Published : 21 Oct 2016 10:22 AM
Last Updated : 21 Oct 2016 10:22 AM
1965–ல் வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் திரைப் பிரவேசம் செய்தவர் சிவகுமார். ஒரு நீண்ட திரைப் பயணத்துக்குப் பிறகும் ஒரு சினிமா நட்சத்திரமாகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவர். திரையுலகில் இப்படியும் ஒரு முன்மாதிரிக் கலைஞரைக் காணமுடியுமா என்று வியக்கும் விதமாகத் தூய வாழ்முறையால் ‘கலையுலக மார்க்கண்டேயனாக’ கொண்டாடப்படும் அவர் தனது 75- பிறந்த நாளில் அடியெடுத்துவைக்கிறார். சிறந்த நடிகர், தலைசிறந்த ஓவியர் ஆகிய அடையாளங்களையும் தாண்டி, தேர்ந்த எழுத்தாளராகவும், ஆற்றல்மிக்க பேச்சாளராகவும் தனது தளங்களை கடந்த 15 ஆண்டுகளில் விரித்துக்கொண்டுள்ளார். இந்த அரிய பன்முகக் கலைஞரை, அவரது 75 அகவை நிறைவையொட்டி நேர்கண்டதிலிருந்து ஒரு பகுதி...
நினைவாற்றலுக்குப் பெயர்போனவர் நீங்கள். அறிமுகப்படத்தில் பேசியமுதல் வசனம் நினைவில் இருக்கிறதா?
நன்றாகவே நினைவிருக்கிறது. ‘ராதா உன் முகத்தை நீ கண்ணாடியில் பார்த்ததில்லையா? நீ அழகானவள் என்று உனது அம்மாவும் அண்ணனும் உன்னிடம் ஒருமுறைகூட சொன்னதில்லையா?’ என்ற மூன்று வரி வசனம்தான். அதற்கு மூன்று நாள் ரிகர்சல் கொடுத்தார்கள். இத்தனை சிறிய வசனத்துக்கு ஏன் இத்தனை பயிற்சி என்று நினைத்துக்கொண்டேன். முதன்முதலில் கேமரா முன்பு நிற்கிறேன்.
செட்டுக்குள் இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர் நுழைந்தார். எனது நடிப்பைப் பதிவுசெய்ய கேமரா தயாரானது. ‘லைட்ஸ் ஆன்’ என்று அவர் சொன்னதுமே செட்டிலிருந்த அத்தனை விளக்குகளும் என் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சின. எதிரில் இருப்பவர்கள் யாரும் தெரியவில்லை. ‘ஆக்ஷன்’ என்று இயக்குநரின் குரல் கேட்டது. அவ்வளவுதான் மூன்று நாள் பயிற்சி எடுத்த வசனம் மறந்துவிட்டது. அந்த நினைவு என்றைக்கும் மறக்காது.
கோவை மாவட்டம் என்றாலே பஞ்சு மில்லில் வேலைக்குச் சேர்ந்துவிடுவதைக் கவுரமாகக் கருதிய ஒரு காலகட்டத்தில், நீங்கள் சென்னைக்கு வந்து ஓவியக் கல்லூரியில் சேரவேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?
வானம் பார்த்த பூமி எங்கள் ஊர். ஐப்பசியை விட்டால் மழை கிடையாது. கோவையில் 1932-ல் 52 பஞ்சு மில்கள் இருந்தன. பஞ்சு மில் என்றால் நிழலில் வேலை செய்யலாம், மாதம் பிறந்தால் சம்பளம் என்று அந்த வேலையைப் பலரும் விரும்பியது உண்மைதான். எனக்கு அதில் ஆர்வமில்லாமல் போனதற்குக் காரணம் நண்பர் குமாரசாமி.
எனது கிராமத்தில் காமராஜர் தொடங்கிய ஓராசிரியர் பள்ளிக்கு ஆசிரியராக வந்த அவர், எனது ஓவியங்களைப் பார்த்துவிட்டு “உனக்கு ஓவியம் கைவந்த கலையாக இருக்கிறது. இதன் அடிப்படைகளைப் படிக்காமலேயே அனாடமியைக் கச்சிதமாக வரைந்திருக்கிறாய். சென்னையில் இருக்கும் ஓவியப் பள்ளி பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதைத் தேடிப்பிடித்து சேர்ந்து படி. மிகப் பெரிய ஓவியனாக வருவாய்” என்றார். அப்படித்தான் தன்னந்தனியாக 15 வயதில் சென்னைக்கு ஓவியப் பள்ளியைத் தேடி வந்தேன்.
உங்களது ஓவியங்களைப் பார்க்கிறபோது உள்ளதை உள்ளபடி வரையும் யதார்த்த பாணி என்று புரிந்துகொள்ள முடிகிறது. இந்த வகையைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
எந்தக் கலையாக இருந்தாலும், அது மக்களுக்குப் புரியவேண்டும். புரியாத கலை வளராது என்று நம்புகிறவன் நான். ஓவியக் கல்லூரியில் நான் படித்தபோது, எனது ஓவிய ஆசிரியர்களில் ஒருவரான சந்தானகிருஷ்ணன் என்னிடம் “ காந்தியைக் கோடுகளில் நீ வெளிப்படுத்தியிருப்பதுபோல் உலகில் வேறு எந்த ஓவியனும் செய்துவிட முடியாது. உனது அடுத்த நகர்வு மார்டன் ஆர்ட்டாக இருக்க வேண்டும். வந்துவிடு” என்றார்.
அரூபமான ஓவியங்களை வரைவதில் எனக்கு உடன்பாடு இல்லாததால், அதை நான் ஏற்கவில்லை. நான் தேர்ந்துகொண்ட வகைமையில் என்னுடைய ஓவிய வாழ்க்கையின் முதல் 8 ஆண்டுகளில் வரைந்த ஓவியங்களை பல புகழ்பெற்ற ஓவியர்கள் பாராட்டியிருக்கிறார்கள். என் இளமையில் வெளிப்பட்ட படைப்பாற்றலின் மொத்தக் கலைவண்ணமும் அந்த ஓவியங்களில் இருப்பதாக நானும் நம்புகிறேன்.
சிவகுமாரின் ஓவியங்களில் சில...
திரையில் நீங்கள் பிரபலமாகி வந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஜோடியாக நடித்த கதாநாயகிகளைப் பார்த்து ஆசைப்பட்டதில்லையா? உங்களிடம் காதலைத் தெரிவித்த கதாநாயகி உண்டல்லவா?
நானும் மனிதன்தானே. 87 கதாநாயகிளோடு நடித்திருக்கிறேன். ஒரு கதாநாயகியுடன் தொடர்ந்து 16 படங்கள் நடித்திருக்கிறேன். ‘சித்தி’ தொடருக்காக ராதிகாவுடன் ஐந்து ஆண்டுகள் நடித்திருக்கிறேன். 15 கதாநாயகிகளுக்கு என் மேல் விருப்பம் இருந்தது. எனக்கு 5 கதாநாயகிகள் மீது ஈர்ப்பு இருந்தது.
இந்த ஈர்ப்பைத்தான், இப்போது கெமிஸ்ட்ரி என்கிறார்கள். ஆனால் ஓவியக் கல்லூரியில் படிக்கும்போதே நாம் எதற்காக இங்கே வந்தோம் என்ற தெளிவு என்னிடம் இருந்து. ஒரு விதவைத் தாயின் பையன். தாயின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு எப்போதும் எனக்குள் ஒலித்துக்கொண்டிருந்ததால், ஆசாபாச உணர்வுகள் மனதில் எட்டிப்பார்த்தாலுமேகூட படப்பிடிப்புத் தளத்தோடு அவற்றை மறந்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். உங்கள் வாழ்க்கைத் துணை பற்றிக் கூறுங்கள்?
புகழ், பெருமை, ஆடம்பரம் என எதையும் விரும்பாத எளிய பெண்மணி. என்னைப் புரிந்துகொள்வதற்கே அவருக்கு நீண்டகாலம் பிடித்தது. கிராமத்தில் பிறந்து வளர்ந்து பட்டப்படிப்புப் படித்திருந்தாலும் என்னைப் போன்று எல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களை அனுசரித்துப்போவது மிகக் கடினம். அந்த வகையில் என் மனைவியை மாபெரும் மனுஷி என்று சொல்வேன். என் பிள்ளைகள் எழுந்து நிற்பதற்கு அவரே காரணமாக இருந்தவர். அவரைப் போன்ற பெண்கள்தான் இன்று 75 விழுக்காடு தமிழ்க் குடும்பங்களில் அம்மாக்களாக இருக்கிறார்கள். இவர்களைப் போன்ற பெண்கள் எனக்கு மட்டுமல்ல; தமிழகத்துக்கே வரம்.
இதுநாள்வரை பாராட்டு விழாக்களை மறுத்து வந்திருக்கிறீர்கள். இப்போது 75-வது பிறந்தநாளைக் கொண்டாட ஏன் ஒப்புக்கொண்டீர்கள்?
கொண்டாட்டத்துக்கு நான் அனுமதிக்கவில்லை. ஒரு மாதத்துக்கு முன் சூர்யாவும் கார்த்தியும் வந்து, “ 50, 60, 70 என்று எல்லா முக்கியப் பிறந்தநாள்களையும் கொண்டாட நீங்கள் அனுமதிக்கவில்லை. இந்தமுறை உங்களது 75-வது பிறந்த நாளுக்குச் சில விஷயங்களை நாங்கள் செய்யப்போகிறோம். அதை நீங்கள் தடுக்கக் கூடாது” என்றார்கள். என்ன செய்யப்போகிறீர்கள், எந்தக் கொண்டாட்டத்துக்கும் நான் அனுமதிக்க முடியாது என்றேன்.
“உங்களது படைப்புகளையாவது கொண்டாட இந்தப் பிறந்தநாளில் அனுமதி கொடுங்கள். அவை வரும் தலைமுறைக்கு ஆவணம்போல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்கள். அவர்கள் இப்படிச் சொன்னதும் என்னால் குறுக்கே எதுவும் பேசமுடியவில்லை. இந்த நிகழ்வுகளில் பாராட்டுக்கோ பொன்னாடைக்கோ இடம் கிடையாது.
அதில் ஒரு நிகழ்வாக லலித் கலா அகாடமியில் எனது படைப்புகளின் கண்காட்சி தொடங்கவிருக்கிறது. அதில் நான் வரைந்த ஓவியங்களில் 1,500 பென்சில் ஸ்கெட்ச்கள், ஓவியக் கல்லூரியில் படிக்கும்போது வரைந்தவை, ஒவ்வொரு ஊராகச் சென்று வரைந்த இயற்கை நிலக்காட்சிகள், கட்டிடங்கள், கோயில்கள் என வைக்க இருக்கிறார்கள். இவற்றிலிருந்து 140 ஓவியங்களைத் தேர்வுசெய்து, ஒரு காபி டேபிள் ஓவியப் புத்தகமும் வெளியிடுகிறார்கள்.
அடுத்து நான் நடித்த படங்களிலிருந்து புகைப்படங்களைச் சேகரித்து ஒரு ஆல்பமாக வெளியிடப்போகிறோம் என்றார்கள். எனது காலகாட்டதில் சிவாஜியும் கமலும்தான் மிகச் சிறந்த சாதனையாளர்கள். சினிமாவில் நான் தனியாக என்ன செயற்கரிய செயல் செய்துவிட்டேன் என்று கூறி மறுத்தேன். ஆனால் எஸ். எஸ். வாசன், திருலோகசந்தர், ஏ.பி.என், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கே. பாலச்சந்தர் என்று மிகப்பெரிய ஜாம்பவான்களின் தேர்வாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள். அவையெல்லாம் எங்களுக்கும் சினிமா வரலாற்றுக்கும் முக்கியம். நீங்கள் சினிமாவில் இருந்ததால்தானே நாங்கள் சாத்தியமானோம். அதனால் ஆல்பம் வெளியிட்டே தீருவோம்” என்று என் வாயை அடைத்துவிட்டார்கள்.
நான் நடித்திருக்கும் 192 படங்களில் நூறு படங்களிலிருந்து ஒரு படத்துக்கு ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் படத்தின் என்னுடைய பின்னணி நினைவுக் குறிப்புகளுடன் கூடிய ஆல்பமாக வெளியிடுகிறார்கள். இவற்றோடு இதுவரை மேடை நிகழ்ச்சியாக நான் பேசியிருக்கும் 15 உரைகளில் சிறந்த பேச்சாக 10-யைத் தேர்ந்தெடுத்து இந்த நிகழ்வுக்கு வரும் அனைவருக்கும் டிவிடி நினைவுப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்துவருகிறார்கள்.
இந்த 75 ஆண்டுகள் நிறைவில் உங்களுக்கு முழுமையான மனநிறைவு தந்த விஷயம் எது?
74-வயதின் கடைசி நாள் அன்று நடந்த நிகழ்வு முழுமையான மனநிறைவைத் தந்தது என்று சொல்வேன். நான்கரை ஆண்டுகள் மகாபாரதத்தை ஆராய்ச்சி செய்து, எவ்வித ரெஃபரென்ஸும் இல்லாமல் 6,500 பேர் முன்னிலையில், 200 பாடல்களை குறிப்பிட்டுக்காட்டி, ஒரு சொட்டுத் தண்ணீர் குடிக்காமல் எனது மொழியில் பேசிய மேடை நிகழ்ச்சிதான் மிக முக்கியமானது. மனித வாழ்க்கையில் மிகச் சிறந்த கணங்கள் சில வந்துபோகும். அப்படிப்பட்ட கணத்தை அந்த மேடையில் நிகழ்ச்சியில் நான் உணர்ந்தேன்.
முழுமையான வீடியோ பேட்டியை விரைவில் தி இந்து தமிழ் இணையத்தில் காணலாம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT