Published : 25 Nov 2016 10:34 AM
Last Updated : 25 Nov 2016 10:34 AM
இந்தித் திரைப்பட உலகம், ‘கேபரே' நடன அமைப்புகளுக்குப் பெயர் பெற்றது. அது இந்திய நடனக் கலை ஒன்றின், மேற்கத்திய வடிவம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. முகலாயர் காலத்தில், ‘முஜ்ரா' என்றொரு நடன வகை இருந்து வந்தது. கதக் நடனக் கலையின் பல கூறுகளைத் தன்னகத்தே கொண்ட இந்த நடன வகையை, மன்னர்களின் அந்தப்புரத்தில் வாழ்ந்து வந்த நடன மங்கைகள்தான் வளர்த்தெடுத்தார்கள்.
திரைப்படங்களில் இந்த முஜ்ரா நடன வகை உள்ளே வந்தபோது, உடைத் தேர்வுகள், அங்க அசைவுகள், பாடல் வரிகள் எனப் பலவற்றிலும் அதன் உண்மையான கலை வடிவத்தில் மாற்றத்தின் நிழல் படர்ந்தது. முஜ்ராவுக்கு அரசவை என்றால், கேபரேவுக்கு ‘நைட்கிளப்'. பெரும்பாலும், கேபரே பாடல் காட்சிக்குப் பிறகு, நாயகன் வில்லன்களை அடித்து நொறுக்குவார். அல்லது கதையில் முக்கியமான திருப்பம் அங்குதான் நடக்கும். அன்று கதையுடன் ஒட்டிப் பயணித்த இந்த கேபரே பாடல் காட்சி, பின்னாளில் கவர்ச்சிக்காக மட்டுமே வலிந்து திணிக்கப்படும் ‘ஐட்டம் நம்பராக' மாறிப் போனது.
அப்படிப்பட்ட, கேபரே பாடல்களைப் போற்றும் விதமாக, சென்னையில் ‘தி இந்து' சமீபத்தில் நடத்திய ‘நவம்பர் இசைத் திருவிழா'வில் ‘கேபரேவைப் போற்றுவோம்' எனும் தலைப்பில் கச்சேரி ஒன்றை நடத்தியது. இதில் அக்ரிதி கக்கர், சுக்ரிதி கக்கர், ப்ரக்ரிதி கக்கர் எனும் ‘கக்கர் சகோதரிகள்' இந்தியில் பிரபலமான சுமார் 20 கேபரே பாடல்களைப் பாடி அசத்தினர். எஸ்.டி. பர்மன் முதல் - ஷங்கர் - எஹ்ஸான் - லாய் வரை, முக்கியமான இசையமைப்பாளர்களின் பாடல்கள் கக்கர் சகோதரிகளின் பட்டியலில் அடக்கம். நடுவில் ஆங்காங்கே ஒவ்வொரு பாடலுக்குப் பின் உள்ள வரலாற்றுத் தகவல்களைச் சொன்னது நிகழ்ச்சிக்குக் கூடுதல் சுவாரசியத்தைச் சேர்த்தது.
கேபரே தேவதைகள்
பெரும்பாலும் இப்படியான கேபரே பாடல் காட்சிகளில் துணை நடிகை ஒருவர்தான் நடிப்பார். அவர் பெரும்பாலும் வில்லன் கூட்டத்தைச் சேர்ந்தவராக இருப்பார். அதனால் அவரை ரசிகர்கள் கண்டுகொள்வது ரொம்பவும் குறைவு. ஆனால் கேபரே பாடல் காட்சிகளில் மட்டுமே நடித்து, கதாநாயகிகளுக்கு இணையாகப் பேசப்பட்ட ஒரே நடிகை ஹெலன் மட்டுமே. இந்த நவம்பர் 21-ம் தேதி தனது 78-வது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கும் அவர், தன் இளமைக் காலத்தில் பல ஆண்களின் கால்களைத் தாளம் போட வைத்தவர்.
‘ஹவ்ரா பிரிட்ஜ்' படத்தில் ‘மேரா நாம் சின் சின் சூ' என்ற பாட்டில் ஆரம்பித்த அவருடைய பயணம், ரசிகர்களுக்கு சந்தோஷத்தையும், தயாரிப்பாளர்களுக்கு வசூலையும் வாரி வழங்கியது என்று சொன்னால் அது மிகையில்லை. அவர் ஆடிய பாடல்கள் வெற்றியடையக் கைகொடுத்தவர், பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே. ‘பியா து அப் தோ ஆஜா' (கேரவன்), ‘ஆஜ் கி ராத்' (அனாமிகா), ‘யே மேரா தில்' (டான்) உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்கள் இவர்களின் கூட்டணியில் உருவானவையே!
இசை அரசர்களின் துள்ளிசை
இப்படியான கேபரே பாடல்களின் பாரம்பரியம், இசையமைப்பாளர் எஸ்.டி. பர்மனிடமிருந்து தொடங்குகிறது. இன்னும் சொல்வதென்றால், அவரை ‘கேபரே பாடல்களின் தந்தை' என்றுகூட அழைக்கிறார்கள். தேவ் ஆனந்த் நடித்த ‘ஜுவெல் தீஃப்' எனும் படத்தில் இடம்பெற்ற ‘ராத் அகேலி ஹை' என்ற பாடல் ஒன்று போதும், பர்மனின் ‘கேபரே’ புகழைப் பாட!
அவருக்குப் பின் அவரது மகன், ‘பன்சம் தா' என்று திரை உலகினரால் அன்பாக அழைக்கப்படும் ஆர்.டி.பர்மன், ‘நான் பதினாறு அடி பாய்வேன்' என்பதை நிரூபித்தார். ‘கேரவன்' படத்தில் வரும் ‘பியா து அப் தோ ஆஜா' என்ற பாடலில் இடையிடையே ‘மோனிகா, ஓ மை டார்லிங்' என்ற குரல் ஒலிக்கும். அது ஆர்.டி. பர்மனின் குரல்தான். ‘தம் மாரோ தம்' (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா), ‘மெஹபூபா மெஹபூபா' (ஷோலே), ‘யே மேரா தில்' (டான்) உள்ளிட்ட பல பாடல்கள் ஆர்.டி. பர்மன் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தன.
அவருக்குப் பின் ஓ.பி. நய்யார் இசையமைத்த ‘ஆவோ ஹுசூர் தும்கோ' (கிஸ்மத்), பப்பி லஹிரியின் கைவண்ணத்தில் உருவான ‘ஜவானே ஜானே மன்' (நமக் ஹலால்), ராஜேஷ் ரோஷன் வார்த்த ‘ஜப் சாயே மேரா ஜாது' (லூட்மார்) என பாலிவுட் ரசிகர்களின் மனதில் நின்ற பல கேபரே பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
லதாவின் ஒற்றை கேபரே
ஆஷா போஸ்லே ஒரு பக்கம் கேபரே பாடல்களின் வழியே ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அவரது அக்கா லதா மங்கேஷ்கர், மெலடிகளின் மூலம் ரசிகர்களின் இதயத்தைச் சத்தமில்லாமல் கொள்ளை கொண்டிருந்தார். ஆனால் அவரும் ‘ஆ ஜானே ஜான்' (இன்தகாம்) எனும் கேபரே பாடல் ஒன்றைப் பாடினார். அவர் பாடிய ஒரே கேபரே பாடல் இதுவாகத்தான் இருக்கும். இதனைச் சாத்தியப்படுத்தியவர் பிரபல இசையமைப்பாளர் லக்ஷ்மிகாந்த் பியாரிலால்.
தான் பாடும் பாடல்களின் வரிகள் குறித்து எப்போதும் கவனமாக இருப்பவர் லதா. அவற்றில் துளி விரசம் இருந்தாலும், அதனைப் பாட மாட்டார். ஆனால் இந்தப் பாடல் அப்படி இருக்காது என்று லதாவுக்கு உத்தரவாதமளித்தார் பியாரிலால். பாடலை எழுதியவர் ராஜேந்தர் கிஷன்.
தன் காதலனை இரவைக் கொண்டாட அழைப்பது போன்ற வரிகள் கொண்டதுதான் இந்தப் பாடல். ஆனால் அதில் கொஞ்சம்கூட விரக தாபமோ அல்லது ஆபாசமோ இருக்காது. அந்த ஒரு காரணத்துக்காகவே லதா இந்தப் பாடலைப் பாடியதாக ஒரு தகவல் உண்டு. கேபரே பாடல்கள் என்றதும் அறைகுறை ஆடையுடன் நடிகைகள் போடும் குத்தாட்டம்தான் நம் நினைவுக்கு வர வேண்டும் என்று அவசியமில்லை. கவித்துவத்துடன் கூடிய பல பாடல்கள் இருக்கின்றன. அதனை ரசிப்பதற்கு மனம் இருந்தால் போதும், கொண்டாட்டத்தின் இன்னொரு பெயர் கேபரே என்பது புரியும்! அதைப் புரியவைத்தது இந்த நிகழ்ச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT