக்கிறாள் கதாநாயகி. அவளது செல்வச் செழுமை, அழகு ஆகியவற்றைக் காணும் ஏமாற்றுக் கும்பல் ஒன்று, அவளது சினிமா ஆசைக்கு மேலும் தூபம் போட்டு அவளிடமிருந்து பணத்தையும் நகைகளையும் அபகரிக்கிறது. கடைசி முறையாக அவளிடமிருந்து கறந்த பணத்தைப் பங்கிட்டுக்கொள்வதில் ஏமாற்றுக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு இடையே பிரச்சினை. அதில் ஏற்படும் மோதலில் ஒருவன் கொல்லப்பட, அதை நேரில் காணும் நாயகி, கயவர்களிடமிருந்து தப்பித்து சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் பேருந்து ஒன்றில் ஏறுகிறாள்.

விடாமல் துரத்தும் அந்தக் கும்பல், அவளைக் கொல்வதற்காகத் துப்பாக்கியுடன் ஒருவனை அதே பேருந்தில் அனுப்பி வைக்கிறது. தொடக்கம் முதலே நாயகியின் மேல் காதலுடன் பின்தொடரும் நாயகன் எதிர்பாராமல் தனது நண்பர்களுடன் அந்தப் பேருந்தில் ஏறுகிறான். பாண்டிச்சேரிக்குச் செல்லும் வழியில் இடையில் நின்று செல்லும் ஒவ்வொரு ஊரிலும் பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறார்கள்.

நாயகன் நாயகியைப் போலவே பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் முக்கியக் கதாபாத்திரங்களாக மின்னுகிறார்கள். பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் குணாதிசயங்கள் மூலம் 60-களின் சமூக, பொருளாதார வாழ்க்கையின் கண்ணாடியாக நகைச்சுவை மின்னல்கள் தெறிக்கப் படம் பயணிக்கிறது. கூடவே பயணிக்கும் கொலைகாரனிடமிருந்து நாயகி தப்பித்தாரா, நாயகனின் காதலை ஏற்றுக்கொண்டாரா என்பதுதான் கதை.

மின்னும் நட்சத்திரங்கள்

அழகும் துடிப்பும் கொண்ட மற்றொரு கதாநாயகனாக அறிமுகமான பி.எஸ். ரவிச்சந்திரனுக்கு (காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்) புகழைக் கொண்டுவந்த படங்களில் இதற்குப் பெரிய பங்கு இருக்கிறது. கன்னடத் திரையில் ‘மினுகு தாரா’ என்று புகழப்பட்ட கல்பனா, கொலைகாரர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடும் பேருந்தில் ஏறும் கதாபாத்திரமாக நடித்து அசத்தியிருந்தார். கதாநாயகன் ரவிச்சந்திரனைவிட வில்லனாக நடித்த ‘கள்ளபார்ட்’ நடராஜன் அழகாகக் காட்சி அளித்தார்.

இந்த மூன்று முக்கிய வேடங்களைத் தாண்டிப் பேருந்து ஓட்டுநராக ஏ. கருணாநிதியும் நடத்துநராக நாகேஷும் அரங்கேற்றும் உயர்தரமான நகைச்சுவை இந்தப் படத்தை ஒரு பயண அனுபவமாக உணரச் செய்யக்கூடியது. இவர்களோடு பேருந்தில் பயணிக்கும் பிராமணப் பெண்ணாக மனோரமா காட்டும் பவிசான உடல்மொழியும் வாய்மொழியும் அவருக்கு இணை அவர்தான் எனக் கூறவைத்தது.

அவரது கணவராக நடித்தவர் ஏ. வீரப்பன். பின்னாட்களில் திரைப்படங்களுக்கு நகைச்சுவைப் பகுதிகளை எழுதிப் புகழ்பெற்றவர். இவர்களின் ஒரே மகனாகப் பேருந்தில் பயணிக்கும் காதர், சக பயணிகள் சாப்பிடும் பகோடாவைப் பார்த்து தனக்கும் பகோடா வேண்டும் என்று கத்தி அடம்பிடிக்கும் காட்சிக்குக் கிடைத்த அமோக வரவேற்பால் அவர் பின்னாளில் ‘பகோடா’ காதர் என்று புகழப்பட்டார். இத்தனை நட்சத்திரங்கள் மின்னும் இந்தத் திரைப்படத்தை இயக்கிய நட்சத்திர இரட்டை இயக்குநர்கள் திருமலை -மகாலிங்கம் ஆகிய இருவரும் இயக்குநர் பீம்சிங்கிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்கள்.

தனது உதவியாளர்களைத் தட்டிக்கொடுத்து வளர்க்கும் விதமாக பீம்சிங் இந்தப் படத்தைத் தயாரித்தார். ‘மதறாஸ் டூ பாண்டிச்சேரி’ படத்தின் வெற்றியைக் கண்ட பாலிவுட்டின் அந்நாள் நகைச்சுவை நடிகரான மெகமூத் அதை ‘பாம்பே டூ கோவா’ என்ற பெயரில் இந்தியில் மறுஆக்கம் செய்தார். ரவிச்சந்திரன் ஏற்ற கதாநாயன் வேடத்துக்கு முதலில் அவர் அணுகியது அன்று இளைஞராக இருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைத்தான். அவர் மறுத்துவிட அதன் பிறகு அமிதாப் நடித்தார்.

இசையும் தொழில்நுட்பமும்

டி.கே. ராமமூர்த்தி தனித்து இசையமைத்த படங்களில் ஒன்றான இது 1966-ம் ஆண்டு டிசம்பர் 16-ல் வெளியானது. கதையின் வேகத்தைக் கெடுத்துவிடாமல் கதையுடன் பயணிக்கும் நான்கு பாடல்களை மட்டுமே இயக்குநர்கள் பயன்படுத்தினார்கள். இந்தப் படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்புக்காக அன்று மதராஸில் பிரபலமான போக்குவரத்து நிறுவனமாக இருந்த புரொவின்ஷியல் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம் தனது‘பென்ஸ்’ ரகப் பேருந்து ஒன்றைக் கட்டணம் ஏதுமின்றிக் கொடுத்து உதவியது.

பேருந்தின் உள்ளே படமாக்கப்பட்ட காட்சிகள் வடபழனி விஜயா -வாஹினி ஸ்டூடியோவிலும் கீழ்ப்பாக்கம் நியூடோன் ஸ்டூடியோவிலும் இரண்டு துண்டாக வெட்டியது போன்ற பேருந்து செட்டில் படமாக்கப்பட்டன. சாலையோரக் காட்சிகளைத் தனியே படம்பிடித்து வந்து அவற்றைப் பேருந்து செட்டின் பின்னால் உள்ள திரையில் ஓடவிட்டு, பேருந்தின் உள்ளே நடைபெறும் காட்சிகளைப் படமாக்கினார்கள். இப்படி நடிப்பு, இசை, தொழில்நுட்பம், இயக்கம் எல்லாவற்றையும் கடந்து இந்தப் படத்தின் எழுத்தே படத்தின் வெற்றிக்கு ஆதாரமாக அமைந்தது என்று சொல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x