Published : 02 Sep 2022 10:35 AM
Last Updated : 02 Sep 2022 10:35 AM

ஓடிடி உலகம்: ஈழம் பற்றிய கூடுதல் புரிதல்!

திரை பாரதி

இலங்கைத் தமிழர் - சிங்களர் இடையிலான இனப் பிரச்சினையில், ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்தை ஒரு திருப்புமுனையாக மாற்றிக் காட்டியவர், அதற்குத் தலைமையேற்ற வேலுப்பிள்ளை பிரபாகரன்.

அறவழியில் தன்னெழுச்சியாக பல காலம் போராடிய தமிழர்கள், எந்தப் புள்ளியில் ஆயுதமேந்தினார்கள் என்பதை, பிரபாகரனின் பால்யம் தொடங்கி, 21 வயதில் அவர் ‘துவக்கு’ ஏந்தி களமாடிய முதல் சம்பவம் வரை, உயிர்ப்புமிக்க திரைமொழியில் விவரித்தது ‘மேதகு’ படத்தின் முதல் பாகம்.

தற்போது, ‘மேதகு 2’ என்கிற தலைப்பில் அதன் இரண்டாம் பாகம், மூவிவுட் (moviewood), தமிழ்ஸ் ஓடிடி (tamilsott) ஆகிய இரு ஓடிடி தளங்களில் வெளியாகியிருக்கிறது. இதில் விடுதலைப் புலிகள் ஒரு போராளி இயக்கமாக மெல்ல மெல்ல வளர்ந்த விதம், அதற்குத் தமிழக அரசியல் களத்தில் ஆதரவு அளித்தத் தலைவர்கள், தேசிய அரசியல் களத்தில், போராளி இயக்கங்கள் மீதான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் அணுகுமுறை உள்ளிட்ட பல நிகழ்வுகள் கால வரிசைப்படி பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அதேபோல், யாழ்ப்பாண பொது நூலகம் எரிப்பு, 1983ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கறுப்பு ஜூலை கலவரம் உட்பட எழுபதுகளுக்குப் பிறகு அடுத்து வந்த 12 ஆண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளையும் ஆவணப்படத் தன்மையுடன் விவரிக்கிறது இரண்டாம் பாகம்.

முதல் பாகத்தில் கிராமியக் கட்டைக் கூத்துக் கலையைத் திரைக்கதையின் ஓட்டத்துக்கு உந்துவிசைபோல் பயன்படுத்திக் கொண்டவர்கள், இரண்டாம் பாகத்தில் வில்லுப்பாட்டினைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், கூத்துக் கலை கொடுத்த உணர்வெழுச்சியை, வில்லுப்பாட்டு கொடுக்கத் தவறிவிடுகிறது.

பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கௌரி சங்கர் ஓரளவுக்குத் தோற்றப் பொருத்தத்துடன் வருகிறார். எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு மட்டும் அளவாக நடித்திருக்கிறார். நாசர் கதாபாத்திரம் கதையின் தொடக்கத்துக்கு உதவியிருக்கிறது. வினோத் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் பிரவின் குமாரின் இசையும் படத்துக்கு உயிரூட்டினாலும் கிரவுட் ஃபண்டிங் மூலம் சிக்கனமாக எடுக்கப்பட்டுள்ள பல காட்சிகள் ஈர்க்கத் தவறுகின்றன.

‘மூன்றாம் பாக’த்தில் வரலாறு தொடரும் என்கிற அறிவிப்புடன் படம் முடிகிறது. முதல் பாகத்தில் இருந்த கலை நேர்த்தியும் கச்சிதமும் இரண்டாம் பாகத்தில் மிஸ்ஸிங் என்றாலும் ஈழம் குறித்த கூடுதல் புரிதலை வழங்குகிறது இரண்டாம் பாகம். அதற்காகவே அதை ஒருமுறை காணலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x